06.04.2020
12.08.1441
அன்புடையீர்,
சோதனைகள் நீங்கி மகிழ்ச்சிகரமான வாழ்வு நிலை திரும்பப் பிரார்த்திப்போம்
கொவிட்- 19 வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சோதனைகளை நாம் அறிவோம். குறித்த வைரஸினால் இலட்சக்கணக்கானோர் பீடிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் மரணித்தும் வருகின்றனர். முழு உலகமும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. சாதாரண வாழ்க்கை நிலை கூட மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கவலையோடும் பீதியோடும் மன உளைச்சளோடும் மிகவும் பரிதாபகரமான நிலையில் நாட்களைக் கழித்து வருகின்றனர். இந்நிலை குறிப்பாக நமது நாட்டிலிருந்தும் பொதுவாக முழு உலகிலிருந்தும் நீங்க எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலாவிடம் மன்றாடிப் பிரார்த்திப்பது ஒவ்வொரு முஸ்லிமுடைய தார்மிகக் கடமையாகும். இந்நோய் பரவாரம்பித்ததிலிருந்து தௌபா, இஸ்திஃபாரில் ஈடுபட்டு, சுன்னத்தான நோன்புகள் நோற்று, ஸதகா செய்து, துஆவிலும் ஈடுபடுமாறு ஏலவே பல முறை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மக்களிடம் வேண்டிக் கொண்டதை நீங்கள் அறிவீர்கள்.
துஆவின் மூலம் தேவைகள் நிறைவேறுகின்றன் நன்மைகள் கிடைக்கின்றன. அது அல்லாஹ்வை நெருங்கவும் காரணமாகின்றது. அடியார்கள் தன்னிடம் பிரார்த்திப்பதை அல்லாஹ் விரும்புகின்றான்.
“நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள் உங்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிப்பேன்.” (40: 60)
பலரும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்ற ஓர் இக்கட்டான நிலையில், ஒவ்வொருவரும் தன்னாலான உதவி ஒத்தாசைகளைச் செய்வதும் அதிகம் சுன்னத்தான நோன்புகளை நோற்பதும் இறை பொருத்தத்தைப் பெற்றுத் தரும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகம் சுன்னத்தான நோன்புகளை நோற்ற ஷஃபான் மாதத்தில் நாம் இருக்கின்றோம். எனவே, இவ்விடயத்திலும் கவனம் செலுத்துவதோடு குறிப்பாக பிறை 13,14,15 (ஏப்ரல் 07,08,09) ஆகிய அய்யாமுல் பீழ் தினங்களில் முடியுமானோர் நோன்பு நோற்றுப் பிராத்திக்குமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.
ஆண்கள், பெண்கள், வாலிபர்கள், வயோதிபர்கள் அனைவரும் தத்தமது வீடுகளில் இருந்தவாறு நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்விடம் மன்றாடிப் பிரார்த்திக்கும் வழமையை உருவாக்கிக் கொள்வதோடு; காலை, மாலை துஆக்களையும் தவறாது ஓதி வருமாறு ஜம்இய்யா வழிகாட்டுகின்றது.
நாட்டில் சோதனைகள் நீங்கி அபிவிருத்தியும் சுபிட்சமும் ஏற்பட அனைத்து மதஸ்தலங்களும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். எனவே, ஒவ்வொரு மஸ்ஜிதிலும் மேலே குறிப்பிட்ட அய்யாமுல் பீழ் மூன்று நாட்களிலும் மஃரிபுடைய அதானுக்குப் பிறகு ஒலிபெருக்கியில் துஆ செய்யுமாறும் அனைத்து முஸ்லிம்களும் தத்தமது வீடுகளிலிருந்த வண்ணம் ஆமீன் கூறி பிரார்த்தனைக்கு பதிலளிக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றது. இதற்காக பின்வரும் மாதிரி துஆக்களைப் பயன்படுத்தலாம். இந்த துஆக்களை ஓதி தனிப்பட்ட முறையிலும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டிக் கொள்கிறோம்;.
எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்து கெடுதிகளிலிருந்தும் நம்மையும் நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக! நிலைமைகளைச் சீராக்குவானாக!
அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித்
செயலாளர்- பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
உன்னைத் தவிர வணக்கத்துக்குரிய நாயன் வேறுயாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.
யாவற்றையும் விட சக்தியுடையவனான, நுட்பமானவனான வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. மகத்தான அர்ஷ{டைய இரட்சகனான அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறுயாருமில்லை. சங்கையான அர்ஷ{டைய இரட்சகன், வானம் பூமியுடைய இரட்சகனான அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறுயாருமில்லை.
(البخاري: 6369)
யா அல்லாஹ் அனைத்து விதமான கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பேரி தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கருமித்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும் மற்றும் மனிதர்களின் அடக்கு முறையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றோம்.
யா அல்லாஹ்! உனது ரஹ்மத்தை ஆதரவு வைக்கின்றோம். ஒரு நொடிப் பொழுது கூட எம்மை எமக்குப் பொறுப்புச் சாட்டி விடாதே. எமது காரியங்கள் அனைத்தையும் சீராக்கித்தருவாயாக, வணக்கத்துக்குரிய நாயன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.
எமது இரட்சகன் அல்லாஹ், அல்லாஹ். அவனுக்கு நாம்; எந்தவொன்றையும் இணைவைக்க மாட்டோம்.
யா அல்லாஹ்! இம்மையிலும் மறுமையுடைய ஆரோக்கியத்தை உன்னிடத்திலே நாம் கேற்கின்றோம். யாஅல்லாஹ்! எமது மார்க்கத்திலும், எமது உலக வாழ்கையிலும், எமது சொத்திலும் மற்றும் எமது குடும்பத்திலும் ஆரோக்கியத்தையும் மன்னிப்பையும் தந்தருள்வாயாக. யா அல்லாஹ்! எமது குறைகளை மறைத்திடுவாயாக. இன்னும், யா அல்லாஹ்! எமக்கு முன்னும், பின்னும், வலப்புறத்திலும், இடப்புறத்திலும், மேல்புறத்திலும் உன்னுடைய பாதுகாப்பைத் தந்தருள்வாயாக. மேலும், திடீர் மரனம் ஏற்படுவதை விட்டும் உனது சக்தியைக் கொண்டு பாதுகாத்திடுவாயாக.
யா அல்லாஹ்! உனது ரஹ்மத்தை தேடித்தரக்கூடிய கூடிய விடயங்களையும், உனது மன்னிப்பை கட்டாயப்படுத்தக்கூடிய விடயங்களையும் கேட்கின்றோம். மேலும், எல்லா நலவுகளையும் பெற்றுக் கொள்வதைக் கேட்கின்றோம். மேலும், ஒவ்வொரு பாவத்திலிருந்தும் ஈடேற்றம் அடைவதைக் கேட்கின்றோம். யா அல்லாஹ் எமது எந்த ஒரு பாவத்தையும் மன்னிக்காமல் விட்டுவிடாதே. மேலும், எந்தக் கவலையையும் நீக்காமல் இருந்துவிடாதே. மேலும், உனது பொருத்தத்திற்கு உட்பட்ட எந்த தேவைகளையும் பூர்த்தி செய்யாமல் விட்டுவிடாதே.
யா அல்லாஹ்! சோதனைகளிலிருந்தும், அழிவுகளிலிருந்தும், மோசமான முடிவுகளிலிருந்தும், இன்னும் பகைவர்கள் எம்மைப் பார்த்து சந்தோசப்படுவதிலிருந்தும் நாம் உன்னிடத்தில் பாதுகாப்புத் தேடுகின்றோம்.
யா அல்லாஹ்! நீ தந்த அருட்கொடை நீங்குவதை விட்டும், நீ அருளிய ஆரோக்கியம் மாற்றப்படுவதை விட்டும், திடீர் சோதனையை விட்டும், மற்றும் உன்னை கோபம் உண்டாக்கக்கூடிய அனைத்து காரியங்களை விட்டும் பாதுகாத்தருள்வாயாக.
யா அல்லாஹ் வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தோடுகிறேன்.
அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். அவனுடைய பெயரைக் கூறுவதுடன் இந்தப் பூமியிலும் வானத்திலும் உள்ள எப்பொருளும் தீங்கிழைக்க முடியாது. அவன் எல்லாவற்றையும் கேட்கக்கூடியவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
01.04.2020
கோவிட் 19 பாதிப்பால் இறந்தவர்களின் ஜனாஸாக்கள் தொடர்பாக
உலக சுகாதார அமைப்பு கோவிட் 19 பாதிப்பால் இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படவும் முடியும் என்று தனது வழிகாட்டலில் குறிப்பிட்டு, அது பல நாடுகளால் பின்பற்றப்பட்டுவரும் இந்நிலையில், கோவிட் 19 பாதிப்பால் இறந்தவர்கள் அனைவரினது உடல்களும்; எரிக்கப்பட வேண்டுமென நேற்று (31.03.2020) சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் முஸ்லிம் சமூகமும் தமது அதிருப்தியை தெரிவித்துக் கொள்கின்றது.
2020 மார்ச் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின் “கொவிட் வைரஸினால் இறந்த உடலை பாதுகாப்பாக நிர்வகிப்பதற்கான தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு” என்ற வழிகாட்டலுக்கமைய சுகாதார அமைச்சினால் (31.03.2020) வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர தம்மாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க ஜம்இய்யா தயாராக இருக்கின்றது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.
மேற்குறித்த உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல் கொவிட் 19 பாதிப்பால் இறந்தவர்களை எரிப்பதற்கு அல்லது அடக்குவதற்கு அனுமதியளிக்கின்றது. அந்தவகையில் உரிய அதிகாரிகள் முஸ்லிம்களது இம்முக்கிய மத விவகாரத்தை கவனத்திற் கொண்டு 2020.03.31ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் உரிய மாற்றங்களைக் கொண்டுவருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிர்பந்தமான நிலையில், இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாஹ்விடம் எந்த குற்றமும் இல்லை. எனவே முஸ்லிம்கள் இவ்விடயத்தில் பொறுமையுடன் செயற்படுமாறும் இவ்வாறான நிலையில் மரணித்தவருக்கு அல்லாஹ் பிரத்தியேக கூலிகளை வழங்க வேண்டுமென ஆதரவு வைக்குமாறும் ஜம்இய்யா அனைத்து முஸ்லிம்களிடமும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றது.
இலங்கைவாழ் மக்களும் முழு உலகமும் பாரிய சோதனைக்குள்ளாகியுள்ள இச்சந்தர்ப்பத்தில் நம் அரசாங்கம் வைரஸ் பரவலைத் தடுக்கச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் நமது ஏனைய சகோதரர்களுடன் இணைந்து அரசு முன்னெடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாரிய ஒத்துழைப்பை வழங்குவது எம்மனைவரின் பொறுப்பாகும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. அவ்வகையில் வைரஸின் பரவலைத் தடுக்க தற்போது அரசு மேற்கொள்ளும் ஊரடங்குச் சட்டம் உட்பட அனைத்து விதிமுறைகளுக்கும் உடனடியாக கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென ஜம்இய்யா அனைவரையும் கேட்டுக் கொள்கின்றது.
நோய்த் தொற்றின் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிப்பதை உறுதிசெய்ய வேண்டுமென இலங்கைவாழ் முஸ்லிம்கள் அனைவரையும் ஜம்இய்யா பொறுப்புடன் கேட்டுக் கொள்கின்றது.
அனைத்து முஸ்லிம்களும் தாம் வாழும் சமூகத்தின் நலனைப் பாதுகாக்கவேண்டுமெனவும் தங்களது அனைத்து செயற்பாடுகளிலும் பொதுநலன் கவனத்திற் கொள்ளப்படவேண்டுமெனவும் அல்குர்ஆனும் அல் ஹதீஸும் வலியுறுத்துகின்றன.
நமது தாய் நாட்டைப் பாதுகாக்கப் போராடும் சூழ்;நிலையில் அனைத்து சமூகங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், மனிதர்கள் என்ற வகையில் ஒவ்வொருவரிடமும் காணப்படும் மனித உணர்வுகளை மதித்தும் நடக்குமாறு ஜம்இய்யா அனைவரையும் கேட்டுக்கொள்கின்றது.
சோதனைமிக்க இக்காலத்தில் சர்வ வல்லமையுள்ள அல்லாஹு தஆலா கருணை, இரக்கம், மற்றும் அபிவிருத்தியை நம் தாய்நாட்டுக்கு அருளவும் இந்த தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் மிகவிரைவில் வெற்றிகொள்ள வழிகாட்டவும் ஜம்இய்யா பிராத்திக்கின்றது.