ACJU/MED/2020/006

04.06.2020  12.10.1441

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

 

அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ஹனீபா (பஹ்ஜி) அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னால் தலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் இப்ராஹிம் இப்னு ஒமருலெப்பை அவர்களின் புதல்வரும், நாடறிந்த உலமாக்களில் ஒருவருமான அஷ்-ஷைக் எம்.ஐ.எம் ஹனீபா (பஹ்ஜி)  அவர்கள் இன்று (04.06.2020) வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

 

கண்டி தஸ்கர ஹக்கானிய்யா அரபுக் கலாபீடத்தின் ஆயுட்கால தலைவராகவும், சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றி வந்த இவர்கள் தனது வாழ்நாளை கல்வி மற்றும் தீன் பணிக்காகச் செலவழித்தார்கள். இவர்கள் பல்லாயிரம் மாணவர்களின் ஆசிரியராக திகழ்ந்ததுடன் நடுநிலையானப் போக்கோடு இருந்து வந்தார்கள்.

 

அரசாங்கப் பாடசாலை ஆசிரியரான இவர்கள் இலங்கையின் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்கள். தஸ்கர ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியுடன் பிணைந்து செயற்பட்ட இவர்கள் இறுதி வரை கல்விப் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார்கள். இதன் விளைவாக பல கல்விமான்களை இப்பூமியில் உருவாக்கியப் பெருமை இவரைச் சாரும்.

 

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக. அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.

 

வஸ்ஸலாம்.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

03.06.2020 CE / 11.10.1441AH

புறநிழல் சந்திர கிரகணம் தொடர்பாக

 

இவ்வருடம் ஜூன் மாதம் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) இன்ஷா அல்லாஹ் புறநிழல் சந்திர கிரகணம் (Penumbral Lunar Eclipse) ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிகழவிருக்கும் இப்புறநிழல் சந்திர கிரகணம் கொழும்பு நேரப்படி வெள்ளிக்கிழமை (05 ஆம் திகதி) இரவு 11:15 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 02:34 மணி வரை ஏற்படவுள்ளதாகவும் அது இலங்கையில் தென்படலாம் எனவும் அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

புறநிழல் சந்திர கிரகணத்தின் போது சந்திரனின் வெளிச்சத்தில் மங்கலான ஒரு நிலையே ஏற்படும். சந்திரன் பூரணமாகவோ அல்லது அதில் ஒரு பகுதியோ மறைவதில்லை. சூரியன் அல்லது சந்திரன் முழுமையாக அல்லது அவற்றில் ஒரு பகுதி மறைவதைக் காணும் போதுதான் கிரகணத் தொழுகை நிறைவேற்றப்படுவது சுன்னத்தாகும். எனவே, புறநிழல் கிரகணத்தின் போது கிரகணத் தொழுகை நிறைவேற்றப்படுவது சுன்னத்தாகமாட்டாது. இதனடிப்படையில் இதன்போது கிரகணத் தொழுகையை நிறைவேற்ற அவசியமில்லை என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.

“சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. ஆகவே அவ்விரண்டையும் நீங்கள் (மறையக்) கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தர்மம் செய்யுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி - 1044)

 

அஷ்-ஷைக் எம். அப்துல் வஹ்ஹாப் 

பிறைக் குழு இணைப்பாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

25.05.2020

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பெருநாள் வாழ்த்துச் செய்தியின் திகதி தொடர்பாக

 

வருடாந்தம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் பெருநாள் வாழ்த்துச் செய்தி வெளியிடப்படுவதை யாவரும் அறிந்ததே. அந்த வகையில் இவ்வருடம் (2020 ) ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியும் ஜம்இய்யாவின் ஊடகப் பிரிவால் வெளியிடப்பட்டது.

 

தமிழ், சிங்கள மொழியிலான அவ்வாழ்த்துச் செய்தியில் 24.05.2020 என திகதியிடுவதற்குப் பதிலாக 23.05.2020 என ஜம்இய்யாவின் ஊடகப் பிரிவினால் தவறுதலாக இடப்பட்டிருந்தது. அதற்காக வருந்துகிறோம்.

 

தவறைச் சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அல்லாஹுதஆலா நம்மனைவரது செயற்பாடுகளையும் பொருந்திக் கொள்வானாக.

 


எம்.எச்.எம். பர்ஹத்
ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/MED/2020/005

23.05.2020 / 29.09.1441

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் நோன்புப் பெருநாள் செய்தி

கொவிட் 19 காரணமாக மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில்  ஒரு மாத காலம் தொடராக நோன்பு நோற்று, நற்காரியங்களில் ஈடுபட்டு விட்டு இன்று பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்;களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது. அல்லாஹுதஆலா நாம் நோற்ற நோன்பை அங்கீகரித்து அவனது உயரிய நற்கூலியை தந்தருள வேண்டுமென பிரார்த்தனையும் செய்கின்றது.

எமது நாட்டையும், நாட்டு மக்களையும் கொவிட் 19 யின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு வழமை போன்றல்;லாது சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரின் வழிகாட்டல்களைப் பூரணமாக ஏற்று மிகவும் எளிமையான முறையில் தத்தமது குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் வீட்டில் இருந்த படியே இம்முறை பெருநாளைக் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றோம். தொடர்ந்தும் எமது தாய்நாட்டை இந்த தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் உறுதிபூண்டு ஒற்றுமையுடன் ஒன்றாக செயற்பட அல்லாஹுதஆலா  அருள் புரிய வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம்.

இவ்வினிய தினத்தில் இஸ்லாமிய போதனைகளை உரிய முறையில் பின்பற்றுவதுடன் முழு உலக மக்களும், குறிப்பாக எமது தாய் நாடும்; இந்த வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபட அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.

இந்த வைரஸ் தொற்றிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பதற்காக பாடுபடும் அரசாங்கம், அரச ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் இந்த நெருக்கடி சூழ்நிலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளை வழங்கி வரும் சுகாதார சேவைப் பணியாளர்கள், முப்படைகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இன்றைய இனிய நோன்புப் பெருநாள் தினத்தில் மனமார்ந்த நன்றிகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கின்றது.

 

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்

உதவிப் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/FTW/2020/05

22.05.2020

28.09.1441

 

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ

 

இவ்வருட நோன்புப் பெருநாள் தொழுகை சம்பந்தமான சில வழிகாட்டல்கள்

 

 1. ஏலவே அறிவுறுத்தப்பட்டதற்கு ஏற்ப நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரன சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு பெருநாள் தொழுகையை வீட்டில் ஜமாஅத்தாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

 

 1. பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது சுன்னத் முஅக்கதாவாகும். இதனை தனியாக தொழுவதற்கு அனுமதியிருந்தாலும், ஜமாஅத்தாக நிறைவேற்றுவதே சிறந்ததாகும்.

 

 1. சூரியன் உதயமானதிலிருந்து உச்சத்தை அடையும் வரை பெருநாள் தொழுகையை நிறைவேற்ற முடியும். என்றாலும், சூரியன் ஓர் ஈட்டிப் பிரமானம் உயர்ந்ததிலிருந்து (15 நிமிடங்கள் கழிந்ததிலிருந்து) தொழுது கொள்வது சிறந்ததாகும்.

 

 1. பெருநாள் தொழுகைக்கென அதான், இகாமத் கிடையாது.

 

 1. பெருநாளுடைய தொழுகை இரண்டு ரக்அத்கள் கொண்ட தொழுகையாகும். சுன்னத்தான நோன்புப் பெருநாள் தொழுகையைத் தொழுவதாக நிய்யத் வைத்து, தக்பீர் கூறி கைகளைக் கட்டியதன் பின் வஜ்ஜஹ்த்து துஆவை ஓதுவது சுன்னத்தாகும்;;. இது போன்ற ஹதீஸில் வந்துள்ள வேறு துஆக்களையும் ஓதலாம்.

 

 1. பின்னர் ஏழு தக்பீர்கள் கூறி ஒவ்வொரு தக்பீருக்கும் ஆரம்ப தக்பீர் போன்று கைகளை உயர்த்திக் கட்டுதல் வேண்டும். அவ்வாறே, இரண்டாவது ரக்அத்திலும் முதல் தக்பீர் (ஸூஜுதிலிருந்து நிலைக்கு வரும்) தவிர்த்து ஜந்து தக்பீர்கள் கூறி, கைகளைக் கட்டிக்கொள்ளுதல் வேண்டும். இரண்டு ரக்அத்துக்களிலும் ஒவ்வொரு தக்பீர்களுக்குமிடையில், سُبْحَانَ اللهِ، وَالْحْمدُ لِلّهِ، وَلَا إِلهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ போன்ற திக்ர்களை  ஓதிக்கொள்ளலாம்.

 

 1. இரண்டு ரக்அத்திலும் தக்பீர்கள் முடிந்ததன் பின் ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுவது கட்டாயமாகும். பிறகு, ஏதாவது ஒரு ஸூராவை ஓதுவது சுன்னத்தாகும். ஒரு ஸூராவும் மனனமில்லை என்றால் ஸூரத்துல் ஃபாத்திஹா மாத்திரம் போதுமானது.

 

 1. என்றாலும், முதலாவது ரக்அத்தில் ஸூரத்துல் (الأعلى) அஃலாவையும், இரண்டாவது ரக்அத்தில் ஸூரத்துல் (الغاشية) ஙாஷியாவையும் மனனமுள்ளவர்கள் ஓதுவது சுன்னத்தாகும்.

 

 1. ஒருவர் தனியாக தொழுகையை நிறைவேற்றினால் அவர் பெருநாள் தொழுகையான இரண்டு ரக்அத்துக்களை மாத்திரம் தொழுது கொள்வார்.

 

 1. இரண்டு நபர்கள்; அல்லது அதைவிடக் கூடுதலானவர்கள் இருந்தால் குத்பாவை நிகழ்த்தலாம். ஜுமுஆவுக்குத் தேவையான எண்ணிக்கை அவசியமில்லை.

 

 1. பெருநாள் தொழுகையின் பின், பெருநாளுடைய குத்பாவை நிகழ்த்துவது சுன்னத்தாகும். அது ஜுமுஆவுடைய குத்பாவைப் போன்று நிகழ்த்தப்படல் வேண்டும். என்றாலும், பெருநாளுடைய முதலாவது குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டும், இரண்டாவது குத்பாவை ஏழு தக்பீர்களைக் கொண்டும் ஆரம்பித்தல் வேண்டும்.

 

 1. ஜுமுஆவுடைய இரு குத்பாக்கள் போன்று பெருநாளுடைய குத்பாவையும் செய்தல் வேண்டும். இரு குத்பாக்களிலும் பின்வருவனவற்றை அறபியில் கூறுவது போதுமானது.

الْحْمدُ لِلّهِ

والصّلاَةُ  والسّلاَمُ عَلَى مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

واتَّقُوا الله

 

மேலும், இரு குத்பாக்களில் ஏதாவது ஒன்றில் அல்-குர்ஆன் வசனம் ஒன்றை ஓதுதல். இரண்டாவது குத்பாவில் اللهُمَّ اغْفِرْ لِلمُؤمِنِيْنَ والمُؤْمِنَاتِ என்று கூறி முஃமின்களுக்காக துஆச் செய்து குத்பாவை நிறைவு செய்தல் வேண்டும். மாதிரி குத்பா இணைக்கப்பட்டுள்ளது.

 1. குத்பாவை நிறைவு செய்ததன் பின் விரும்பினால் உபதேசம் ஒன்றை நிகழ்த்தலாம்.

 

 1. மேற்குறித்த விடயங்களை ஓதி குத்பாவை நிகழ்த்தக் கூடியவர் யாரும் இல்லையெனில் தொழுகையுடன் போதுமாக்கிக்கொள்ள முடியும். ஏனெனில், பெருநாள் தொழுகை நிறைவேறுவதற்கு குத்பா அவசியமில்லை.

 

 1. ஜமாஅத்தாக தொழும்போது ஆண்களே இமாமத் செய்தல் வேண்டும்;. பெண்கள் மாத்திரம் ஜமாஅத்தாக தொழும் நிலை ஏற்பட்டால், பெண்களில் ஒருவர் இமாமத் செய்ய முடியும். இச்சந்தர்ப்பத்தில் பெண்களுக்கு குத்பா இல்லை. பெண்களில் ஒருவர் சிறிய உபதேசம் ஒன்று செய்து கொள்ளலாம்.

 

 1. தற்கால அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பெருநாள் தொழுகை மற்றும் குத்பாவை வீட்டில் உள்ளவர்கள் மாத்திரம் ஒன்று சேர்ந்து நிறைவேற்றல் வேண்டும்.

 

 1. ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள், பெருநாள் தொழுகைக்கு முன்பு அதனை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

 

 1. பெருநாளுடைய நாளில் மேற்கொள்ளப்படும் சுன்னத்தான காரியங்களை நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நிறைவேற்றிக் கொள்ளல் வேண்டும்.

 

 

அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்

செயலாளர் - ஃபத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸூரி

மேற்பார்வையாளர் - ஃபத்வாக் குழு    

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

               

அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிழ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

   

 

மாதிரி பெருநாள் குத்பா

முதலாவது குத்பா :

اللَّهُ أَكْبَرُ  اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ  اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ وَالصًّلاَةُ وَالسَّلَامُ عَلَى مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلّى الله عَلَيْهِ وَسَلًّمَ. أٌمّا بَعْدُ

يَا أًيُّهَا النَّاسُ اتَّقُوا الله قَالَ الله تَعَالىَ أَعُوْذُ بِالله مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ

وقال النبي صلى الله عليه وسلم قال: ((الدِّين النَّصِيحَةُ))

أَسْتَغْفِرُ اللهَ لِيْ وَلَكُمْ فَاسْتَغْفِرُوْهُ إنَّهُ هُوَ الغَفُوْرُ الرَّحِيْمُ

இரண்டாவது குத்பா :

 

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ  اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ وَالصلاة والسَّلَامُ عَلَى مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. أمَّا بَعْدُ

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا اللهَ قَالَ اللهُ تَعَالى أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

وَارْضَ  اللّهُمَّ عَنِ الخُلَفَاءِ الأَرْبَعَةِ وَجَمِيْعِ الصَّحَابَةِ رَضِيَ اللهُ عَنْهُمْ أَجْمَعِيْنَ.

اللهُمَّ اغْفِرْ لِلمُؤمِنِيْنَ والمُؤْمِنَاتِ والمُسْلِمِينَ والمُسْلِمَاتِ

بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ

 

ACJU/MED/2020/003

19.05.2020

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் மரண செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. இலங்கையின் தலைசிறந்த கால்விமான்களில் ஒருவரும்,  பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளருமான கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் இன்று (19.05.2020) வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் மரணம் இலங்கைவாழ் மக்களுக்கேற்பட்ட பெரும் இழப்பாகும்.

 

தனது வாழ்நாளை கல்வி மற்றும் தீன் பணிக்காக செலவழித்த இவர்கள் அகில  இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோடு நல்லுறவோடு இருந்து வந்தார்கள். தேவையான போது நல்லாலோசனைகளையும் தருவதில் பின் நிற்கவில்லை. உலமா சபை நடாத்திய பல மாநாடுகள், கருத்தரங்குகளில் பங்கு கொண்டு ஆய்வுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்கள்.

 

பன்னூல் ஆசிரியரான இவர்கள் இலங்கையின் பல பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்கள். பல்லாயிரம் மாணவர்களின் ஆசிரியராக திகழ்ந்த இவர்கள் நடுநிலையான போக்கோடும், உலமாக்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்போடும் இருந்து வந்தார்கள்.

 

ஜாமிஆ நளீமிய்யாவுடன் பிணைந்து செயற்பட்ட இவர்கள் இறுதி வரை கல்விப் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார்கள். இதன் விளைவாக பல கல்விமான்களை இப்பூமியில் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும்.

 

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக, அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.

வஸ்ஸலாம்.

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

ACJU/MED/2020/002

17.05.2020

ரமழானின் இறுதிப் பகுதி மற்றும் பெருநாள் தினம் தொடர்பான வழிகாட்டல்கள்

கொவிட் 19 வைரஸின் பரவலுக்கு மத்தியில் இம்முறை நாம் எமது ரமழான் நோன்புகளை நோற்று வந்து, தற்போது ரமழான் மாதத்தின் இறுதிப் பகுதியை அடைந்திருக்கின்றோம். இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து அனைவரும் அவசரமாக இயல்பு வாழ்விற்கு திரும்ப இப்புனித ரமழான் மாதத்தில் பிரார்த்திக்கும் அதேநேரம் பின்வரும் வழிகாட்டல்களைப் பேணி நடக்குமாறு ஜம்இய்யா அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.

 

ரமழான் மாதாத்தின் இறுதிப் பகுதி தொடர்பானவை:

 • ரமழானின் இறுதிப் பகுதி நன்மைகளை அதிகம் ஈட்டித் தரும் பகுதியாகும். ஆகவே இத்தினங்களில் அனைவரும் தமது இல்லங்களில் இருந்த வண்ணம் அதிகமதிகம் நல்லமல்களில் ஈடுபட்டு புனித லைலத்துல் கத்ரை அடைய முயற்சிக்க வேண்டும்.

 

 • ரமழானின் இறுதிப் பகுதியில் இஃதிகாப், இரவு நேர வணக்கங்களுக்காக மஸ்ஜித்களில் ஒன்றுகூடுவதை முற்றாக தவிர்த்து இது தொடர்பாக வக்ப் சபையும், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் வழங்கியிருக்கும் வழிகாட்டல்களைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

 

 • ஊரடங்கு பல மாவட்டங்களில் பகுதி நேரமாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் அத்தியவசியத் தேவைகளுக்காகவே அன்றி வெளியில் செல்வதை தவிர்ந்துக் கொள்வதுடன் வெளியில் செல்லும் போது முகக்கவசம் (மாஸ்க்) அணிதல், சமூக இடைவெளியைப் பேணல் போன்ற அரசாங்கத்தின் வழிகாட்டல்களை தொடர்ந்தும் கடைபிடிப்பது அவசியமாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மேற்குறிப்பிட்ட வழிகாட்டல்களை பின்பற்றுவது இஸ்லாமிய போதனை என்பதால் இவ்விடயத்தில் முஸ்லிம்கள் முன்மாதிரியுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.

 

 • நோன்புப் பெருநாளை அண்மித்த காலப் பகுதிகளில் நாம் பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் கூட்டம் கூட்டமாக ஒன்று கூடுவதை முற்றாகத் தவிர்த்து, இது தொடர்பில் அரசாங்கமும் சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றி நடப்பதுடன் முடியுமானளவு வீட்டிற்கு வினியோகம் செய்யும் முறையினூடாக (Home Delivery) தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வது பாதுகாப்பானதாகும்.

 

 • ஸகாத்துல் ஃபித்;ரை நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள், பெருநாள் தொழுகைக்கு முன்பு நிறைவேற்றல் வேண்டும். அத்துடன் ஏலவே வழிகாட்டப்பட்டது போல் மஸ்ஜித்கள் ஊடாக கூட்டாக இதனை வழங்குவது சிறந்ததாகும்.

 

பெருநாள் தினம் தொடர்பானவை:

 

 • இம்முறை நெருக்கடியானதொரு சூழலில் நோன்புப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம் என்ற உணர்வுடன் நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்பிற்காக வழங்கப்படுகின்ற அனைத்து வழிகாட்டல்களையும் உரிய முறையில் பேணி பெருநாள் தினத்தில் நடந்துக் கொள்ள வேண்டும்.

 

 • பெருநாள் தொழுகையை பள்ளிவாசலிலோ, திடல்களிலோ கூட்டாக தொழுவதை முற்றாகத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும். மாறாக எமது வீடுகளிற்குள்ளேயே எமது குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் இணைந்து பெருநாள் தொழுகையை தொழுது கொள்ள வேண்டும்.

 

 • இம்முறை பெருநாளை வீட்டிலுள்ளவர்களுடன் மாத்திரம் பாதுகாப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளல். அத்துடன் வீண் பிரயாணங்களையும் ஒன்று கூடல்களையும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.

 

 • பெருநாள் தினத்திலும் ஏனைய தினங்களிலும் மற்றவர்களுடன் முஸாபஹா, முஆனகா செய்வதை முற்றாகத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.

 

 • ஷவ்வால் மாதப் பிறை தென்பட்டதிலிருந்து பெருநாள் தொழுகை வரை அதானுக்குப் பின்னர் மஸ்ஜித்களில் தக்பீரை ஒலிபெருக்கியில் சொல்வதற்காக ஒருவரை நியமித்து ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.

 

 • பெருநாள் தினங்களில் ஏழை எளியவர்கள் விடயத்திலும் கரிசணை காட்டி தம்மாலான உதவிகளை செய்து கொள்ள வேண்டும்.

 

எல்லாம் வல்ல அல்லாஹ் எமது நல்லமல்களையும் நோன்பையும் பொருந்திக் கொண்டு, இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து முழு உலக மக்களையும் பாதுகாப்பானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்.

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

குறிப்பு: மேற்படி வழிகாட்டல்களை பொருத்தமான ஒரு நேரத்தில் அதானுக்குப் பிறகு மஸ்ஜித் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு வாசித்துக் காட்ட ஏற்பாடு செய்யுமாறு சகல மஸ்ஜித் நிர்வாகிகளையும் அன்பாகக் கேட்டுக் கொள்ளும் அதேநேரம் இவற்றை நடைமுறைப்படுத்துவதில் சகலரும் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

09.05.2020

 

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

இவ்வருடம் ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றுவது சம்பந்தமான சில வழிகாட்டல்கள்

 1. ஸகாத்துல் ஃபித்ர் என்பது, ஷவ்வால் மாதத் தலைப்பிறைக் கண்டதும் வசதியுள்ளவர்கள் மீது கடமையாகும் ஒரு தர்மமாகும். “ஸகாத்துல் ஃபித்ர் நோன்பாளியின் பாவங்களை சுத்தப்படுத்தக்கூடியதாகவும், ஏழைகளின் உணவாகவும் இருக்கின்றது” என்று நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

 1. பொதுவாக ஷவ்வால் பிறைக் கண்டதும் ஸகாத்துல் ஃபித்ர் கொடுப்பது கடமையாகும். என்றாலும், ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில் ரமழான் மாத பிறை தென்பட்டதிலிருந்து அதனை நிறைவேற்ற முடியும்.

 

 1. ஸகாத்துல் பித்ரை நிறைவேற்றும் பொழுது, ஹனபி மத்ஹபின் அடிப்படையில் பெறுமதியைக் கொடுக்க அனுமதி இருந்தாலும், இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ மற்றும் இமாம் அஹ்மத் போன்ற பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்துப்படி, பிரதான உணவாக உட்கொள்ளக் கூடிய தானிய வகையில் இருந்தே வழங்கப்பட வேண்டும். இதற்கு மாற்றமாக அதன் பெறுமதியைக் கொடுக்க முடியாது. இதுவே, ஆதாரப்பூர்வமான கருத்தாகும்.

 

 1. இதனை நிறைவேற்றக்கடமையான ஒவ்வொருவரும் “ஒரு ஸாஃ” அளவு வீதம், அதாவது 2.4 கிலோ கிராம் கொடுத்தல் வேண்டும்.

 

 1. தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, ஸகாத்துல் பித்ரை, தகுதியானவர்களை இனங்கண்டு வீடு வீடாகச் சென்று கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.

 

 1. ஊர் பிரமுகர்கள் அல்லது மஸ்ஜித் நிர்வாகம் அல்லது ஊரில் பொதுச் சேவையில் ஈடுபடும் நிறுவனம், 2.4 கிலோ கிராம் அரிசிக்கான பெறுமதியை நிர்ணயித்து, ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் பெறுமதியை ஒப்படைப்பவர்களின் சார்பாக அரிசியை வாங்கி தகுதியானவர்களுக்கு வினியோகம் செய்வோம் என்று ஊர் மக்களிடம் அறிவிப்புச் செய்து, அதனைப் பெற்று பெருநாள் தொழுகைக்கு முன் ஸகாத் பெறத் தகுதியானவர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி வேண்டிக் கொள்கின்றோம்.

 

 

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்

செயலாளர் - பத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

07.05.2020

Dr. அனில் ஜயசிங்க

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

மதிப்பிற்குரிய டாக்டர் அவர்களே,

கொவிட்-19 தொற்று காரணமாக மரணித்து தகனம் செய்யப்பட்ட ஒரு முஸ்லிமின் சாம்பலை புதைப்பதில் உள்ள தெளிவற்ற நிலை தொடர்பான விளக்கம் மற்றும் அவ்வாறு மரணித்த ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதித்து தங்களது தற்போதைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளல்

இலங்கையில் கொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த, இந்த சவாலான காலங்களில் அயராது உழைத்து, பணிபுரியும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும், குறிப்பாக தாங்களுக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். உண்மையில், நீங்களும் உங்கள் குழுவும் தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் இப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டல்களின் படி மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுத்தப்படுகின்றதன் படி கொவிட்-19 காரணமாக இறந்த ஒரு முஸ்லிம்  அடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எமது மற்றும் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகின்றோம். ஏனெனில், இது எங்கள் விசுவாசத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அத்துடன் இறந்தவர்களுக்கு சமூகத்தால் செய்யப்படக் கூடிய ஒரு மார்க்கக் கடமையுமாகும்.

ஆரம்பத்தில் இருந்தே, நாங்கள் இந்த விஷயத்தை உரிய அதிகாரிகளுக்கு அழகிய முறையில் வலியுறுத்தி வரும்; அதேநேரம் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். தகவலுக்காக இது தொடர்பாக எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் சிலதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஆரம்பத்தில் நீதித்துறை மருத்துவ அதிகாரியினால் (JMO)  வெளியிடப்பட்ட SOP யில் கொவிட்-19 வைரஸால் இறந்தவர்களை அடக்கம் செய்வதை அனுமதிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளுமாறு கோரி அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு மார்ச் மாதம் 24ந் திகதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. எங்களது கோரிக்கையையும் ஏனைய சிவில் அமைப்புக்கள் மற்றும் துறைசார்ந்தவர்களின் கோரிக்கைகளையும் கருத்திற் கொண்டு, தேவையான மாற்றங்களைச் செய்து, அடக்கம் செய்வதற்கான அனுமதியுடன் மார்ச் மாதம் 27ந் திகதி “கொவிட்-19 சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை கையாளுதல் விடயத்தில் மருத்துவ நடைமுறை வழிகாட்டுதல்” (Provisional Clinical Practice Guidelines on COVID-19 suspected and confirmed patients)  என்ற ஆவணம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டது.

என்றாலும் துரதிர்ஷ்டவசமாக, மார்ச் மாதம் 31ந் திகதி மேலே குறிப்பிடப்பட்ட ‘வழிகாட்டல்கள்’ திடீரென திருத்தப்பட்டு எவ்வித விஞ்ஞான ரீதியான காரணங்களும் நியாயங்களும் முன்வைக்கப்படாமல் அடக்கம் செய்யப்படுவதற்கான அனுமதி நீக்கப்பட்டது. அதன் பிறகு ஏப்ரல் மாதம் 01ந் திகதி, இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக நமது கவலையையும் கண்டனத்தை வெளிப்படுத்தியும், அடக்கம் செய்வதற்கான அனுமதியளித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலுக்கு ஏற்ப அரசாங்கத்தின் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் ஒரு அறிக்கையை ஜம்இய்யா வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, அதிகாரிகளுடன் இது சம்பந்தமான விடயங்களைக் கலந்துரையாட மருத்துவர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. உரிய அதிகாரிகளுடனான இக்குழுவின் கலந்துரையாடல்களுக்குப் பின், இவ்விடயத்தில் ஒரு விஞ்ஞான ரீதியான ஆய்வு நடாத்த நிபுணர்களின் குழுவொன்றை நியமிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. என்றாலும், அது நடைபெற்றதாக தெரியவில்லை. 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒரு பொறுப்பு வாய்ந்த அமைப்பு என்ற வகையில் எப்போதும் நாட்டு சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்றே எமது சமூகத்தினருக்கு வழிகாட்டியுள்ளது. இந்தச் சூழலில், அதிகாரிகளால் நிர்ப்பந்தமாக மரணித்தவர்களின் உடல் தகனம் செய்யப்படும் நிலையில் மரணித்தவரின் சாம்பல் கிடைக்கப் பெறும் பட்சத்தில் அது புதைக்கப்பட வேண்டும் என்றே கூறப்பட்டது.

மரணித்தவரை தகனம் செய்யும் இந்த முடிவு நமது மதக் கொள்கைகளுக்கு எதிரானது என்பது மிகத் தெளிவான விடயமாகும். இந்த விஷயத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சிகள் துறைசார்ந்தவர்களின் உதவியுடன் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.

கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டதென உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகத்திற்கிடமான சடலங்களை தகனம் செய்யப்பட வேண்டுமென எடுக்கப்பட்ட தீர்மானத்தை உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மற்றும் 180 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் முறைக்கு ஏற்ப, மறுபரிசீலனை செய்யுமாறு தங்களிடம் மீண்டுமொரு முறை வேண்டுகோள் விடுக்கின்றோம். மேலும், அனைத்துவித கட்டாயமான முன்னெச்சரிக்கைகள் மற்றும் பொலிஸ், பொது சுகாதார அதிகாரி (PHI) மேற்பார்வையுடன் சடலங்களை புதைப்பதற்குரிய அனுமதியையும் வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

இது முஸ்லிம்களின் மத ரீதியான மற்றும் உணர்வு ரீதியான விடயமாகும். எனவே இவ்விடயத்தில் அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் உரிய தீர்வை பெற்றுத்;தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். மேலும், 08 அடி ஆழத்தில் கல்லறைத் தோண்டுவது போன்ற, தேவையான அனைத்து விடயங்களையும் முஸ்லிம் சமூகம் செய்யத் தயாராகவுள்ளது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். தேவைப்பட்டால் கல்லறையை சீமெந்து மூலம் கொன்கிறீட் போடுவது அல்லது வேறேதும் அதனுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளை தேவைக்கேற்ப செய்வதற்கும் முஸ்லிம் சமூகம் தயாராக இருக்கின்றது.

இது தொடர்பாக நீங்கள் அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டுமென அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

 

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுச் சார்பாக

 

அஷ்-ஷைக் ஏ.ஸீ. எம்.  அகார் முஹம்மத்

பிரதித் தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்

பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஏ.ஐ.எம். கலீல்

பொருளாலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்

உப தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா

உப தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல்காலிக்

உப தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ஹாஷிம்

உப தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம் பாவா

உப தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்

உப செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்

உப செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஏ.எம்.எம். அனஸ்

உப பொருளாலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாஸில்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் அர்க்கம் நூராமீத்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஹஸன் பரீத்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் முப்தி எம்.எச்.எம். யூசுப்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாஸில்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.கே. அப்துர்ரஹ்மான்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜவ்பர்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர்ரஹ்மான்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஹஸ்புல்லாஹ்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஸரூக்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் Dr.   அஸ்வர்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஸகி அஹ்மத்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் நுஃமான்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் Dr.  எம்.எல்.எம். முபாறக்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். பரூத்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.ஏ.ஏ.எம். பிஸ்ர்

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா