ACJU/NGS/09-17/002

21.09.2017/ 29.12.1438

சமயோசிதமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்வோம்

புனித இஸ்லாம் இன, மத பேதமின்றி அனைத்து உயிர்களையும் சமமாக  மதிக்கின்றது. எந்தவோர் உயிரும் அநியாயமாகக் கொலை செய்யப்பட அது அனுமதிப்பதில்லை. இஸ்லாம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. ஒருவரை அநியாயமாகக் கொலை செய்வது முழு மனித சமூகத்தையும் கொலை செய்த குற்றத்துக்கு சமம் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

ரோஹிங்ய முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அநியாயமாக அவர்கள் கொன்றுகுவிக் கப்படுவதை முழு உலகமும் கண்டிக்கின்றது. நமது நாட்டு மக்கள் பொதுவாகவும் முஸ்லிம்கள் குறிப்பாகவும் தமது கண்டனங்களைத் வெளியிட்டு வருகின்றனர்.

அல்லாஹுதஆலாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட  முஸ்லிம்களாகிய நாம் சோதனைகள், கஷ்டங்கள் வருகின்றபோது நமது பாவங்களிலிருந்து தௌபா செய்து மீளுதல், அவன் பக்கம் நெருங்குதல், அதிகதிகம் துஆ செய்தல் ஆகிய ஆன்மீக முயற்சிகளில் ஈடுபடுவதுடன் எம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதிலும் அவர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச அழுத்தங்களை உருவாக்குவதிலும் முன்னிற்க வேண்டும். இதுவல்லாமல் பெரும்பான்மையாக பௌத்த மக்கள் வாழ்ந்து வரும் நமது நாட்டில் அவர்களது பகையைச் சம்பாதித்துக் கொள்ளும் வண்ணம் செயற்படுவது ஆரோக்கியமாகாது என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் சுட்டிக் காட்ட விரும்புகின்றது.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் விடயமாக ஆரம்ப கட்டத்திலேயே அந்நாட்டுத் தூதுவராலயம், ஐ.நா சபை இலங்கை ஜனாதிபதி முதலிய சகல தரப்பினருக்கும் கண்டனக் கடிதங்களை அனுப்பி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜம்இய்யா வேண்டிக் கொண்டது.

ஏதாவதொரு விடயத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்ற ஷரீஆவின் வழிகாட்டலையும் ஜம்இய்யா வெளியிட்டுள்ளது. அது இத்துடன் இணைக்கப்படுகின்றது.

எனினும் தற்போதைய சூழலில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வீண் வம்புகளை விலைக்கு வாங்கும் செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்திருக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.

எனவே குறித்த பிரச்சினையில் மிகவும் நிதானமாகவும், நாட்டு நிலமைகளைக் கவனத்திற் கொண்டும் நடந்து கொள்ளுமாறு தனது மாவட்ட பிரதேசக் கிளைகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள், இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

 

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.அஹ்மத் முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

ஹர்த்தால், ஆர்ப்பாட்டம் பற்றிய இஸ்லாமிய வழிகாட்டல்

http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/826-2016-08-08-07-48-04

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு 

கடந்த 20.11.2016 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டின் தற்பொழுதுள்ள நிலமை தொடர்பில் முஸ்லிம் அமைப்புகளுடனான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அன்றைய சந்திப்பில் பல அமைப்புக்கள் கலந்துகொண்டு முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் பல்வேறு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. அதன் முதற்கட்டமாக 21.11.2016 ஆம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

அன்றைய தீர்மானத்துக்கமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்றைய தினம் (21.11.2016) இரவு 08:00 மணியவில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. ஜம்இய்யாவின் கௌரவப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் அவர்கள் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை ஆரம்பித்துவைத்தர்கள். அதனை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ எம். றிஸ்வி அவர்கள் கூட்டத்தின் நோக்கம் பற்றி தெளிவு படுத்தினார்கள்.

தற்போது நாட்டில் காணப்படும் அசாதாரண நிலையை சீராக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முனைப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அனைத்து முஸ்லிம்களும் பாவங்களிலிருந்து தௌபா செய்து அல்லாஹுதஆலாவின் பக்கம் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதுடன் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான விடயங்களையும் தெளிவு படுத்தினார்.

மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் கூட்டத்தில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன் தற்போது எழுந்துள்ள ISIS சர்ச்சை தொடர்பான விடயங்களை அணுகும் முறை பற்றியும் இனவாதத்திற்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் முன்னெடுத்துச் செல்லப்படாமல் தேங்கி நிற்பது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும் 22.11.2016 ஆம் திகதி (இன்று) மேற்குறிப்பிட்ட விடயங்களை அமைச்சரவையில் கலந்துரையாடுவதாக அமைச்சரவை உறுப்பினர்கள் உறுதியளித்தனர். அத்துடன் 23.11.2016 ஆம் திகதி நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அவர்களை சந்தித்து இந்நாட்டு முஸ்லிம்களின் உண்மையான நிலை பற்றியும் ஏலவே முஸ்லிம் அமைப்புகள் 23.07.2015 வெளியிட்ட ISIS க்கு எதிரான பிரகடனம் பற்றியும் தெளிவுபடுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலையை தணிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அத்துடன் முஸ்லிம் தனியார் சட்ட விடயத்திலும் ISIS தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் முனைப்புடன் செயற்படுவதாகவும் உறுதியளித்தனர்.