28.02.2018 (11.06.1439)

முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள், அடாவடித்தனங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது. நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை எப்படியேனும் அடக்கி ஒடுக்கி அவர்களது பொருளாதாரத்தை வீழ்ச்சி காண வைக்கவும் இன ரீதியான பிரச்சினைகளை தோற்றுவிக்கவும் சிலரால் பல முன்னெடுப்புக்கள் எடுக்கப்படுகின்றன. அம்பாறையிலும், கிந்தோட்டையிலும் நடந்தேறிய அடாவடித்தனங்கள் இதை மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.


புனித பள்ளிவாசல்களில்  கை வைக்கும் துணிகரத்தை எவரும் சகிக்க மாட்டார்கள். அடிக்கடி முஸ்லிம்களுக்கெதிராக செய்யப்படும் இந்த அநியாயங்களையிட்டு பொறுப்பு வாய்ந்தவர்கள் ஒன்றும் பேசாதிருப்பது முஸ்லிம்கள் மத்தியில் பல சந்தேகங்கள் எழ காரணமாகியுள்ளது.


கருத்தடை வில்லைகளை முஸ்லிம் உணவுச் சாலைகளில் கலந்து விற்கிறார்கள் என்றும் கருத்தடை மருந்துகளை பெண்களின் உள்ளாடைகளில் தேய்த்து விற்பனை செய்யப்படுகிறது என்றும் அப்பட்டமான பொய்களை பரப்பி அப்பாவி மக்களை துன்புறுத்தும் இவ்வீனச் செயலை பொறுப்பு வாய்ந்தவர்கள் கண்டிக்காமல் இருப்பது வியப்புக்குரியதாகும்.


இந்த நாடு சுதந்திரம் பெற்றது முதல் முஸ்லிம்கள் இந்நாட்டுக்காக பல்வேறு வழிகளிலும் தியாகங்களை செய்துள்ளார்கள். அவற்றை எல்லாம் மறந்து பெரும்பான்மையினரில் சிலர் வன்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க உரியவர்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமும் காவல்துறையும் செயல்படாதிருக்கும் ஒரு துரதிஷ்ட நிலையே இன்று காணப்படுகிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் இன ஐக்கியத்தையும், சமூக ஒற்றுமையையும் நாட்டில் மலரச் செய்வானாக.

அஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2018.02.28  (1439.06.11)

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் குழந்தைகள் என்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சிரியா நாட்டு அரசாங்கம் ரஷ்யா போன்ற தனது நேச நாடுகளின் உதவிகளுடன் இக்கூட்டுப் படுகொலையை தொடர்ந்தேர்ச்சையாக செய்து வருகின்றது.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இக்கூட்டுப் படுகொலையை வன்மையாக கண்டிப்பதோடு, உலக நாடுகள் பொதுவாகவும், முஸ்லிம் நாடுகள் குறிப்பாகவும் இந்த அநியாயங்களை தடுத்து, அம்மக்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த தம்மால் முடியுமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.


இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் பலவீனர்களுக்கும் உதவுவது மிகவும் வலியுறுத்தப்பட்ட விடயமாகும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் அனியாயம் இழைக்கப்பட்ட இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.


இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் ஜும்மா பிரசங்கங்களை அமைத்துக் கொள்ளும்படியும் சிரியா மக்களுக்கு விஷேட துஆ பிராத்தனையில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து கதீப்மார்களையும் வேண்டிக் கொள்கிறது. அதே நேரம் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் சிராயா நாட்டில் வாழும் எமது சகோதரர்களின் விமோசனத்திற்காக துஆ பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறது.


அல்லாஹுத்தஆலா சிரியாவில் அனியாயக்காரர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து எமது சகோதரர்களின் கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கு விமோசனத்தையும், பாதுகாப்பையும் தந்தருள்வானாக.
வஸ்ஸலாம்.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
செயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் மற்றும் மூதூர் கிளைகளின் ஏற்பாட்டில் அப்பகுதிக்கு புதிதாக கடமையில் இணைந்த இராணுவ தளபதியுடனான  சந்திப்பு ஒன்று 2018.02.19 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில்  ஊரின் பல  விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை கிளை பதுளை பிரதேசத்தில் இருக்கின்ற ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் கல்வி மாநாடு ஒன்று 2018.02.18 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வு பின்வருமாறு நான்கு பகுதிகளாக இடம் பெற்றது.

  • மாணவர்களுக்கான கல்விசார் ஊக்குவிப்பு நிகழ்ச்சி மற்றும் ஆன்மீக ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன இந்நிகழ்வில் சுமார் 350 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
  • மாணவிகளுக்கான கல்விசார் ஊக்குவிப்பு நிகழ்ச்சி மற்றும் ஆன்மீக ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன இந்நிகழ்வில் சுமார் 450 மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.
  • ஆசிரியர்களுக்கான கற்பித்தல் எனும் அமானிதம் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 120 ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
  • மாணவர்களின் கல்வியில் பெற்றோர்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் பெற்றோர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 850 பெற்றோர் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்குக் கிளையின் ஏற்பாட்டில் அப்பகுதியில் உள்ள 08 க்கும் மேற்பட்ட முஸ்லிம் வாலிப குழுக்களுடன் விஷேட சந்திப்பொன்றை  18/02/2018 ஆம் திகதி இரவு மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து மீதோடமுல்லை அல் அமான் ஜுமுஆப் பள்ளிவாயலில் ஏற்பாடு செய்திருந்தது.

இச்சந்திப்பில் வாலிபர்களுக்குத் தேவையான சன்மார்க்கக், கல்வி, ஒழுக்கம், தொழில் சம்பந்தப்பட்ட வழிகாட்டல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

  • ஓவ்வொரு பள்ளிவாயல்களையும் மையப்படுத்தி வாலிப கமிட்டிகளை (Youth Committee) இவ்வருட ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் உருவாக்குதல்.
  • ஓவ்வொரு வாலிப கமிட்டிகளும் அவர்களது பள்ளிவாயல்களை மையப்படுத்தி முழுமையான வாலிபர்களின் தரவுகளை (Database) இவ்வருட ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் சேகரித்தல்.
  • போதைப் பொருட்கள் பாவைனையில் சிக்குன்டுள்ள மற்றும் அதனை விநியோகம் செய்யும் முஸ்லிம் வாலிபர்களுடைய விடயத்தில் விஷேட கவனம் செலுத்தப்படல்.
  • வாலிப கமிட்டிகளின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கு தேவையான முடியுமான ஒத்துழைப்புகளையும் வளவாளர்களையும் கிளை ஜம்இய்யாவின் மூலம் வழங்குதல்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்ட அரபுக்கல்லூரி இறுதி வகுப்பு மாணவர்களுக்கு வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் ஹிக்மா கருத்தரங்கு “மகாஸிதுஷ் ஷரீஆ” எனும் தலைப்பில் 17.02.2018 ஆம் திகதி நடைபெற்றது. இக்கருத்தரங்கின் வளவாளராக அஷ்-ஷைக் ஷராப் அவர்கள் கலந்து கொண்டதோடு 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  அம்பாரை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் 13/02/2018 ஆம் திகதி இடம் பெற்ற நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்திற்கமைவாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும்  மக்தப் திட்டம் அண்மைக் காலமாக கல்முனைப் பிராந்தியத்தில்  சரிவுகண்டு வருவதற்கான காரணங்களைக் கண்டறியும் பொருட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழுவின் முதலாவது அமர்வு 17/02/2018 அன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து கல்முனை பாகியாதுஸ் ஸாலிஹாத் பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ்வமர்வில் குழுவின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் ULS.ஹமீத் ஹாமி , மாவட்ட உதவித் தலைவர் அஷ்ஷெய்க் ILM.ஹாஷிம் மதனி, செயலாளர் அஷ்ஷெய்க் AL.நாஸிர் கனி ஹாமி,பொருளாளர் அஷ்ஷெய்க் ZM.நதீர் ஷர்கி மற்றும் அஷ்ஷெய்க் FMA .அன்ஸார்  மௌலானா நளீமி உள்ளிட்ட வேறு பலரும் கலந்து கொண்டனர்

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளையின் ஏற்பாட்டில் கிண்ணியா தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr.சதீஸ்குமாருடனான சந்திப்பொன்று 17.02.2018 அன்று காலை கிண்ணியா கிளையின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

பிரதேசத்தின் சுத்தம், சுகாதார  மேம்பாடு, வெள்ளிக்கிழமை குத்பா நேரத்தை கருத்திற் கொண்டு நோயாளர் பார்வையிடும் பகல் நேரத்தை மாற்றுதல் மற்றும்  வைத்தியசாலை ஊழியர்களுக்கான தர்பியா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக இதன் போது  கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானங்கள்  எடுக்கப்பட்டதுடன் வைத்திய அத்தியட்சகர் Dr.சதீஸ்குமார் அவர்களுக்கு அல் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புப் பிரதி ஒன்றும் வழங்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளையின் ஏற்பாட்டில் கிண்ணியா,முள்ளிப்பொத்தானை, மூதூர், தோப்பூர், சம்பூர் போன்ற பிரதேசங்களின் பொறுப்பதாரியாக புதிதாக  நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை அதிகாரியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று  14-2-2018 ஆம் திகதி கிண்ணியா கிளையின் காரியாலயத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச நலன் தொடர்பாக பல்வேறு விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

இலங்கை முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வந்த சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்படுகிறது. அன்று தொட்டு இன்று வரை நடைமுறைப் படுத்தப்பட்டுவந்த இந்த சட்டத்தை பேணிப் பாதுகாப்பது முஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

1972 ஆம் ஆண்டு கலாநிதி எச்.எம். இஸட் பாரூக் அவர்களின் தலைமையிலும், 1990 ஆம் ஆண்டு கலாநிதி ஏ.எச்.எம். ஷஹாப்தீன் அவர்களின் தலைமையிலும் நியமிக்கப்பட்ட கமிட்டிகள் குறித்த சட்டத்தில் பாரிய அளவு மாற்றங்கள் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தன. இவர்களது சேவைகளை நாம் பெரிதும் பராட்டுகின்றோம்.

2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொரகொட அவர்களால் முன்னாள் பிரதம நீதியரசர் ஸலீம் மர்சூப் அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு அங்கத்தவர்கள் நீண்ட காலமாக பல சிரமங்களுக்கு மத்தியில் இது விடயமாக செயற்பட்டது பராட்டுக்குரியதாகும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பொறுத்த வரையில் ஷரீஆவிற்கு முரணற்ற வகையில் காலத்தின் தேவைக்கு ஏற்ப கட்டாயமாக மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்து கொண்டு, அன்று தொட்டு இன்று வரை தனது பங்களிப்பை இக்கமிட்டிக்கு வழங்கி வந்தது. அதே நேரம் அல்-குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரணான, பெரும்பான்மையான புகஹாக்களின் கருத்துகளுக்கு மாற்றமான கருத்துக்களும் திருத்தங்களும் கொண்டு வரப்படும்போது ஜம்இய்யா தனக்கு முடியுமானளவு தெளிவுகளை கமிட்டி உறுப்பினர்களுக்கு வழங்கியது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்க விடயமாகும். குறித்த இக்கமிட்டி ஜம்இய்யாவின் பத்வா குழுவையும் பல தடவைகள் சந்தித்தது.

எனினும் கமிட்டியின் சிலர் சில விடயங்களில் ஷரீஆவிற்கு முரணான அல்லது பெரும்பான்மையான புகஹாக்களின் கருத்துக்களுக்கு மாற்றமான கருத்துக்களை முன்வைத்த போது, அதுபற்றி எடுத்துக் காட்டப்பட்டு தெளிவுகள் வழங்கப்பட்ட பின்பும் அக்கருத்துக்களை மாற்றிக் கொள்ள தயாரற்ற நிலையில் இருந்ததால் கமிட்டியில் உள்ள பெரும்பான்மையானோர் ஒன்றிணைந்து தனியான ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் என்ற தகவல் எமக்கு கவலையை தருகின்றது. உண்மையில் ஷரீஆவிற்கு முரணான அல்லது பெரும்பான்மையான புகஹாக்களின் கருத்துக்களுக்கு மாற்றமான அக்கருத்துக்கள், 2008 ஆம் ஆண்டு ஏலவே வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளுக்கு ஒத்ததாக காணப்பட்டமை பலராலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஷரீஆவிற்கு முரணற்ற வகையில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களும், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் யாப்புக் கவுன்ஸில் உறுப்பினர் ஷிப்லி அஸீஸ் அவர்களும், நீதிபதி ஏ.டப்லியு. ஏ. ஸலாம் அவர்களும், நீதிபதி எம். மக்கி அவர்களும், ஜாமியா நளீமிய்யாவின் பணிப்பளர் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி அவர்களும், காழிமார்கள் சபையின் முன்னாள் தலைவர், சட்டத்தரணி நத்வி பஹாவுத்தீன் அவர்களும், சட்டத்தரணி பஸ்லத் ஷஹாப்தீன் அவர்களும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம் ரிஸ்வி முப்தி அவர்களும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்களும் உட்பட மொத்தமாக ஒன்பது பேர் கையொப்பமிட்டு தனியாக சமர்ப்பித்துள்ளமை ஊடகங்களில் எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த கமிட்டிக்கு வழங்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தத்திற்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கை மக்கள் பார்வைக்காக அதனுடைய இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது. எனினும் இம்முன்மொழிவுகள் உரிய முறையில் உள்வாங்கப்பட்டதா என்பது கேள்விக் குறியாகும்.

பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்ட அந்தக் காலத்தில் பெண்களின் உரிமைகள் பற்றி உலகுக்கு கற்றுக்கொடுத்தது இஸ்லாமாகும். அது பெண்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் நீதமான முறையில் வழங்கியுள்ளது. அந்தவகையில் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்ற கருத்திலேயே அன்று தொட்டு இன்று வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இருந்து வருகின்றது.

அந்த வகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது பரிந்துரையில் பிரச்சினைகளை முறையீடு செய்வதற்கான ஒரு ஆலோசனை சபை இருக்க வேண்டும் என்றும் அதில் பெண்கள் இருவருக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்றும் கலாசார மற்றும் சமூக ரீதியான விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு, திருமணப் பதிவாளர்களாக பெண்கள் நியமிக்கப்பட முடியும் என்றும் விவாகப் பதிவுப் பத்திரத்தில் மணமகளின் விருப்பத்தை உறுதிப்படுத்தும் வகையிலான கையொப்பம் கண்டிப்பாகப் பெறப்பட வேண்டும் என்பதையும் ஒவ்வொரு காதி நீதிபதிக்கும் பயிற்றுவிக்கப்பட்ட திருமண ஆலோசகர்களையும், மத்தியஸ்த்தர்களையும் கொண்ட குழு ஒன்று உதவியாக இருத்தல் வேண்டும் என்றும் இவ்வாறான ஒவ்வொரு குழுவிலும் அதிகப்படியான பெண்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஜம்இய்யா தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. அத்துடன் ஒரு கணவர் ம(த்)தாவில் இருந்து விடுபடுவதற்காக மனைவியை பஸ்க் செய்ய நிர்ப்பந்திக்கும் பட்சத்தில் காழி ம(த்)தா கொடுப்பனவை கணவன் மீது கட்டளையிடலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை சில பெண்ணிலைவாதக் குழுக்கள் ஊடகங்களினூடாக பரப்பிய போதும் சமூகத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் இதன்போது ஜம்இய்யா செயற்பட்டது.  

பல்லாண்டு காலமாக முஸ்லீம்களால் பாதுகாக்கப்பட்டு வந்த இச்சட்டத்தை தொடர்ந்தும் பாதுகாத்து எமது உரிமைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ளவும், எமது கடமைகளை சரியாக நிறைவேற்றவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமீன்.

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா