01.09.2019

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு


ஆடைச் சுதந்திரம் என்பது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். எமது நாட்டின் யாப்பின் பிரகாரம் அனைவருக்கும் அச்சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவோம்.


இந்நிலையில் நாட்டில் நடைபெற்ற துன்பியல் நிகழ்வைத் தொடர்ந்து நாட்டில் அசாதாரண நிலை காணப்பட்டதுடன் அவசரகால சட்டமும் அமுல் செய்யப்பட்டது. அவசர கால சட்டத்தின் போது முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கான தற்காலிக தடையும் விதிக்கப்பட்டது. எனினும் கடந்த 08.23 ஆம் திகதியுடன் அவசர கால சட்டம் நீக்கப்பட்டு பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கும் விஷேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் நாட்டு மக்களின் அச்சமும் மனோபாவமும் முழுமையாக மாறியதாக தெரியவில்லை.


இந்நிலையில் முஸ்லிம் சகோதரிகள் முகத்திரை அணிந்து வெளியேறும் போது பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாக இடமுண்டு. அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் இன வாத சக்திகளுக்கு இடமளிக்காமல் பார்த்துக் கொள்வது எமது பொறுப்பாகும்.


எனவே முகத்திரை அணிந்து பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ந்து கொள்ளுமாறும் கால நேர சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு புத்தி சாதூரியமாகவும், அவதானத்தோடும் நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறது. எமது அவதானமான செயற்பாடுகள் எமது உரிமைகளை உரிய முறையில் பாதுகாக்க நிச்சயம் உதவும் என்ற எதிர்பார்ப்பு ஜம்இய்யாவுக்கு இருக்கின்றது.


இலங்கை முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் அனுபவித்து வந்த மதச் சுதந்திரமும், உரிமைகளும், கலாச்சாரமும் தொடர்ந்தும் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடாகும்.

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா