Ref No. ACJU/PRO/2020/005

19.11.2020 (02.04.1442)

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ


கொவிட் 19 வைரஸ் பரவல் காரணத்தினால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில் சில பிரதேசங்களில் மஸ்ஜித்கள் மூடப்பட்டும், மற்றும் சில பிரதேசங்களில் ஜுமுஆ மற்றும் இதர நற்காரியங்களுக்காக மக்கள் ஒன்று கூடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதையும் அறிவோம்.
இக்காலப்பகுதியில் ஜுமுஆ பிரசங்கம் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும் பிரதேசங்களில் அதனை உரிய முறையில் சுருக்கமாகவும், பயனுள்ளதாகவும் அமைத்துக் கொள்வதுடன், காலத்திற்கும் நேரத்திற்கும் பொருத்தமான விடயங்களை நினைவுபடுத்துவதாக இருப்பது மிக அத்தியாவசியமாகும்.


அவ்வகையில் கதீப்மார்கள் தங்களின் ஜுமுஆப் பிரசங்கங்களில் பின்வரும் விடயங்களை இணைத்துக் கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.


1. தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த சோதனையிலிருந்து விடுபடுவதற்காக மக்களுக்கு தவ்பா, இஸ்திஃபார், சதகா ஆகியவற்றின் பக்கம் அதிக ஈடுபாடு கொள்ளத் தூண்டல்.



2. ஹூகூகுல்லாஹ் விடயத்தில் நாம் காட்டும் கரிசனை, ஹூகூகுல் இபாத் விடயத்திலும் காட்டப்படல் வேண்டும் என்ற விடயத்தை விளங்க வைப்பதோடு, மனிதனுடைய மானம், மரியாதை, மனதை புண்படுத்தல் போன்ற அல்லாஹ்வுடைய உதவியை தடுக்கக்கூடிய விடயங்களிலிருந்து மக்கள் தவிர்ந்து கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்குதல்.

 

3. கொவிட் 19 வைரஸின் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் வழங்கும் வழிகாட்டல்களை அலட்சியம் செய்யாமல் பின்பற்றுவதின் கடமைப்பாட்டை தெளிவுபடுத்தல்.

 

4. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்ப் சபையினால் வழங்கப்படும் வழிகாட்டல்கள் மற்றும் அறிவித்தல்களை மஸ்ஜித் நிர்வாகத்தினர் அலட்சியம் செய்யாது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டுமென்ற பொறுப்பை தெளிவுபடுத்தல்.

 

5. பாடசாலைகள், மக்தப் வகுப்புக்கள், மத்ரசாக்கள் அனைத்தும் தற்போது விடுமுறை வழங்கப்பட்டிருப்பதால், பிள்ளைகளின் கல்வி விடயத்தில் பெற்றோர் மிகக் கவனம் செலுத்துவதுடன் இணையதளத்தினூடாக நடாத்தப்படும் வகுப்புக்களின் போது பெற்றோரின் நேரடி கண்காணிப்பை உத்தரவாதப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற விடயத்தை தெளிவுபடுத்தல்.

 

6. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பாரிய கஷ்டங்களை முன்னோக்குகின்றனர். அவர்களின் இயல்பு வாழ்கை மீளத்திரும்ப துஆச் செய்வதுடன், முடியுமான உதவிகளையும் மேற்கொள்ள ஆர்வமூட்டல்.


7. மனித நேயமிக்க மக்களாகிய நாம் இன, மத வரையறைகளுக்கு அப்பால் தேவையுடையோரை இனங்கண்டு, அவர்களுக்கு எமது சதகாக்கள், ஹதியாக்களை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தல் வேண்டும் என்று ஆர்வமூட்டல்.

 

8. இக்கால கட்டத்தில் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களை மக்கள் சமூக வலைத்தளங்கள் முதலானவற்றில் வீணாக கழிக்காமல் பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்வதற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்.

 

எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவரையும் அவன் விரும்பும் பணிகளுக்காக கபூல் செய்வானாக!

 

வஸ்ஸலாம்

 

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா