07.07.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவும் மாளிகாவத்தை பிரஜா பொலிஸ் நிலையமும் இணைந்து மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலைக்கு அருகாமையில்  பொதுமக்களுக்கான முகக் கவசம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதன் போது பொது மக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டதுடன் முகக்கவசங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஊடகப் பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

ACJU/MED/2020/007

06.07.2020 (14.11.1441)

சம்பத் வங்கிக் கணக்குகளை நீக்குமாறு ஜம்இய்யா கூறவில்லை

 

கடந்த வாரம் தெஹிவல பகுதியில் உள்ள சம்பத் வங்கிக் கிளையொன்றில் இடம் பெற்ற விவகாரம் தொடர்பில் ஜம்இய்யா தனது மனவருத்தத்தை தெரிவிக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகளை சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் இணைந்து சுமூகமாக தீர்த்துக் கொள்வது சிறந்தது.

 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பத் வங்கிக் கணக்குகளை இரத்துச் செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது எனும் தலைப்பில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு மக்களுக்கு பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றது.

 

முஸ்லிம்களின் பழமை வாய்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நாட்டில் இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் விடயத்தில் அவதானமாக இருக்குமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தொடர்பில் ஆங்காங்கே செய்திகள் வெளிவரும் போது அவற்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் www.acju.lk எனும் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினூடாக உறுதி செய்துக் கொள்ளுமாறும் நாட்டு மக்களிடம் ஜம்இய்யா அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்

உதவிப் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

பொகவந்தலாவ ராஹுல ஹிமி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்

சமூக நல்லிணக்கத்திற்காக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் பொகவந்தலாவ ராஹுல ஹிமி அவர்கள் நேற்று 30.06.2020 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார். இதன் போது நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இஸ்லாம் தொடர்பான விடயங்கள், சமூக நல்லிணக்கத்தில் மதத்தலைவர்களின் வகிபாகம் என பல விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் அல்குர்ஆன் சிங்கள மொழி மூலமான விரிவுரை மற்றும் ஜம்இய்யாவின் வெளியீடுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர் உற்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

2020.06.23 (1440.11.01)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி


அஷ்ஷைக் ஏ.ஸி.எம். இக்பால் (அல் பாஸி) அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. ஜம்இய்யாவின் வளர்ச்சியில் இறுதி வரை பங்காற்றிய ஏ.ஸி.எம். இக்பால் (அல் பாஸி) அவர்கள் இன்று (23.06.2020) வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டக் கிளையின் முன்னாள் செயலாளராகவும், தற்போதைய பொருளாளராகவும் மேலும் மத்தியக் குழுவின் உறுப்பினராகவும் நீண்ட காலம் இருந்து ஜம்இய்யாவின் வளர்ச்சிக்காக உழைத்தார்கள். அன்னாரின் குடும்பத்தினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.


எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக, அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.
வஸ்ஸலாம்.


அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்
உப செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/HIL/2020/002

ஹிஜ்ரி 1441.10.27 (2020.06.19)

 

சூரிய, சந்திர கிரகணங்கள் தொடர்பான வழிகாட்டல்

 

இம்மாதம் (ஜூன்) 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணமும் எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணமும் இன்ஷா அல்லாஹ்   ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிகழவிருக்கும் சூரிய கிரகணம் உலகில் பல பாகங்களில் வலைய சூரிய கிரகணமாக (Annular Solar Eclipse) தென்படும் அதேவேளை இலங்கையில் கொழும்பு நேரப்படி மு.ப. 10:29 மணி முதல் பி.ப. 01:19 மணி வரை பகுதி சூரியக் கிரகணமாக (Partial Solar Eclipse) தென்படும் என அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஜூலை மாதம் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிகழவிருக்கும் சந்திரக் கிரகணம் புறநிழல் சந்திர கிரகணம் (Penumbral Lunar Eclipse)  எனவும் அது இலங்கைக்குத் தென்படாது என்றும் வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி - 1044)

எனவே, இம்மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏற்படவிருக்கும் சூரிய கிரகணத்தை ஒருவர் நேரில் காணும்போது அல்லது கண்டவர்கள் பலரும் அறிவிக்கும் போது கிரகணத் தொழுகையை நிறைவேற்றலாம். கிரகணத் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்படுவது வலியுறுத்தப்பட்ட ஸுன்னத்தாகும் என்பதால் கிரகணத் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும், ஒன்றுகூடுவோரின் எண்ணிக்கை  மற்றும் சமூக இடைவெளிபேணல் போன்ற விடயங்களில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கவனத்திற் கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு பள்ளிவாசல் நிருவாகிகள் மற்றும் ஆலிம்களைக் கேட்டுக் கொள்கிறது. 

 

 

அஷ்-ஷைக் எம். அப்துல் வஹ்ஹாப்   

பிறைக் குழு இணைப்பாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

ACJU/FTW/2020/00-000

 

11.06.2020

19.10.1441

 

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ்

 

19.06.2020 வெள்ளிக் கிழமை ஜுமுஆ நடாத்துவது தொடர்பாக

 

 • நிச்சயமாக அனைவரும் ஜுமுஆ தொழ வேண்டும் என்ற ஆசை உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனினும், அனைவருக்கும் ஜுமுஆ தொழுவதற்கான சாத்தியப்பாடு இல்லாத நிர்ப்பந்தம் இருப்பதால் ஜுமுஆ தொழுகை தொழ சந்தர்ப்பம் கிடைக்காதவர்களுக்கும் ஜுமுஆவை நிறைவேற்றிய நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

 • ஜுமுஆ நடைபெறும் மஸ்ஜித்களில் சமூக இடைவெளி பேணி அனைவரும் ஜுமுஆவை நிறைவேற்ற முடியாது என்பதால், ஏனைய தக்கியாக்கள் ஸாவியாக்கள் போன்ற பொது இடங்களில் உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று ஜுமுஆத் தொழுகையை நிறைவேற்றுவற்கு வக்ப்ஃ சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜமஇய்யத்துல் உலமா வழிகாட்டியுள்ளன.

 

 • இதுவிடயத்தில் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி ஜுமுஆத் தொழுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பவர்கள் மாத்திரம் ஜுமுஆத் தொழுது கொள்வதோடு ஏனையவர்கள் ழுஹ்ருடைய அதான் கூறியதும் ஆரம்பத்திலேயே தாம் இருக்கும் இடங்களில் ழுஹ்ர் தொழுகையை ஜமாஅத்தாக தொழுது கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

 

 • மஸ்ஜித் நிர்வாகிகள் ஜம்இய்யாவின் பிரதேசக் கிளையுடன் இணைந்து ஜுமுஆத் தொழுவதற்கு அனுமதி கொடுப்பதற்கான பொருத்தமான வழிமுறையை கையாளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

 

 • இதுவிடயத்தில் தமக்குக் கிடைத்திருக்கும் சலுகையை பயன்படுத்துவதோடு, இச்சலுகையை நமது நடவடிக்கைகளால் இழப்பதற்கு காரணமாக அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

 

 • தற்போது ஜுமுஆ நடாத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால், அரசாங்கம் கூறும் எண்ணிக்கையினர் சேர்ந்து முடியுமான இடங்களில் உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று ஜுமுஆவை நிறைவேற்றுவது கட்டாயமாகும். முடியுமாக இருந்து அதனை நிறைவேற்றாமல் விட்டுவிடுவது குற்றமாகும்.

 

 • ஊரில் ஜுமுஆ நடாத்தினால் சிலருக்குத்தான் ஜுமுஆ நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும் பலருக்குக் கிடைக்காது என்ற பரிதாபத்திற்காக ஜுமுஆ நடாத்தாமல் இருப்பது தவறாகும்.

 

 

 

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்

செயலாளர் - பத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/FTW/2020/11-395

 

16.06.2020

24.10.1441

 

அன்புடையீர்!

 

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

 

கோவிட் 19 அசாதாரண நிலையில் ஜுமுஆ நடாத்துவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்

 

ஜுமுஆவை நிறைவேற்றுவது மார்க்கத்தில் மிகமுக்கிய கடமைகளில் ஒன்றாகும். அதனை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் பல வழிகாட்டல்களும் நிபந்தனைகளுமுள்ளன. அவற்றைப் பேணிநடப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். அத்துடன் தற்போது நிலவும் கோவிட் 19 அசாதாரண நிலையைக் கவனத்திற்கொண்டு சுகாதார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டல்களைப்பேணி ஜுமுஆவை நிறைவேற்றுதல் வேண்டும்.

 

 1. கோவிட் 19 பரவலைத் தடுப்பதற்காக, மதஸ்தலங்களில் ஒன்றுகூடுவோரின் எண்ணிக்கையை சுகாதார அதிகாரிகள் மட்டுப்படுத்தியுள்ளதால் அதனை விட அதிக எண்ணிக்கையுடையோர் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

 

 1. ஜுமுஆக் கடமை நிறைவேறுவதற்கு நிரந்தரக் குடியிருப்பாளர்கள், பருவவயதை அடைந்த 40 ஆண்கள் சமுகமளித்திருப்பது ஷாபிஈ மத்ஹபின்படி கட்டாயம் என்பதால், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் 40 ஆண்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இடநெருக்கடி அல்லது சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்மை அல்லது வேறு காரணங்களினால், 40 பேரைவிட குறைவான எண்ணிக்கையிருப்பின் அவர்கள் ழுஹ்ர் தொழுதுகொள்ள வேண்டும்.

 

 1. இடநெருக்கடியின் காரணமாக ஓர் ஊரில் பல இடங்களிலும் ஜுமுஆத் தொழமுடியும் என்ற மார்க்க சலுகையின் அடிப்படையில், தற்போதைய சூழலில் சமூக இடைவெளியை பேணி அனைவரும் ஒன்றுசேர்ந்து ஜுமுஆவை நிறைவேற்ற முடியாது என்ற நிலையில், பிரதேசக் கிளை ஜம்இய்யாக்களின் ஆலோசனையுடன் உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று ஜுமுஆ மஸ்ஜித்கள் ஏனைய மஸ்ஜித்கள், தக்கியாக்கள், ஸாவியாக்கள் போன்ற இடங்களில் ஜுமுஆவை நிறைவேற்றிக் கொள்ளல். சுகாதார அதிகாரிகள் (PHI) அனுமதியளிப்பின் மத்ரஸாக்கள், மண்டபங்கள், பொது இடங்கள் போன்றவற்றிலும் ஜுமுஆவை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

 

 1. நோய், பிரயாணம், பயம், மழை தொழுகைக்கு செல்லமுடியாத நிர்ப்பந்தம் போன்ற காரணங்களினால் ஜுமுஆவுடைய கடமையை நிறைவேற்றாமல் விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

 

 1. கோவிட் 19 அசாதாரண சூழ்நிலையில், அரசாங்கம் அனுமதிக்கும் எண்ணிக்கையினரை விட அதிகமானோர் ஒன்று சேர்வது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சமூக இடைவெளியைப் பேணி ஊரிலுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து ஜுமுஆவை நிறைவேற்றுவது சிரமம் என்பதால், ஜுமுஆவை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் ழுஹ்ருடைய தொழுகையை தொழுது கொள்வது போதுமானது. நிர்ப்பந்த நிலையில் ஜுமுஆவை நிறைவேற்ற முடியாமல் போனதால், ஜுமுஆவை விட்ட குற்றம் ஏற்படாது. மாறாக அதற்குரிய நன்மை கிடைக்கும்.

 

 1. இவ்விடயத்தில் ஊர் ஜமாஅத்தினர் தமது மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி, முடியுமானவர்கள் ஜுமுஆவை நிறைவேற்றுவதுடன், ஏனையவர்கள் ழுஹ்ருடைய தொழுகையை தொழுதுகொள்ளல் வேண்டும்.

 

 1. எமது நாட்டில் மஸ்ஜித்களுக்கு பொறுப்பாகவுள்ள வக்ஃப் சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டல்களையும் கவனத்திற் கொள்ளவும்.

 

குறிப்பு : ஓர் ஊரில் பல இடங்களில் ஜுமுஆ நடாத்துவதற்குரிய சலுகை, தற்பொழுது நாட்டில் நிலவும் கோவிட் 19 நெருக்கடி நிலை நீங்கும் வரையாகும். இந்நெருக்கடி நிலை நீங்கி நாடு இயல்புநிலைக்கு திரும்பியதன் பின்பு, இவ்வாறு பல இடங்களிலும் ஜுமுஆக்களை நடாத்துவதை நிறுத்தி, வழமையாக ஜுமுஆ நடைபெற்ற இடங்களில் மாத்திரம் ஜுமுஆக்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதே, மார்க்க விதிகளின்படி ஜுமூஆக்கள் நிறைவேறுவதற்கு காரணமாக அமையும்.

 

மேற்கூறப்பட்ட முறைகளில் ஓர் ஊரில் பல இடங்களில் ஜுமுஆ நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்துகொள்ள முடியாதவர்கள் பத்வாப் பிரிவின் துரித இலக்கத்தை 0117490420 தொடர்பு கொள்ளவும்.

 “அல்லாஹ்வே யாவற்றையும் நன்கு அறிந்தவன்”.

 

 

 

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்

செயலாளர் - பத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/FRL/2020/10/231

13.06.2020

21.10.1441

 

    

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

மஸ்ஜித்கள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் போது ஜமாஅத் தொழுகைகளில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

நாட்டில் கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ் நோய் பரவியதன் காரணமாக மக்கள் ஒன்று கூடும் நிலைமைகளைத் தவிர்ப்பதற்காக மஸ்ஜித்களை மூடிவிட தீர்மானிக்கப்பட்டது. தற்போது சில கட்டுப்பாடுகளுடன் மஸ்ஜித்களை திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அவர்களுடைய வழிகாட்டலில் 50 நபர்களை விட அதிகமாக ஒரு இடத்தில் ஒன்று சேரக் கூடாது என்பது மிக முக்கியமானதாகும்.

ஆகவே, மஸ்ஜித்களில் தொழுகைகாக ஒன்று சேறும் பொழுது பின்வரும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களையும் மஸ்ஜித் நிருவாகிகளையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

 

மஸ்ஜிதுக்கு செல்லும் போது வீட்டிலிருந்தே வுழூ செய்து கொண்டு செல்லல்.

யார் தமது வீட்டிலேயே வுழூ செய்துவிட்டு இறைக் கட்டளைகளான தொழுகைகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் ஒன்றை நோக்கி நடந்து செல்கிறாரோ, அவர் எடுத்துவைக்கும் இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது மற்றொன்று அவருடைய அந்தஸ்த்தை உயர்த்தி விடுகிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹு முஸ்லிம் : 666)

ஸப்புகளில் நிற்கும் போது சமூக இடைவெளி 1 மீற்றர் தூரத்தைப் பேணுதல். நிர்ப்பந்த நிலையில் இவ்வாறு செய்யும் போது அதற்கான பரிபூரண கூலி கிடைக்கும்.

 

சுகாதார அமைச்சினால் ஒரு இடத்தில் 50 பேர்கள் மாத்திரம் ஒன்று சேர்வதற்கு அனுமதியளித்திருப்பதால், அந்த எண்ணிக்கையை மாத்திரம் மஸ்ஜிதுக்குள் அனுமதித்தல்.

 

ஐம்பது நபர்களை விட அதிகமானவர்கள் தொழுகைக்காக ஒன்று சேரக்கூடிய இடங்களில் பல ஜமாஅத்துக்களை நடாத்தலாம். ஒவ்வொரு ஜமாஅத் தொழுகைக்கும் நேரத்தைக் குறிப்பிட்டு மக்களுக்கு அறிவித்தல். முதலாவது ஜமாஅத் முடிந்து மக்கள் வெளியே சென்றதன் பின் அடுத்த ஜமாஅத்தை நடாத்துதல்.

 

குறிப்பாக பஜ்ர் மற்றும் மஃரிப் தொழுகையுடைய நேரங்கள் சுருக்கமாக இருப்பதனால் அதிகமாக மக்கள் ஒன்று சேரக்கூடிய மஸ்ஜித்களில், ஆரம்ப நேரத்திலே முதலாவது ஜமாஅத்தை நடாத்தி அதனைத் தொடர்ந்து தேவைக்கேற்ப பல ஜமாஅத்துக்களை நடாத்திக் கொள்ளலாம். இதற்காக மஸ்ஜித்களில் கடமை புரியும் இமாம்களுடன், மஹல்லாவில் இருக்கும் இமாமத்துக்குத் தகுதியானவர்களை நியமித்துக் கொள்ளலாம்.

 

முன், பின் சுன்னத்தான தொழுகைகளை தத்தமது வீடுகளிலே தொழுது கொள்ளல்.

 

சிறு பிள்ளைகள் மற்றும் நோயாளிகள் தற்போதைக்கு மஸ்ஜிதுக்கு சமுகமளிக்காமல், வீடுகளிலே தொழுது கொள்வது சிறந்தது. அதற்கான பரிபூரண கூலியை அல்லாஹ் வழங்குவான்.

 

வஸ்ஸலாம்

 

 

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்      

செயலாளர் - பத்வாக் குழு        

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா     

12.06.2020

கொவிட் 19 தொடர்பாக ஆரம்பம் முதல் மேற்கொள்ளப்பட்ட ஜம்இய்யாவின் சமூக சேவைகள் தொடர்பாக

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டில் அவ்வப்போது ஏற்பட்ட சுனாமி, யுத்தம், வெள்ளம் போன்ற அனர்த்தங்களின் போது பலரினதும் உதவிகளுடன் பல்வேறுபட்ட நிவாரணங்களை சமூக சேவைப் பிரிவினூடாக செய்ததை யாவரும் அறிவோம். உடனடித் தேவைகளாக இருந்த உலர் உணவுகளை வழங்குதல், தற்காலிக தங்குமிட வசதி போன்றவற்றையும் மற்றும் நிரந்தர தேவைகளான புணர் நிர்மாணம், மீள் கட்டமைப்பு போன்றவற்றையும் ஜம்இய்யா செய்து வந்துள்ளது. இதற்காக பலரும் பல வழிகளிலும் உதவிகள் செய்ததை ஜம்இய்யா நன்றியுடன் நினைவு கூர்கின்றது.

 

அந்த வகையில் இம்முறை கொவிட் 19 இலங்கையில் பரவ ஆரம்பித்தது முதல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இது தொடர்பில் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை முன்னெடுத்தது. இவற்றுள் மக்களுக்கான மார்க்க மற்றும் பொதுவான வழிகாட்டல்கள் வழங்கியமை, ஊரடங்கு காரணமாக தொழில்களை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை ஏற்பாடுச் செய்தமை போன்றவை முதன்மையானதாகும்.

 

மக்களுக்கான வழிகாட்டல் விடயத்தில் ஜம்இய்யா 25 அறிக்கைகள், 15 வீடியோக்கள், 23 சுவரொட்டிகள் மற்றும் 10 வானொலி நிகழ்ச்சிகள், 06 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றினூடாக மும்மொழிகளிலும் பல மார்க்க மற்றும் பொதுவான வழிகாட்டல்களை ஆரம்பத்திலிருந்தே வழங்கி வந்தது. இவ்வழிகாட்டல்களில் நிவாரணங்களுக்காக சதகா மற்றும் ஸகாத் பணங்களை செலவழிப்பது தொடர்பான பூரண வழிகாட்டல்கள் வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

 

முன்னைய காலங்கள் போன்றல்லாது இவ்வைரஸின் பரவலானது பல்வேறு ரீதியில் நாட்டின் அனைத்து பகுதிகளும் மக்களைப் பாதித்த ஒரு பிரச்சினையாக இருந்ததை கவனத்திற் கொண்டு ஜம்இய்யா நேரடியாக நிவாரணங்களை முன்னெடுத்து வந்ததுடன், தனது 24 மாவட்டக்கிளைகளினூடாக நிவாரண மையங்களை நாடளாவிய ரீதியில் அமைப்பதற்கான வழிகாட்டல்களை வழங்கி, பலரின் ஒத்துழைப்புடன் சுமார் 60 இற்கும் மேற்பட்ட நிவாரண மையங்களை நாடளாவிய ரீதியில் செயற்படுத்தியது. இம்மையங்களினூடாக ஜம்இய்யா மஸ்ஜித்களை இணைத்து பாரிய நிவாரணப் பொறிமுறையொன்றை நிறுவியது. இதன் மூலம் பல மாவட்டங்களிலும் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

 

இந்நிவாரண பொறிமுறையினூடாக நிரந்தர நோயாளிகள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள், கொரோனாவால் அன்றாட தொழில்களை இழந்தவர்கள், விதவைகள் என பலதரப்பட்டவர்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வந்தது. அதே போன்று மஸ்ஜித் இமாம், முஅத்தின் மற்றும் மக்தப் முஅல்லிம்களுக்கான நிவாரணங்களையும் வழங்கியதுடன் ஜம்இய்யா இந்நிவாரணப்பணிகளில் தன்னாலான பண உதவிகளை முழுமையாக செலவழிக்கவும், தேசிய ரீதியில் கொவிட்19 தொடர்பான விடயங்களுக்காக ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டு சேகரிக்கப்படும் நிதியத்திற்காகவும் ஒரு தொகை நிதியை ஒதுக்கீடு செய்து அதற்கான பங்களிப்புக்களை வழங்கவும் தவறவில்லை. அல்லாஹுதஆலா இப்படியானதொரு தருணத்தில் நாம் செய்த அனைத்து தர்மங்களையும் ஏற்று இந்த வைரஸின் தாக்கத்திலிருந்து முழு உலகையும் அவசரமாக மீட்க வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.

 

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

குறிப்பு: இது தொடர்பான விரிவாக அறிக்கையை கீழுள்ள லிங்கில் பெற்றுக் கொள்ள முடியும்.

 

 (Link: add the link) https://bit.ly/2BZM1qI 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் சுகாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

 

கொவிட் 19 வைரஸுக்கு எதிரான பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினாலும் பல்வேறு நிறுவனங்களினாலும் நடைபெறும் இச்சந்தர்ப்பத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பங்களிப்பாக “கொவிட்-19 வைரஸுக்கு எதிரான போராட்டம்” என்ற தொணிப் பொருளின் கீழ் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் வைரஸ் கிருமித் தொற்று நீக்கி,  சுகாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஒன்று 10.06.2020 ஆம் திகதி ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

 

இத்திட்டத்தின் கீழ் மத்திய கொழும்புப் பிரதேச மாளிகாவத்தைப் பகுதியில் உள்ள விகாரைகள், தேவாலயங்கள், இந்துக் கோவில்கள், பள்ளிவாசல்கள், வைத்தியசாலைகள்,  பொலிஸ் நிலையங்கள் மற்றும் கொழும்பு பிரதேசச் செயலகம் என்பனவற்றிற்கு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 

இதன்போது 10 ஆயிரம் பேருக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்வின் முதற்கட்டமாக உலமா சபையின் அங்கத்தவர்களினால் மாளிகாவத்தைப் பிரதேசத்தில் முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

 

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் கலீல், அஷ்-ஷைக் எஸ்.எல்.நௌபர், அஷ்-ஷைக் தாஸிம்,  அஷ்-ஷைக்  அர்க்கம் நூராமித் ஆகியோரும் சமாதி தர்மாயத்தன விஹாரையின் விஹாராதிபதி தங்கல்லே சாரத தேரர், மாளிகாவத்தை இந்துக்கோவிலின் பிரதம குருக்கள் இரா நீதிராஜ குருக்கள், மாளிகாவத்தை வைத்தியசாலையின் பிரதான வைத்தியர் ருச்சிர சமனபால, வைத்தியசாலையின் நிருவாக உத்தியோகத்தர் திருமதி மெனிக்கே, கொழும்பு பிரதேசச் செயலகத்தின் அதிகாரி அஜித் சமந்த குமார, மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் பிரஜா பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி எம்.டபிள்யு.எம்.விஜயகோன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா