20.10.2015 (06.01.1437)

மீள் குடியேற்றம் தொடர்பான இரண்டாம் கட்ட செயற்திட்டக் கலந்துரையாடல்!

நேற்று (19.10.2015) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் தஃவா மற்றும் தொண்டர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு ஜம்இய்யாவின் கௌரவ தலைவார் தலைமை தாங்கினார்.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் நிறைவு பெறும் இத்தருணத்திலும் அகதி வாழ்க்கையையே வாழ்கின்றனர். இவர்களின் மீள் குடியேற்றத்தை பூரணப்படுத்தி நல்லதொரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்றை ஜம்இய்யா குறித்த அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 24,898 முஸ்லிம் குடும்பங்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டு புத்தளம், குருணாகல், நீர்கொழும்பு, பாணந்துரை மற்றும் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று குடியமர்ந்துள்ளனர். அவர்களில் சிலர் மீள் குடியேறிய போதிலும் போதிய அடிப்படை வசதிகளின்றி மிகச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறனர். மீள் குடியேறிய மற்றும் சிலர் அதே காரணங்களுக்காக மீண்டும் திரும்பி விட்டனர். 

இந்நிலையில் முதற் கட்டமாக மீள் குடியேறிய மக்களுக்கான முழுமையான வசதிகளை செய்து கொடுக்குமாறு வேண்டி நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், மீள் குடியேற்ற அமைச்சர் ஆகியோரை வலியுறுத்தி ஜம்இய்யா நாட்டின் ஏனைய அமைப்புக்களுடன் சேர்ந்து ஒரு செயற்திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றது. 

குறித்த கலந்துரையாடலில், முன்வைக்கப்படவிருக்கின்ற செயற்திட்ட அறிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் இத்திட்டம் வெற்றிகரமாக அமைய எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மிக விரிவாக ஆராயப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளையும் வழங்கினர்.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா