20.11.2017 (30.02.1439)

         ரபீஉனில் அவ்வல் மாதத்தின் தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான ஒன்றுகூடல் வழமைபோல் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அதன் பிறைக் குழுத் தலைவர் அஷ்-ஷைக் ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் 19.11.2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அவ்வொன்றுகூடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிழ்வி, உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள்இ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு உறுப்பினர்கள், மேமன் ஹனபிப் பள்ளிவாசல் நிருவாகிகள் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


     இக் குழு நாடெங்கிலும் உள்ள தமது உப பிறைக் குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டதோடு; அன்றைய தினம் பிறை தென்பட வாய்ப்புள்ள களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, யாழ்ப்பானம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களினதும் பொத்துவில், காத்தான்குடி, நிகவெரட்டி போன்ற பிரதேசங்களின் பிரதிநிதிகளையும் தொடர்பு கொண்டனர்.எவ்விடத்திலிருந்தும் பிறை தென்பட்டதற்கான தகவல் கிடைக்காமையால். அங்கு கூடியிருந்த உலமாக்கள் உள்ளிட்ட குழுவினர் ஸபர் மாதத்தை பூரணப்படுத்தி 21.11.2017 செவ்வாய்க்கிழமை ரபீஉனில் அவ்வல் மாதத்தை ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவு செய்தனர்.

 

அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத்
பிறைக் குழு செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

      அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவினால் நிந்தவூர் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆலோசனை , பயிற்சி கருத்தரங்கு ஒன்று நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிந்தவூரில் உள்ள ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள், நிர்வாகிகள் என சுமார் 200 பேருக்கான இவ்வழிகாட்டல் நிகழ்வில் கொழும்பை சேர்ந்த பிரபலமான ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கான உள வள பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாதிரி வகுப்பொன்றை நடாத்த  அங்கிருந்து சுமார் 25 ஆரம்ப பள்ளி மாணவர்கள் மற்றும்  கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்ப பள்ளி பிரிவு பணிப்பாளர் AM. ரஸின், நிந்தவூர் உலமா சபையின் தலைவர் மௌலவி இஸ்மான், செயலாளர் மௌலவி ஆஷிக் அலி, கல்வி பிரிவு தலைவர் மௌலவி அமீர் அலி, செயலாளர் மௌலவி ஹரீஸ் மற்றும் ஏனைய கல்வி குழு அங்கத்தவர்கள், உலமா சபை உறுப்பினர்கள் ஆகியோரின் பங்கு பற்றலுடன் இடம்பெற்றது.

 

 

2017-11-17

முக்கிய அறிவித்தல்

காலி கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர் மட்ட தலைவர்கள் அரசாங்கத்துடனும் உயர் அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு ஆவண செய்துவருகின்றனர்.

ஜம்இய்யாவின் கௌரவ தலைவர், பிரதித் தலைவர் உட்பட முக்கிய செயற்குழு உறுப்பினர்கள் கூடி இது தொடர்பில் முடியுமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இத் தருணத்தில் அனைவரும் நிதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் துஆ, இஸ்திஃபார், போன்ற இபாதத்களில் ஈடுபடுமாறும் ஜம்இய்யா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குருணாகல் மாவட்ட நிறைவேற்றக்குழு மற்றும் அ.இ.ஜ.உலமாவின் இளைஞர் வலுவூட்டல் இரண்டு நாள் பயிற்ச்சி நெறியில் கலந்துகொண்ட உலமாக்கலுடனான விஷேட கலந்துரையாடல் 16.11.2017 காலை 10:30 முதல் நன்பகல் 12:00 வரை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குருணாகல் மாவட்ட தலைவர் அஷ்ஷேக் சுஹைப்(தீனி) அவர்களின் தலைமையில் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வின் போது சிறந்த இளைஞர் சமூகமொன்றை உருவாக்க ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.

 

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குருணாகல் மாவட்ட நிறைவேற்றக்குழு மற்றும் குருணாகல் மாவட்ட மக்தப் மேற்பார்வையாளர்கள் (முஆவின்கள்) உடனான விஷேட கலந்துரையாடல் 16.11.2017 காலை 08:30 முதல் 10:30 வரை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குருணாகல் மாவட்ட தலைவர் அஷ்ஷேக் சுஹைப்(தீனி) அவர்களின் தலைமையில் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.இக்கலந்துரையாடலின் போது மக்தப் சம்பந்தமான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

2017.11.10 (1439.02.21)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மேல்மட்ட உறுப்பினர்களுக்கும் சகோதரர் சிராஸ் நூர்தீன் சட்டத்தரணி தலைமையிலான RRT அமைப்பினருக்கும் இடையில் நேற்று (09.11.2017) விஷேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் சமகாலப் பிரச்சினைகள் பலவும் கலந்தாலோசிக்கப்பட்டன. அத்துடன் கடந்த காலங்களில் RRT அமைப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் புரிந்துணர்வுடனும், ஒத்துழைப்புடனும் நடந்து கொண்டது போலவே தொடர்ந்தும் சமூக நலன்களில் இணைந்து செயற்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.


இக்கலந்துரையாடலில் ஜம்இய்யாவின் கௌரவ தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி உட்பட பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக், பிரதித் தலைவர் அஷ்-ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத், உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் இலங்கை அரபுக்கல்லூரிகள் ஒன்றியம் ஒன்றினைந்து அரபுக்கல்லூரி ஆசிரியர்களுக்காகவென ஒழுங்கு செய்த கற்பித்தல் தொடர்பான பாட நெறி ஒன்று கொழும்பு திறந்த பல்கழைகழகத்தினால்  நடாத்தப்பட்டது.இப்பாட நெறி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக்குழுவால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. 

நான்கு மாதங்களாக நடைபெற்ற இப்பாட நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 2017.11.09 கொழும்பு திறந்த பல்கழைகழகத்தின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.

காலை பத்து மணியளவில் கிராத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வின் வரவேற்புரையை கொழும்பு திறந்த பல்கழைகழகத்தின் இரண்டாம் மூன்றாம் நிலைக் கல்வித் துறையின் தலைவர் எஸ்.குகமூர்த்தி வழங்கினார்.தமது கல்விப் பீடம் இவ்வாறான ஒரு பயிற்சியை தயாரித்து உலமாக்களுக்கு வழங்கியது ஒரு சாதனையாக இருப்பதாக தனது உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கல்விப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பீ.சி.பி பக்கீர் ஜஃபார் உரையாற்றுகையில் கற்பித்தல் தொடர்பான சில விளக்கங்களை முன்வைத்ததோடு பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வின் விசேட அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்-ஷைக் முப்தி, எம்.ஐ.எம்.ரிஸ்வி அவர்களின் உரை இடம் பெற்றது.தலைவர் தனது உரையில் அனைத்து உலமாக்களும் ஒவ்வொரு துறைகளிலும் கால் பதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, எமது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒற்றுமை, சகவாழ்வு, கல்வி போன்ற விடயங்களை முன்னிருத்தி தனது செயற்பாடுகளை தற்போது கொண்டு செல்வதாகவும் கூறினார்.

தலைவரின் உரையுடன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்,ஞாப சின்னங்கள் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.அதை தொடர்ந்து நன்றியுரையை கலாநிதி நவாஸ் தீன் வழங்கி அந்நிகழ்வை சிறப்பாக நிறைவு செய்தார்.இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ முபாறக், உதவிச் செயலாளர் எம்.எஸ்.எம் தாஸீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 இந்நிகழ்வு வரலாற்றில் பதிய வேண்டிய ஒன்றாகும். உலமாக்களின் ஆளுமை விருத்திக்கு அடித்தலமாக இருப்பதோடு எதிர் வரும் காலங்களில் இது போன்ற பயிற்சி நெறிகளை ஒழுங்கு படுத்தி செய்வதினூடாக சிறந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதில் ஐயமில்லை.

 

                      ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

  

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்முறை அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஜும்ஆ  மஸ்ஜிதில்  05.11.2017ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

 

மேற்படி நிகழ்வில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.

  1. சமூகத்தை கட்டியெழுப்புவதில் மஸ்ஜித் நிருவாகிகளின் பங்களிப்பு - அஷ்-ஷைக் உமர்தீன் (ரஹ்மானி), செயலாளர் பிரசாரக்குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
  2. பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் - அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி தலைவர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
  3. உலமாக்களுக்கான குத்பா கருத்தரங்கு மற்றும் ஆன்மீக வழிகாட்டல் -அஷ்-ஷைக் அலியார் ரியாழி. நிறைவேற்றுக் குழு உறுப்பினர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
  4. காளிமார்கள் மற்றும் விவாக பதிவாளர்களுக்கான கலந்துரையாடல் - அஷ்-ஷைக் ஹலீல். பொருளாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
  5. தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி தலைவர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

 

  1. சமூகங்களுக்கிடையான கலந்துரையாடல் சம்பந்தமான (ஆறு புத்தகங்கள் பற்றியுண்டான தெளிவு) - PPT - அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான்  இணைப்பாளர், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

 

எனவே இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உங்களுடைய துஆக்களை எதிர்பார்ப்பதோடு முடியுமானவர்கள் கலந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

     இந்தோனேஷியாவின் இலங்கைக்கான தூதரக பிரதிநிதிகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு இன்று 2017.10.23ம் திகதி காலை பதினொரு மணியளவில் விஜயம் செய்தார்கள்.  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் முபாறக், பொருளாலர் அஷ்-ஷைக் கலீல் மற்றும் அஷ்-ஷைக் நவ்பர், அஷ்-ஷைக் தாஸீம் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

   இச்சந்திப்பில் இந்தோனேஷியாவின் இலங்கைக்கான தூதரக பிரதிநிதிகள் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்வது சம்பந்தமாக கேட்டறிந்து கொண்டதோடு, ஜம்இய்யத்துல் உலமா பற்றிய அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.

 

  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் நேற்று 2017.10.17ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு எட்டு மணி முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

இரவு பத்து மணி வரை நீடித்த இக்கலந்துரையாடலில்

  • வட, கிழக்கு எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குள் ஒன்று பட்டு செயற்படுதல்.
  • ஊடகங்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகோதர முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய வீணான விமர்சனங்கள் மற்றும் தவறான செய்திகளை பரப்புவதில் இருந்து தவிர்ந்து கொள்ளல்.
  • முஸ்லிம் அமைச்சர்கள் தமது கட்சிகளின் அலுவல்களை பார்க்கும் அதே நேரம் தமக்குள் ஒரு தலைமைத்துவத்தை உருவாக்கி ஒற்றுமையாக சேரந்து போக முடியுமான கட்டங்களில் ஒத்துழைத்தல்.

      போன்ற விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்ட அதே நேரம் கௌரவ அமைச்சர் பௌசி அவர்களின் ஒருங்கிணைப்பில் முஸ்லிம்கள் சார்ந்த  விடயங்களை கவனிப்பதாகவும் அக்கலந்துரையாடலில் உறுதியளித்தனர்.

    இக்கலந்துரையாடலிற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி அவர்கள் தலைமை தாங்கி தேவையான வழிகாட்டல்களை வழங்கிய அதே நேரம் ஒற்றுமையின் அவசியம் பற்றி வலியுருத்தினார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு சார்பாக அதன் உபதலைவர்கள் அடங்களாக 13 பேர் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா