அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகலை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

08.09.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகலை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் சுஐப் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதந் போது மாவட்டத்தின் பிராந்திய கிளைகளின் உறுப்பினர்களுக்கான வருடாந்த பொதுக் கூட்டம் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

08.09.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது பிறைக் குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான உப குழுக்களை புனர்நிர்மாணம் செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான கருத்தரங்கு நிகழ்வு

07.09.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் ஏற்பாட்டில் சமுதாயத்தின் தேவையும் உலமாக்களின் பங்களிப்பும் எனும் தலைப்பில்  உலமாக்களுக்கான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டம் ஹிங்குல்ஓய கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

04.09.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டம் ஹிங்குல்ஓய கிளையின் மாதாந்த ஒன்று கூடல் மஸ்ஜிதுல் ஹ{தாவில் நடைபெற்றது. இதன் போது வாலிபர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்றை நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

13.11.2019 / 15.03.1441


ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது என்பதை நாம் அறிவோம். இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் தான் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையாகும். எனவே இவ்வுரிமையை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

தேர்தல் தினத்தன்று வாக்குரிமை பெற்ற அனைவரும் மாலை வரை தாமதிக்காமல் காலையில் நேர காலத்துடன் வாக்குச் சாவடிக்களுக்குச் சென்று தாம் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பதில் கவனமெடுக்குமாறும் வாக்குச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சிறப்பாகச் செய்வதற்கு ஒத்தாசையாக இருக்குமாறும் வாக்களிக்கும்போது தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான தேசிய அடையாள அட்டை போன்ற அனுமதிக்கப்பட்ட ஆவணங்களை தம்முடன் வைத்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

வாக்குச் சாவடிக்குள் நுழையும் போதே ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் அவசியம் இருப்பதால், குறிப்பாக முகத்திரை அணியும் பெண்கள் வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது அவர்களது முகங்களை திறந்து, ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது தனியாகச் செல்லாமல் மஹ்ரமான ஆணுடன் செல்லுமாறும் முடிந்த அளவு வாகனத்தில் செல்வதற்கு ஒழுங்கு செய்து கொள்ளுமாறும் வாக்களித்தவுடன் தாமதிக்காது தத்ததமது வீடுகளுக்கு திரும்புமாறும் வேண்டிக் கொள்கின்றோம். இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் வீணான பிரச்சினைகள் உருவாகுவதைத் தடுக்க வழியாக அமையும் என்பதை ஆலோசனையாக முன்வைக்கின்றோம்.

அத்துடன் வாக்களித்த பின்னர் வீதிகளில் கூடி நின்று வீணாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்காமல் பயனுள்ள பணிகளில் ஈடுபடுமாறும் தேர்தலில் வெற்றி பெறுபவர் நாட்டை நேசிக்கின்ற, குடிமக்களின் நலனுக்காக உழைக்கின்ற, நாட்டைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் மிக்கவராக இருப்பதற்கு பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் உலமாக்கள், மஸ்ஜித் நிருவாகிகள், ஜம்இய்யாவின் பிரதேச கிளை உறுப்பினர்கள் இது தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

குறிப்பு: இவ்வறிவித்தலை ஜுமுஆவிற்குப் பின்னர் சகல பள்ளிவாசல்களிலும் மக்களுக்கு வாசித்துக் காட்டுமாறு நிர்வாக சபையினரிடம் வேண்டுகின்றோம்.


அஷ்-ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
பிரதித் தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

10.11.2019 / 12.03.1441


அகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்புச் செய்தியை வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பெருமகிழ்ச்சி அடைகின்றது. 


ரபிஉனில் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகும். மனித சமூகத்துக்கு ஒளி காட்டி, நேர் வழியின் பக்கம் வழி நடாத்த வந்த நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதம் இது.

'ரபீஉன்” என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்த காலம் பூமிக்கு பசுமையையும், அழகையும், வனப்பையும் கொண்டு வருகின்றது. அதுபோல் வசந்தம் எனப் பொருள்படும் 'ரபிஉனில் அவ்வலில்” பிறந்த நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும், அமைதியையும், மன நிறைவையும் கொண்டுவந்தார்கள்.

ஆன்மீக, லௌகீகத் துறைகளிலெல்லாம் பயங்கர வரட்சி நிலவிய ஒரு காலம் அது. ஒரு வசந்தத்தின் தேவையை, வருகையை அன்றைய பூமி அவசரமாக வேண்டி நின்றது. அந்த வசந்தத்தை சுமந்து வந்தவர்கள்தான் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

இன்றைய உலகின் ஆன்மிக வரட்சியைப் போக்கிடும் ஆற்றலும் உலக அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டும் திறனும் நபியவர்களின் போதனைகளுக்கு நிறைவாகவே உண்டு. மேலும் ஒரு புத்துலகை புதுப்பொலிவுடன் உருவாக்கும் தகுதியும் அப்போதனைகளுக்கு உண்டு.

இறைத்தூதர் முகம்மது நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உணர்ச்சி பூர்வமாக நினைவு கூரும் இந்நன்நாளில் அவர்கள் போதித்த மனித நேயம், அன்பு, கருணை, பிறர் நலன் பேணல், நல்லிணக்கத்துடன் வாழ்தல் முதலான பண்புகளை கடைப்பிடித்து வாழ திட சங்கற்பம் பூணுவதன் மூலம் அன்னார் கொண்டு வந்த தூதுக்கு உண்மைச் சாட்சியம் சொல்லும் கடப்பாடு முஸ்லிம்களுக்கு உண்டு.

நமது தாய் மண்ணில் சாந்தியும் சமாதானமும் மலர வேண்டும். இன நல்லுறவு ஓங்க வேண்டும் என இந்நன்நாளில் பிரார்த்திக்கின்றோம். நம் நாடு சுபீட்சமிக்க ஒரு பூமியாக மிளிர வேண்டும் என்பதே எமது அவாவும் துஆவும் ஆகும்.

 

முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி                
தலைவர், 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் 

பொதுச் செயலாளர்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
பிரதித் தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

 

30.10.2019/ 01.03.1441


முழு உலகினதும் வெறுப்பைப் பெற்றுக் கொண்ட மேலும் இஸ்லாத்தின் அன்பு, இரக்கம், கருணை, கௌரவம் மற்றும் பலவந்தமின்மை போன்ற சிறந்த பண்புகளை எல்லாம் தீவிரவாத பேச்சுக்கள் மூலம் இல்லாமலாக்கி இரத்தம் சிந்த வைத்த ISIS இயக்கத்தின் தலைவர் என்று சொல்லப்படும் அபூபக்ர் அல் பக்தாதியின் மரண செய்தி கேட்டு இலங்கை மட்டுமன்றி முழு உலக முஸ்லிம்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.


ISIS தீவிரவாத இயக்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று 2015 ஆம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும், ஏனைய முஸ்லிம் அமைப்புக்களும் இணைந்து வெளியிட்ட பிரகடனத்தை இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டிக் கொள்கிறோம்.


இலங்கையில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஊக்கம் ஊட்டியதாக சந்தேகிக்கப்படும் இப்பயங்கரவாத அமைப்பின் தலைவரின் மரணம் இலங்கை வாழ் அனைவருக்கும் நிச்சயமாக மன ஆறுதலைத் தருவதாகும்.


இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் உடலை பள்ளிவாசலிற்குள் எடுக்க வேண்டாம் என்றும், முஸ்லிம் அடக்கஸ்தலங்களில் அடக்க வேண்டாம் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்ததை இங்கு நினைவு படுத்துகிறோம்.


மேலும் இது போன்ற வன்முறைகள், கடும் போக்குகள் மற்றும் தீவிரவாத செயற்பாடுகள் போன்றவற்றிலிருந்து தூரமாகி, அவற்றிற்கு ஊக்கமளிக்கும் விடயங்களில் இருந்து விலகி நடக்குமாறும், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு துறையினருக்கு உதவியாக இருக்குமாறும், சமூகத்தில் கடும் போக்கு மற்றும் தீவிரவாத செயல்களின் பால் ஊக்கம் அளிப்பவர்கள் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் கேட்டுக் கொள்கிறது.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

24.10.2019 / 24.02.1441

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்கள்

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பின்வரும் வழிகாட்டல்களை கவனத்திற் கொண்டு செயலாற்றுமாறு இலங்கை முஸ்லிம்களிடம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.

  1. நாட்டில் கடந்த 90 வருடங்களுக்கும் மேலாக அரசியலுக்கு அப்பால் நின்று சமூக, சமய, சன்மார்க்கப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு சிவில் அமைப்பே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பதை சகலரும் அறிவர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு வேட்பாளருக்கும்இ எந்தவோர் அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ செயற்படுவதில்லை. எனவே, ஜம்இய்யதுல் உலமாவின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டாமென வேண்டுகின்றோம்.
  2. பிரபஞ்சத்தின் அத்தனை விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியும் திட்டப்படியுமே நடந்தேறுகின்றன என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள நாம், தேர்தலில் யார் வென்றாலும் அது இறை முடிவு என்பதை உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்வது எமது கடமையாகும்.
  3. ஈருலக வாழ்வின் வெற்றியும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பின்பற்றி வாழ்வதிலேயே தங்கியிருக்கிறது என்பதை புரிந்து வைத்துள்ள நாம், தேர்தல்; காலத்திலும் நபிவழி நின்றே செயற்பட வேண்டும். முஸ்லிம்களின் மிகப் பெரும் ஆயுதம் பிரார்த்தனையாகும். இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய் நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் குடிமக்களது நல்வாழ்வுக்காகவும் அதிகம் பிராரத்திப்போம்; இறையுதவியைப் பெற்றுத் தரும் நற்கருமங்களில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வோம்.
  4. ஜனநாயக நாடொன்றில் எவரும் எந்தக் கட்சியும் தேர்தலில் போட்டியிடலாம். தான் விரும்பும் வேட்பாளரை ஆதரிப்பது அவரவர் உரிமையாகும். இந்த தேசத்தின் குடிமக்களாகிய முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருபோதும் வாக்களிப்பதில் அசிரத்தையுடன் நடந்து கொள்ளலாகாது.
  5. எமது வாக்குகளைப் பெறுபவர்கள் நாட்டை நேசிக்கின்றஇ குடிமக்களின் நலனுக்காக உழைக்கின்றஇ நாட்டைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் மிக்கவர்களாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
  6. பொதுவாகவும் தேர்தல் காலங்களில் குறிப்பாகவும் முஸ்லிம்கள் வார்த்தையளவிலோ செயலளவிலோ எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது. வதந்திகளைப் பரப்புதல், வீண் விதண்டாவதாம், சண்டை- சச்சரவுகள், வன்செயல்களில் ஈடுபடுவது ஈமானைப் பாதிக்கும் அம்சங்கள் என்பதைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
  7. ஆலிம்கள் மிம்பர் மேடைகளில் எந்தவொரு வேட்பாளருக்கும் அரசியல் கட்சிக்கும் சார்பாகவோ எதிராகவோ பேசுவதை முற்றாக தவிர்த்துக் கொள்வதுடன் மேற்குறிப்பிட்ட வழிகாட்டல்களை கடைபிடித்தொழுகுமாறு பொது மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். மேலும் பள்ளிவாசல்களை தேர்தல் பிரசாரங்களுக்கோ அதனுடன் தொடர்புபட்ட வேறு விடயங்களுக்கோ பயன்படுத்தக் கூடாது.
  8. தேர்தல் முடிவடைந்த பின்னர் நிதானமாக நடந்து கொள்வது கடமையாகும். முஸ்லிம் சமூகம் எப்போதும் ஒற்றுமையையும் சகவாழ்வையும் பேணும் வகையில் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.

ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், புத்திஜீவிகள் பொதுவாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேச கிளை அங்கத்தவர்கள் குறிப்பாகவும் மேற்சொன்ன அறிவுறுத்தல்களுக்கமைய பொது மக்களை வழிநடத்த வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.

 

 

அஷ்-ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத்

பிரதித் தலைவர்,

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் நேற்று 21.10.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். சமயத்தலைவர்களை சந்திக்கும் தொடரிலேயே அவர் ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தார்.


இதன் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 1924 ஆம் ஆண்டு இஸ்தாபிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். நீங்களும் இங்கு வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.


எந்தவொரு அரசியல் சாயத்தையும் பூசிக் கொள்ளாத எமது இந்நிறுவனம் அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுக்கு ஒத்துழைத்து வந்துள்ளது. அவ்வாறே நாட்டில் சகல சமூகத்தவர் மத்தியிலும் சமாதானமும் சகவாழ்வும் மலர தன்னாலான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.


எமது நிறுவனம் இந்நாட்டின் வளர்ச்சிக்காக தன்னாலான பல பணிகளை செய்து வருகின்றது. குறிப்பாக சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தவும் சகவாழ்வை கட்டியெழுப்பவும் பல முயற்சிகளை செய்து வந்திருக்கின்றது. அத்துடன் தீவிரவாத, வன்முறை மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை ஜம்இய்யா மேற்கொண்டு வந்துள்ளது. இவற்றுல் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தீவிரவாதத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டுப் பிரகடனம் குறிப்பிடத்தக்கதாகும்.
எமது தாய் நாட்டின் வளர்ச்சிக்கு உங்களது தந்தை முன்னாள் ஜனாதிபதி பிரமேதாச அவர்கள் பாரிய பங்காற்றியுள்ளார். அந்த வகையில் தொடரான அரசியல் பாரம்பரியத்தை கொண்ட நீங்கள் நாம் அனைவரும் இலங்கையராவர் என்ற உணர்வோடு உங்கள் சகல முயற்சிகளையும் அமைத்துக் கொள்வீர்கள் எனவும், இதனை உங்களது இலட்சியமாக எடுத்துக் கொள்வீர்கள் என்றும் எதிர்ப்பார்க்கின்றேன். இந்நாட்டில் சகல சமூகங்களும் ஐக்கியமாக வாழவும், பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும் இந்நாடு முன்னேற்றம் அடையவும் எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிக்க வேண்டுகிறேன் என்று தனதுரையை முடித்தார்.


தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது தேர்தல் தொடர்பான கொள்கைகளில் சிலதை எடுத்துரைத்ததுடன் தான் இன, மத பேதமின்றி நாட்டு மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும் தொடர்ந்தும் அதே முறையில் சேவைகளை முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தனது திட்டங்களை வகுப்பதாகும் தெரிவித்தார்.


அதே போன்று இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் பேச்சுக்கள் யாவற்றையும் தாம் இந்நாட்டில் தடை செய்ய போவதாகவும், அனைத்து இனங்களையும் ஒற்றுமைப்படுத்துவதினூடாக நாம் இலங்கையர் என்ற உணர்வோடு வாழ வழிவகுப்பதாவும் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப செயலாளர்களில் ஒருவரான அஷ்-ஷைக் முர்ஷித் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.


இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாலர் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பௌஷி, ரவூப் ஹகீம், றிஷாத் பதீயுத்தீன், முஜீபுர் ரஹ்மான், மரிக்கார் ஆகியோரும் இன்னும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.


ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 01.09.2019

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு


ஆடைச் சுதந்திரம் என்பது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். எமது நாட்டின் யாப்பின் பிரகாரம் அனைவருக்கும் அச்சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவோம்.


இந்நிலையில் நாட்டில் நடைபெற்ற துன்பியல் நிகழ்வைத் தொடர்ந்து நாட்டில் அசாதாரண நிலை காணப்பட்டதுடன் அவசரகால சட்டமும் அமுல் செய்யப்பட்டது. அவசர கால சட்டத்தின் போது முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கான தற்காலிக தடையும் விதிக்கப்பட்டது. எனினும் கடந்த 08.23 ஆம் திகதியுடன் அவசர கால சட்டம் நீக்கப்பட்டு பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கும் விஷேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் நாட்டு மக்களின் அச்சமும் மனோபாவமும் முழுமையாக மாறியதாக தெரியவில்லை.


இந்நிலையில் முஸ்லிம் சகோதரிகள் முகத்திரை அணிந்து வெளியேறும் போது பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாக இடமுண்டு. அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் இன வாத சக்திகளுக்கு இடமளிக்காமல் பார்த்துக் கொள்வது எமது பொறுப்பாகும்.


எனவே முகத்திரை அணிந்து பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ந்து கொள்ளுமாறும் கால நேர சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு புத்தி சாதூரியமாகவும், அவதானத்தோடும் நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறது. எமது அவதானமான செயற்பாடுகள் எமது உரிமைகளை உரிய முறையில் பாதுகாக்க நிச்சயம் உதவும் என்ற எதிர்பார்ப்பு ஜம்இய்யாவுக்கு இருக்கின்றது.


இலங்கை முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் அனுபவித்து வந்த மதச் சுதந்திரமும், உரிமைகளும், கலாச்சாரமும் தொடர்ந்தும் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடாகும்.

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா