ACJU/NGS/2021/007

2021.02.17 (1442.07.04)

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னைய நாள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்ஷைக் எம். யூசுப் நஜ்முத்தீன் அவர்கள் நேற்றிரவு (2021.02.16) வபாத்தானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த (تعزية) அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது.


அன்னார் 1972 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும், 1985ம் ஆண்டு முதல் கொழும்பு மாவட்டத்தின் முஸ்லிம் விவாகப் பதிவாளராகவும், அகில இலங்கை கதீப்மார் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும், கொழும்பு மாவட்டத்திலுள்ள பல மஸ்ஜித்களில் இமாமாகவும் கதீபாகவும் பணியாற்றியுள்ளார்கள். அகில இலங்கை கதீப்மார் சம்மேளனத்தினூடாக கதீப்மார்களுக்கான பல பயிற்சிநெறிகளையும், கருத்தரங்குகளையும் நடாத்தியதோடு கதீப்மார்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதிலே பாரிய பங்களிப்புக்களையும் மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சமூகப் பிரச்சினைகளின் போது முன்னின்று செயல்படக்கூடிய ஆளுமை மிக்க ஒருவராகவும் அன்னார் திகழ்ந்தார்கள்.


குறிப்பாக, ஜம்இய்யத்துல் உலமாவின் வளர்ச்சியில் முன்னைய நாள் தலைவர் அஷ்-ஷைக் மர்ஹூம் எம்.எம்.ஏ. முபாறக் மற்றும் முன்னைய நாள் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் மர்ஹூம் எம்.ஜே.எம். ரியாழ் அவர்களின் காலத்தில் அயராது பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதற்குப் பின்னரும் 2016 ஆம் ஆண்டு வரை நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தொடர்ந்தும் செயற்பட்டு தனது பங்களிப்பினை வழங்கினார்.


பல தசாப்தங்கள் சமூகத்துக்காக அரும்பாடுபட்ட அன்னாரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், கவலையையும் தெரிவித்துக் கொள்கிறது.


எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது தவறுகளை மன்னித்து, நல்லமல்களை அங்கீகரித்து, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

 


அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 
2020.11.18

ஸ்ரீ லங்கா ராமாஞ்ஞ நிகாயவின் பிரதம மதகுரு சங்கைக்குரிய நாபான பிரேமசிரி தேரர் அவர்களின் மறைவினையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கின்றது.


இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால், அனைத்து இலங்கையர்களின் முன்னேற்றத்துக்கும் ஒரு சிறந்த பௌத்த சமூகத்தை உருவாக்குவதற்கும் நீண்டகாலம் உழைத்த தேரர் அவர்கள் சகவாழ்வு, அமைதி, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றால் வளமான ஒரு தாய் நாட்டை உருவாக்க வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டார்.


எல்லோராலும் பாராட்டத்தக்க அன்னாரின் தூய்மையான பணியை தொடர்வதும், அவரது இலக்கினை முன்னோக்கி அனைத்து இலங்கையர்களும் உறுதியுடன் செயல்படுவதும், அன்னாருக்குச் செலுத்தும் மிகப்பெரிய மரியாதையும் கௌரவமுமாகும்.


இலங்கை முஸ்லிம் சமூகமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் பௌத்த சமூகத்திற்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.

 

இப்படிக்கு


அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

11.07.2017 (16.10.1438)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிழ்வி அவர்களின் அனுதாபச் செய்தி

அஷ்-ஷைக் எம். றியாழ் பாரி அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. இலங்கையின் தலைசிறந்த உலமாக்களில் ஒருவரும், கொழும்பு பெரிய பள்ளிவாயல் மதீனதுல் இல்ம் அரபிக் கல்லூரியின் அதிபரும், பெரிய பள்ளிவாயல் பிறைக்குழுத் தலைவருமான அஷ்-ஷைக் எம். றியாழ் பாரி அவர்கள் இன்று (11.07.2017) தனது 63வது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன். அவர்களின் மரணம் இலங்கைவாழ் மக்களுக்கேற்பட்ட பெரும் இழப்பாகும்.

கடந்த 2003 ஆம் ஆண்டுமுதல் சுமார் 15 வருடகாலமாக அவர்களுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. தனது சொந்த அமல்களில் பேணுதலும், பிறருடன் அன்பாகவும் பணிவாகவும் பழகும் குணமும், பொறுப்புணர்வுடன் செயலாற்றும் தன்மையும், பிறருடன் நல்ல உறவைப் பேணும் அன்னாரது பண்பும் எம் உள்ளத்தை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டாது. காலம் சென்ற அப்துல் சமத் ஆலிம் மற்றும் அன்னாரது சகோதரர் மௌலவி அப்துல் லதீப் ஆலிம் போன்றோர்களோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த அன்னார் மிகவும் நற்குணம்படைத்தவராக காணப்பட்டார்கள்.
தனக்கு ஏற்பட்டிருந்த நோயையும் பொருட்படுத்தாமல் றமழான் மாதத் தலைபிறைக் கூட்டத்துக்கு அவர்கள் வருகை தந்தமை அன்னார் தமது பணிகளில் கொண்டிருந்த பொறுப்புணர்வைக் காட்டுகின்றது. இது உலமாக்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக, அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும்; ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.
வஸ்ஸலாம்.


அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் றிழ்வி
தலைவர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா