ACJU/NGS/2021/044

2021.04.06 (1442.08.23)


இஸ்லாத்தில் எந்தவொரு வணக்க வழிபாடையும், செயற்பாடையும் நோக்கினால் இதில் மனிதனின் உயிருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
நோன்பைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது, 'நோன்பு நோற்று ஆரோக்கியம் பெறுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


ரமழானில் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியம் தொடர்பான வழிகாட்டல்கள்:


1. எமது இப்தார் மற்றும் ஸஹ்ர் உடைய நேரங்களில் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றல்.

2. கொவிட் 19 வைரஸ் தாக்கம் தொடர்ந்தும் இருப்பதனால் இந்த ரமழான் மாதத்தில் கூட்டு அமல்களில் ஈடுபடும்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டல்களையும் பின்பற்றுதல்.

3. ரமழான் காலத்தில் ஆரோக்கியமான தூக்க பழக்கவழக்கங்களை பின்பற்றல்.

4. எமது வீட்டிலுள்ள சிறார்களும் எம்முடன் இணைந்து நோன்பு நோற்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பர். எனவே, அவர்கள் நோன்பு நோற்கும் விடயத்தில் அவர்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளல்.

5. கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் ஆகியோர் நோன்பு நோற்பதில் சில சலுகைகள் இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ளது. அவைகளை பின்வரும் இணையதள இணைப்பினூடாக பார்வை இடலாம்.

https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/758-2016-08-04-09-11-28

6. நேன்பு நோற்க சக்தியற்ற வயோதிபர்களுக்கும் நிரந்தர நோயாளிகளுக்கும் நோன்பு நோற்காமல் இருப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றது. அதேநேரம் அந்த ஒவ்வொரு நோன்புக்காகவும் அவர்கள் ஒரு مُد (முத்து) அரிசியை ஃபித்யாவாக கொடுக்க வேண்டும். ஒரு مُد (முத்து) என்பது 600 கிராம் ஆகும்.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா இந்த ரமழான் மாத நோன்பை ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் நோற்பதற்கு அருள் புரிவதோடு, நமது நாட்டையும் உலக மக்களையும் கொடிய நோய்களிலிருந்து பாதுகாத்தருள்வானாக.


வஸ்ஸலாம்.

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

குறிப்பு: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் தத்தம் பிரதேசத்தில் காணப்படும் மஸ்ஜித்களில் மேற்படி வழிகாட்டல்களை எதிர்வரக்கூடிய ஜும்ஆ தினத்தில் பொது மக்களுக்கு வாசித்துக் காட்டுவதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் நிர்வாகிகள் மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ACJU/NGS/2021/044

2021.04.06 (1442.08.23)


ரமழான் மாதம் ஒரு மனிதன் தன்னுடைய இச்சைகளையும், ஆசைகளையும் அடக்கி பிறரது உணர்வுகளை மதிக்கும் பயிற்சியை மனிதனுக்கு வழங்கும் மாதமாகும். இக்காலப் பகுதியில் நாம் சமூகம் சார் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, இக்காலப்பகுதியில் மனிதர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் விடயங்களை மேற்கொள்வதுடன் எம்மால் யாருக்கும் தீங்கு நிகழாத வண்ணம் எமது தனிப்பட்ட விடயங்களையும், குடும்ப விடயங்களையும், சமூக விடயங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.


ரமழானில் கடைபிடிக்க வேண்டிய சமூக வழிகாட்டல்கள்:


01. றமழான் மாதம் தான, தர்மங்கள் அதிகமாக வழங்கும் மாதமாக இருப்பதனால் ஏழைகள் மற்றும் அயலவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிகம் கவனம் செலுத்துதல்.

02. எமது வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை அயலிலுள்ள முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதோர் அனைவருக்கும் கொடுத்தல் போன்ற நற்பணிகளில் ஈடுபடுதல்.

03. வீடுகளில் இரவு நேர வணக்க வழிபாடுகளில் ஈடுபடும்போது, குறிப்பாக ஸஹர் நேரத்தில் பிறருக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதுடன், வானொலி மற்றும் தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைத்து வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு மாத்திரம் கேட்கும்படி வைத்துக் கொள்ளல்.

04. மஸ்ஜித்களில் அமல்களை ஏற்பாடு செய்யும் போது கண்டிப்பாக மஸ்ஜிதுக்குச் சூழ இருக்கும் மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்ளல்.

05. மஸ்ஜிதுக்கு வாகனங்களில் வருபவர்கள் அதனை நிறுத்தும் போது பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு இடைஞ்சல் இல்லாதவாறு நடந்து கொள்ளல்.

06. மஸ்ஜித்களில் இபாதத்கள் மற்றும் கஞ்சி, உலர் உணவு பொதிகள் வினியோகித்தல் போன்ற சமூகம் சார் விடயங்களை ஏற்பாடு செய்யும் போது சுகாதார வழிகாட்டல்களைப் பேணுவதுடன், இது குறித்து வக்ப் சபையினால் வழங்கப்படும் வழிகாட்டல்களையும் அறிவித்தல்களையும் மஸ்ஜித் நிர்வாகத்தினர் அலட்சியம் செய்யாது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் குறித்த பிரதேச பொதுச் சுகாதார அதிகாரியின் அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இது விடயத்தில் மஹல்லாவாசிகள் பொறுப்பாக நடந்து கொள்வதுடன் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு தங்களது ஒத்துழைப்பையும் வழங்குதல்.

07. இக்காலப்பகுதியில் இரவு நேரங்களில் சில வாலிபர்கள் வீணாக விழித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே, அவர்களுக்கு வழிகாட்டுவதில் உலமாக்கள், பிரதேச மக்கள் என அனைவரும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், அவர்களது கால நேரம் அல்லாஹ்வுக்கு விருப்பமான முறையில் அமைவதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுதல்.

08. கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் சர்ச்சைப்பட்டுக் கொள்ளாது உலமாக்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப நிதானமாக நடந்து கொள்ளல்.

 இது விடயம் குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒற்றுமைப் பிரகடனத்தை தவறாமல் அனைவரும் வாசிப்பதுடன் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளல்.

 ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட 'சமூக ஒற்றுமை: காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை' எனும் நூலை வாசித்து பயன்பெறல்.

09. மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அனைவரும் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளல்.


இந்த ரமழானை இந்நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் அருளான ரமழானாக ஆக்கிக் கொள்வோமாக.
வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/NGS/2021/044

2021.04.06 (1442.08.23)


நாம் ஷஃபான் மாதத்தின் இறுதிப் பகுதியை அடைந்திருக்கின்றோம். இது அருள்மிகு ரமழான் மாதத்திற்குத் தயாராகும் காலப் பகுதியாகும்.


ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹுதஆலா சங்கையான அல்குர்ஆனை இறக்கி வைத்தான். இம்மாதம் ஒவ்வொரு அடியானும் அல்லாஹ்வுடனான நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக அருளப்பட்டதாகும். இது துஆவினதும் பொறுமையினதும் சதகாவினதும் மாதமாகும்.


ரமழானில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக வழிகாட்டல்கள்:


1. ரமழான் மாதத்தின் அனைத்து நோன்புகளையும் பேணுதலுடன் நோற்றல்.

2. பர்ளான, சுன்னத்தான இபாதத்களில் அதிகளவு கவனம் செலுத்தல். குறிப்பாக, சமூக வலைத்தளங்களிலும் வேறு அனாவசியமான விடயங்களிலும் நேரத்தை வீணடிப்பதை முற்றாக தவிர்த்தல்.

3. இரவு நேர வணக்கங்களிலும் முடியுமான அளவு ஈடுபடுதல். அதன் மூலம் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்த்துக் கொள்ளல்.

4. அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட ரமழான் மாதத்தில் அல்குர்ஆனுடனான இறுக்கமான தொடர்பை அதிகரித்தல் வேண்டும். மேலும் அதனை அதிகம் ஓதுவதுடன் அதன் போதனைகளை எமது வாழ்வில் எடுத்து நடப்பதும், பிறருக்கு அதன்படி வாழ வழிகாட்டுவதும் அல்குர்ஆன் மீதான எமது கடமைகள் ஆகும். ஓவ்வொரு தனி நபரும் அதிகமதிகம் அல்குர்ஆனை ஓதி வருவதுடன் குறைந்தபட்சம் நாளாந்தம் ஒரு 'ஜுஸ்உ'வையாவது ஓத முயற்சித்தல்.

5. தன்னைத் தான் சுயவிசாரணை செய்வதற்குரிய சந்தர்ப்பமாக இந்த ரமழானை ஆக்கிக் கொள்ளுதல்.

6. ரமழானின் இறுதி 10 தினங்களில் இஃதிகாப் எனும் அமல் முக்கியத்துவம் பெறுகின்றது. மஸ்ஜித் நிர்வாகிகள் இந்த அமலை ஊர் மக்கள் நிவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யும் போது பொது சுகாதார அதிகாரிகளின் அனுமதியையும் பெற்றுக் கொள்ளல்.

7. துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்ற மகத்தான இம்மாதத்தில் உலகளவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிமிக்க சூழல் நீங்கி முழு நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பவும், அவர்கள் ஆரோக்கியத்துடனும், சுகாதாரத்துடனும், சுபீட்சமாக வாழவும், எமது தேவைகள் நிறைவேறவும் பிரார்த்தித்தல். நோன்பு திறக்கும் நேரம், ஸஹர் நேரம், அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரங்களை அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளல்.


இவ்வான்மீக வழிகாட்டல்களைப் பின்பற்றி இப்புனித ரமழானை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வோமாக!


எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நம்மனைவருக்கும் ரமழான் மாதத்தை அடைந்து அவனது றஹ்மத்தையும், மஃபிரத்தையும், நரக விடுதலை என்ற பாக்கியத்தையும் பெற்ற கூட்டத்தில் எம்மனைவரையும் ஆக்கியருள்வானாக.

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

குறிப்பு: நோன்பு, ஸகாத் மற்றும் ஸகாத்துல் ஃபித்ர் போன்ற விடயங்கள் தொடர்பான மார்க்கத் தெளிவுகளை பெற விரும்புபவர்கள் ஜம்இய்யாவின் ஃபத்வாப் பிரிவின் 0117-490420 என்ற துரித இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

 

ACJU/NGS/2020/003

17.04.2020 (23.08.1441)

 

அசாதாரண சூழலில் ரமழான் கால வழிகாட்டல்கள்

அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி அருளியதன் மூலம் புனித ரமழான் மாதத்தை சங்கைப்படுத்தியுள்ளான். ரமழான் துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டல்களோடும் அதிகமதிகம் நல்லமல்களில் ஈடுபடும் மாதமுமாகும்.

கடந்த காலங்களை விட மிகவும் வித்தியாசமானதொரு சூழ்நிலையில் நாம் இப்புனித ரமழான் மாதத்தை சந்திக்கவுள்ளோம். தற்போது உலகளாவிய ரீதியில் பரவிவரும் COVID 19 வைரஸின் தாக்கத்தினால் பெரும்பாலான நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. எமது நாட்டு அரசாங்கமும் இதன் பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் குறிப்பாக, மக்கள் ஒன்றுகூடுவதனை முற்றாக தடுத்து ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளதையும் நீங்கள் அறிவீர்கள்.

எனவே, முஸ்லிம்களாகிய நாம் நாட்டு சட்டத்தை மதிப்பவர்கள் என்ற வகையில் ரமழான் காலத்தில் மேற்கொள்ளும் நல்லமல்களை பின்வரும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மேற்கொள்ளுமாறு அனைத்து முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகவும் வினயமாக வேண்டிக் கொள்கிறது.

ரமழானில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்குகளும் வழிகாட்டல்களும்:

 1. துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்ற மகத்தான இம்மாதத்தில் தற்போது உலகளவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிமிக்க சூழல் நீங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பவும் எமது தேவைகள் நிறைவேறவும்; நாட்டு மக்கள் சுபிட்சமா வாழவும் பிரார்த்தித்தல். நோன்பு திறக்கும் நேரம், ஸஹர் நேரம், அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரங்களை அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளல்.
 2. அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட ரமழான் மாதத்தில் அல்குர்ஆனுடனான இறுக்கமான தொடர்பை அதிகரித்தல் வேண்டும். மேலும் அதனை அதிகம் ஓதுவதுடன் அதன் போதனைகளை தமது வாழ்வில் எடுத்து நடப்பதும், பிறருக்கு அதன்படி வாழ வழிகாட்டுவதும் அல்குர்ஆன் மீதான எமது கடமைகள் ஆகும்.
 • மக்தப் மற்றும் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கு நாளாந்தம் குர்ஆன் ஓதுவது தொடர்பான வழிகாட்டல் ஒன்று மக்தப் தலைமையகத்தால் வெளியிடப்பட்டவுள்ளது. அதற்கமைவாக பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு வழிகாட்டி ஆர்வமூட்டுவதுடன் அதனை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம்.
 • இமாம்கள், மத்ரஸா உஸ்தாத்மார்கள், மக்தப் முஅல்லிம்கள், முஅல்லிமாக்கள், முஆவின்கள் என அனைவரும் இக்காலத்தை உச்சளவில் பயன்படுத்தவும். முடியுமானவர்கள் சமூக வலைத்தளங்களை முறையாக பாவித்து மக்களுக்கு அல்குர்அனை ஓதுதல், கற்றல், கற்பித்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வது காலத்தின் தேவையாகும்.
 • ஓவ்வொரு தனி நபரும் அதிகமதிகம் அல்குர்ஆனை ஓதி வருவதுடன் குறைந்தபட்சம் நாளாந்தம் ஒரு ஜுஸ்உவையாவது ஓத முயற்சித்தல்.
 1. தற்கால சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஐங்காலத் தொழுகைகள் மற்றும் தராவீஹ் போன்ற ஏனைய தொழுகைகளை தத்தமது வீடுகளில் தமது வீட்டாரை மாத்திரம் இணைத்துக் கொண்டு ஜமாஅத்தாக தொழ ஏற்பாடு செய்தல். அயலவர்கள், அக்கம் பக்கத்தவர்களோடு சேர்ந்து கூட்டாக தொழுவதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ளல்.
 2. ஒவ்வெரு வீட்டிலும் அன்றாட வணக்க வழிபாடுகள், நல்லமல்கள், ஏனைய வேலைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் நேர அட்டவணை ஒன்றைத் தயாரித்து குடுப்பத்தினர் அனைவரும் அதன்படி செயற்பட ஒழுங்குகள் செய்தல்.
 3. ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதற்கமைவாக ஐங்கால தொழுகைகளுக்காகவே, ஜுமுஆ மற்றும் ஏனைய வணக்கங்களுக்காவே மறுஅறிவத்தல் வரை மஸ்ஜித்களில் மக்கள் ஒன்றுகூடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளல். இது குறித்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்ப் சபையினால் வழங்கப்படும் வழிகாட்டல் மற்றும் அறிவித்தல்களை மஸ்ஜித் நிர்வாகத்தினர் அலட்சியம் செய்யாது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
 4. ஜம்இய்யதுல் உலமா, பொலிஸ் தலைமையகம் மற்றும் ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து ஏலவே வெளியிட்டிருக்கும் வழிகாட்டல்களுக்கமைவாக நடந்து கொள்ளுமாறு வினயமாக வேண்டுகிறோம்.
 5. இபாதத்களில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் வீட்டில் இருந்தவாறே இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுதல். அதன் மூலம் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்த்துக் கொள்ளல். குறிப்பாக, சமூக வலைத்தளங்களிலும் வேறு அநாவசியமான விடயங்களிலும் நேரத்தை வீணடிப்பதை முற்றாக தவிர்த்தல்.
 6. கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் சர்ச்சைப்பட்டுக் கொள்ளாது உலமாக்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப நிதானமாக நடந்து கொள்ளல்.
 • இது விடயம் குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒற்றுமைப் பிரகடனத்தை தவறாமல் அனைவரும் வாசிப்பதுடன் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளல்.
 • ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட “சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை” எனும் நூலை வாசித்து பயன் பெறல்.
 1. அன்றாடம் உழைத்து உண்ணக்கூடிய மக்கள் அத்தியவசிய தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருப்பதனால் மஸ்ஜித்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தல்.
 • மனிதநேயமிக்க மக்களாகிய நாம் இன, மத வரையறைகளுக்கு அப்பால் தேவையுடையோரை இனங்கண்டு அவர்களுக்கு எமது ஸதகாக்கள், ஹதியாக்களை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
 • ஸகாத் வழங்க தகுதியானவர்கள் அதன் முறைகளை ஆலிம்களுடன் தொடர்பு கொண்டு உரிய முறையில் நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்தல்.
 1. நிவாரணப் பணிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் தமது பிரதேச பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு பூரண அனுமதியுடன் அதனை மேற்கொள்ளல்.
 2. தமது வீடுகளில் இரவு நேர வணக்கவழிபாடுகளில் ஈடுபடும்போதும் குறிப்பாக ஸஹர் நேரத்திலும் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்வதுடன், வானொலி மற்றும் தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைத்து வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு மாத்திரம் கேட்கும்படி வைத்துக் கொள்ளல்.
 3. வாலிபர்களுக்கு வழிகாட்டுவதில் உலமாக்கள், பிரதேச மக்கள் என அனைவரும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், அவர்களது கால நேரம் அல்லாஹ்வுக்கு விருப்பமான முறையில் அமைவதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் அவசியம்.
 4. ஒரு நோன்பாளி சாதாரன எச்சிலை விழுங்குவது நோன்பை முறிக்காது என்பதே மார்க்கத்தின் வழிகாட்டலாகும். என்றாலும் வழமைக்கு மாற்றமான நெஞ்சுசளி, சளிகட்டி  பேன்றவைகளை உமிழவேண்டியுள்ளது. இதன் போது கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக உரிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே பொது இடங்களில்; உமிழ்வதை தவிர்த்துக் கொள்வதுடன், சுகாதார ஒழுங்குமுறைகளை கடைப்பிடிப்பதில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.  
 5. மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கிளைகளும் மஸ்ஜித் நிர்வாகங்களும் முஸ்லிம் சமூகமும் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு வேண்டுகின்றோம்.

 

எனவே, இவ்வழிகாட்டல்களைப் பின்பற்றி இப்புனித ரமழானை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வோமாக! எல்லாம் வல்ல அல்லாஹ் முழு உலகையும் பீடித்திருக்கும் இந்த கொரோனா வைரஸின் தீங்கிலிருந்து அனைவரையும் பாதுகாத்து நம் நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு மிளிர்ந்து, மக்கள் புரிந்துணர்வோடு வாழ நல்லருள் பாலிப்பானாக!

வஸ்ஸலாம்.

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா