மேல்மாகாண பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியப் பிரிய லியனகே அவர்கள் இன்று 2018.09.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் உட்பட அதன் பிரதிநிதிகளை ஜம்இய்யாவின் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அவர் உரையாற்றுகையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை அத்தியவசியமெனவும் நாட்டில் பல்லின சமூகங்களாக வாழ்கின்றவர்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வது ஒற்றுமையை கட்டியெழுப்ப காரணமாக அமையுமெனவும் கூறிப்பிட்டார்.

தொடர்ந்து குறிப்பிடுகையில் ஒவ்வொரு இனத்திற்கு மத்தியிலும் புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் மொழிகள் பாரிய பங்கு வகிப்பதாகவும் பிற சமூகத்தவர்களின் மொழியை அறிந்து வைப்பதினூடாக சந்தேகங்களை அகற்றிக் கொள்ள முடியுமனவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி  அவர்கள் ஜம்இய்யாவின் செயற்பாடுகள் பற்றியும், நாட்டிற்காக ஜம்இய்யா ஆற்றிய சேவைகள் பற்றியும் விளக்கினார்.

இஸ்லாம் வாழ்வின் அனைத்து விடயங்களுக்கும் வழிகாட்டியுள்ளது. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவனது வாழ்வின் அனைத்து செயற்பாடுகளுக்கும் அழகிய வழிகாட்டல்களை வழங்கிய இஸ்லாம் ஒரு நாட்டின் பாதுகாப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்றும், தனிமனிதனின் பாதுகாப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்றும்  வழிகாட்டியுள்ளது என்பது பற்றியும் விளக்கினார். அத்துடன் இந்நாட்டு பாதுகாப்புப் படை செய்யும் பணிகளையும் பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள் ISIS பிரச்சினை ஏற்பட்ட போது முதலாவதாக அதன் செயற்பாடுகளை கண்டித்து அதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்நாட்டிற்கும், மக்களுக்கும் இது பற்றிய தெளிவை ஜம்இய்யா வழங்கியதையும் நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்தும் நாம் எதிர்காலத்தில் அமைதியும், ஒற்றுமையும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்புவதன் தேவை பற்றியும், கடந்த கால கசப்பான நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்காக சிறந்த ஒரு பொறிமுறை அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியப் பிரிய லியனகே அவர்கள் இந்த சந்திப்புக்கள் போன்று இன்னும் பல சந்திப்புக்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்றும் இந்த நாட்டில் வசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு வழங்குவதே எமது பொறுப்பு என்பதாகவும் குறிப்பிட்டார். மத, இன வேறுபாடுகளுக்கு அப்பாற் சென்று சேவையாற்றுவது எமது நோக்கம் எனவும் சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்தும் ஜம்இய்யாவின் தலைவர் நாட்டில் கடந்தகால கசப்பான நிகழ்வுகளிற்கு மூலக் காரணியாக இருந்த மதங்களுக்கிடையிலான பிழையான புரிதல்களை அகற்றுவதற்காக முடியுமான அனைத்து செயற்பாடுகளையும் ஜம்இய்யா செய்து வருவதைப் போன்று அனைத்து தரப்பினரும் செய்ய முன் வரவேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

ஜிஹாத் தொடர்பான பிழையான புரிதல்களுக்கான தெளிவுகளை தொகுத்து வழங்கிய தலைவர் அவர்கள் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட சமாஜ சங்வாத எனும் புத்தகத்தின் பிரதிகளையும் வழங்கி வைத்தார்.

இறுதியாக மேல்மாகாண பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியப் பிரிய லியனகே அவர்கள் தமக்கு இச்சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றார்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா