2018.06.05

முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  ஏற்பாட்டில் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வொன்று கொழும்பு - கொள்ளுப்பிட்டி, அல்மண்ட்ஸ் உணவகத்தில் நேற்று (2018.06.04) திங்கட்கிழமையன்று Qatar Charity நிறுவனத்தின் அனுசரனையில்  இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம் முப்தி ரிஸ்வி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வின் வரவேற்புரையை ஜம்இய்யாவின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸிம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.

வரவேற்புரையைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயற்பாடுகள் தொடர்பான பூரண விளக்கமொன்று அஷ்-ஷைக் அர்ஷத் அவர்களால் முன்வைக்கப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின் சிறப்புரையாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்களின் உரை இடம் பெற்றது. அவரது உரையில் சமூக மாற்றத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை முன்வைத்ததுடன்  ஊடகவியலாளர்கள் எப்பொழுதும் ஒரு விடயத்தை சரியான முறையில் ஆராய்ந்து, அந்த செய்தியை உறுதிப்படுத்திய பின்னரே, அவற்றை வெளியிட வேண்டும் என்றும் இதுவே ஒரு ஊடகவியலாளருக்குரிய சிறந்த பண்பாகும்  என்றும் குறிப்பிட்டார். மேலும் ஜம்இய்யாவின் பணிகள் பற்றி குறிப்பிட்ட தலைவர் அவர்கள் எமது சமூகத்திற்கான ஊடகத்தின் அவசியத்தையும் விளக்கினார்.

தலைவர் அவர்களின் உரையைத் தொடர்ந்து முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அமைப்பின் தலைவர் என்.எம் அமீன் அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனதுரையில் முஸ்லீம் ஊடகங்களின் நிலை பற்றியும் அவற்றுக்கான பங்களிப்புக்களை சமூக்தில் உள்ளவர்கள் வழங்க முன் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இந்நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எஸ்.எல் நவ்பர் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

 

ஊடகப் பிரிவு

அகில இலங்க ஜம்இய்யத்துல் உலமா