2020.03.29
கூட்டாக மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது
கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் கூட்டங்களுக்கு தடைவிதித்திருக்கும் நிலையில் நாட்டின் சில பாகங்களில் ஜும்ஆ மற்றும் ஜமாஅத் தொழுகை நடைபெற்றதனை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது.
கொவிட் 19 வைரஸின் பயங்கர நிலை உருவானது முதல் இலங்கை வக்ப் சபை, முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியோர் இணைந்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு தொடரான வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர். மார்க்;க கடமைகளை மஸ்ஜித்களில் நிறைவேற்ற வேண்டாமென்றும் ஜும்ஆ மற்றும் ஜமாஅத்துத் தொழுகைகளுக்குக்; கூட ஒன்றுசேரக் கூடாதெனவும் கண்டிப்பான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
மேற்குறித்த மூன்று நிறுவனங்களினாலும் பலமுறை வலியுறுத்தி வேண்டிக்கொண்டதையும், இந்த பயங்கர நோயைக் கட்டுப்படுத்த அதிகாரிகளினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களையும் உதாசீனம் செய்து விட்டு ஒரு சிலர் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டது மிகப்பெரும் துரதிஷ்டமாகும்.
நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப் படியாமலிருப்பது இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானது என்பதையும் அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை எத்தகைய சூழ்நிலையிலும் சகித்துக்கொள்ள முடியாது என்பதையும் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். சம்பந்தப்பட்ட மஸ்ஜிதின் நிர்வாக சபையை உடனடியாக இடை நிறுத்த வக்ப் சபை எடுத்த தீர்மானத்தை நாம் பாராட்டுகின்றோம்.
சட்டத்தை மீறுவோருக்கெதிராக இனமத பேதமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உரிய அதிகாரிகளை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் ஒருசில பொறுப்பற்றவர்களால் நடாத்தப்பட்ட சம்பவங்களை மதத்துடனோ அல்லது ஒரு சமூகத்துடனோ சம்மந்தப்படுத்தக் கூடாது, ஏனெனில் இவை நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்படாத, உதாசீனப்போக்குள்ள ஒரு சிலரின் நடவடிக்கையென்பது தெளிவாகும்.
ஊடகங்கள், இத்தகைய சம்பவங்களை சமூகங்களுக்கிடையிலான தவறான புரிதல்களைத் தவிர்த்து, இன ஒற்றுமையை உறுதி செய்யும் வண்ணம் பொறுப்புடனும் தார்மீகத்துடனும் கையாளும்போது சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும். இல்லையெனில் சமூகங்களுக்கிடையிலான அமைதிக் கட்டமைப்பை இது சீர்குலைத்து விடும்.
அத்துடன் சமூகங்களுக்கிடையில் வதந்திகளைப் பரப்புவோர் மீதும் வெறுப்பை வளர்ப்போர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம்.
குறித்த பயங்கர நோயிலிருந்து முழு உலகமும் சாத்தியமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதேவேளை, கொரொனோ வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தி, இந்த பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இலங்கையரசு மேற்கொண்ட பொருத்தமான முன்னெச்சரிக்கைத் திட்டங்களை நாம் பாராட்டுகின்றோம்.
மேலும் நாட்டின் சட்ட ஒழுங்குக்கு முஸ்லிம் சமூகம் நேர்மையாக ஒத்துழைக்க வேண்டுமெனவும் இந்த சவாலான காலத்தை வெற்றிகரமாக சமாளிக்க அனைத்து வழிகளிலும் ஆதரவை வழங்கவேண்டுமெனவும் அனைவரையும் வேண்டிக்கொள்கின்றோம்.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
30.03.2020
05.08.1441
அன்புடையீர்,
கொரோனா வைரஸின் மூலம் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றிய மார்க்கத் தெளிவு
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலவாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
முஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரைக் குளிப்பாட்டுவது, கபன் செய்வது, தொழுகை நடாத்துவது மற்றும் அடக்கம் செய்வது முஸ்லிம்கள் மீது பர்ளு கிபாயாவாகும். பர்ளு கிபாயா என்பது, இவற்றை முஸ்லிம்களில் சிலர் நிறைவேற்றி விட்டால் போதுமானது. அவ்வாறு யாரும், அக்கடமைகளை நிறைவேற்றாவிட்டால், முஸ்லிம்கள் அனைவரும் பாவிகளாக ஆகிவிடுவார்கள்.
அவ்வாறே, தொழுகை நடாத்துவதற்கு முன் ஜனாஸா குளிப்பாட்டப்பட்டிருப்பது அவசியமாகும். நீரில் மூழ்கி அல்லது இடிபாடுகளுக்குள் சிக்குண்டு ஒருவர் மரணித்து, அவரது ஜனாஸா கிடைக்கப் பெறாத சந்தர்ப்பங்களில், அதைக் குளிப்பாட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகின்றது. இந்நிலைகளில், தொழுகை நடாத்த முடியுமா எனும் விடயத்தில், மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள், ஒரு ஜனாஸா மீது தொழுகை நடாத்துவதற்கு குளிப்பாட்டல் நிபந்தனையாகும் என்பதால், குளிப்பாட்ட முடியாமலாகுமிடத்து, தொழுகை நடாத்த முடியாது என்று கூறுகின்றனர்.
என்றாலும், சில மார்க்க அறிஞர்கள், ஜனாஸாத் தொழுகையின் நோக்கம், மரணித்தவருக்கு துஆ செய்வதாகும். அவ்வாறே, ஜனாஸாவுடைய நான்கு கடமைகளில் சில கடமைகளை நிறைவேற்ற முடியாது என்பதால், நிறைவேற்ற முடியுமான கடமைகளை விட்டு விட முடியாது என்று கூறுகின்றனர். இதற்கு “ஒரு காரியத்தில் இயலாத சில விடயங்களுக்காக இயலுமான விடயங்களையும் சேர்த்து விட்டுவிட முடியாது” எனும் அடிப்படையை ஆதாரமாகக் கூறுகின்றனர்.
இவ்வடிப்படையில், கொரோனா வைரஸ் தாக்கி மரணித்த ஒருவரது உடலிலிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்பதால், அவ்வாறு மரணிப்பவர்களின் உடல் முற்றுமுழுதாக பையினால் மூடப்படும். எனவே, அதைக் குளிப்பாட்ட அல்லது தயம்மும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
இந்நிலையில், மேற்கூறப்பட்ட இரண்டாவது கருத்தின் அடிப்படையில், கொரோனா வைரஸ் தாக்கி மரணிக்கும் ஜனாஸாவை குளிப்பாட்ட முடியாது போனாலும், அதற்காக ஜனாஸாத் தொழுகையை நடாத்தி அடக்கம் செய்வது அவசியமாகும்.
கொரோனா மூலம் மரணிக்கும் ஒருவரின் இறுதிக் கிரியைகள் விடயத்தில் அரசாங்கம் சில நடைமுறைகளைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
அவற்றில், மரணித்தவரது ஜனாஸாவை குளிப்பாட்ட முடியாது, ஜனாஸாவை எரித்தல் வேண்டும், அடக்குவதாக இருந்தால், ஆறு அடிகள் ஆழமாக கப்ரு இருத்தல் வேண்டும், அரசாங்க அதிகாரிகள் முன்னிலையில் அடக்கம் செய்யப்படல் வேண்டும், மிகவும் நெருங்கிய ஒரு சில உறவினர்களே அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு அனுமதிக்கப்படல் வேண்டும், பிரத்தியேக இடத்தில் அடக்கம் செய்தல் வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் உள்ளன.
மேற்குறிப்பிட்ட மார்க்க சட்டத்தின் அடிப்படையில், மரணித்தவரின் உடலைக் குளிப்பாட்ட அல்லது தயம்மும் செய்ய முடியாது என்பதால் தொழுகை மாத்திரம் நடாத்தி அரச அதிகாரிகளின் அறிவுரைகளுடன், அதிக நபர்கள் ஒன்று சேராமல், முக்கிய சிலர் மாத்திரம் ஒன்று சேர்ந்து ஜனாஸா தொழுகை மற்றும் அடக்கும் பணிகளில் ஈடுபடுதல் வேண்டும். மற்றவர்கள் இவ்வாறான நிர்ப்பந்த நிலையில் மறைமுக ஜனாஸாத் தொழுகையை தொழுது கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
அல்லாஹு தஆலா இத்தகைய நோயினால் மரணிப்பவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸை அருள்வானாக, அத்துடன் அவர்களது குடும்பத்தினருக்கு மன ஆறுதலைக் கொடுத்தருள்வானாக.
குறிப்பு : இத்தகைய ஜனாஸாக்களை அரச அதிகாரிகளின் அறிவுரைகளுடன், மையவாடியில் பிரத்தியேக இடத்தில் அடக்கம் செய்வதற்கு ஒத்துழைக்குமாறு மஸ்ஜித் நிர்வாகிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
29.03.2020
பொலிஸ் தலைமையகம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இணைந்து வெளியிடும் முக்கிய அறிவித்தல்
ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் போது வீட்டைவிட்டு வெளியில் செல்வதை முற்றுமுழுதாகத் தவிர்த்துக் கொள்ளல்.
0112-444480/ 0112-444481/ 1933 மற்றும் இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
நீர் தனிமைப்படுத்தல் அறிவுரைகளிற்கு முரணாக செயற்பட்டால் அதன் பின்விளைவுகள் என்ன?
குறிப்பு:
27.03.2020
02.08.1441
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
ஜனாஸாக் கடமைகள் தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்
முழு உலகமும் பாரிய சோதனைக்குட்பட்டுள்ளதை நாம் அறிவோம். கொரோனா வைரஸ் காரணமாக நாளாந்தம் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தும் பலர் நோய்க்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இதனால் பல நாடுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு கோடிக்கணக்கானோர் வீடுகளில் முடங்கியுள்ளனர். நமது நாட்டிலும் அன்றாட செயற்பாடுகள் முடங்கியுள்ளன.
குறித்த பயங்கர நோயிலிருந்து நாட்டையும் நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முஸ்லிம்கள் நாட்டை உண்மையாக நேசிக்கும் பிரஜைகள் என்ற வகையில் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மதித்து மஸ்ஜித்களில் ஐங்காலத் தொழுகைகளையும், ஜுமுஆவையும் நிறுத்தியுள்ளனர். ஒன்று கூடல்களையும் தவிர்ந்துள்ளனர். அத்துடன் முஸ்லிம்கள் நாட்டு மக்களையும், நாட்டையும் பாதுகாக்க ஒத்தாசையாக இருந்துவருகின்றனர்.
இந்நிலையில், அல்லாஹ்வின் நாட்டப்படி நாட்டில் மரணம் சம்பவிக்கும்போது, பர்ளு கிபாயாவான ஜனாஸாவின் இறுதிக்கிரிகைகளுக்காக மக்கள் ஒன்று சேரும் நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. அதனால் மக்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுவதனால் கீழ்வரும் ஒழுங்குகளைக் கடைபிடிக்குமாறு சகல முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பணிவாகவும் கட்டாயமாகவும் வேண்டிக் கொள்கின்றது.
இவ்விடயங்களை பேணி நடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.
குறிப்பு: “அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை” (ஸ_ரத்ததுல் பகரஹ்-185) என்பது போன்ற அல்குர்ஆன் வசனத்தையும், 'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். (ஸஹீஹுல் புகாரி-39) என்ற நபிமொழியையும், மார்க்க அறிஞர்களின் கருத்துக்களையும் அடிப்படையாக வைத்தே, மேற்கூறிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது.
அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
கௌரவ செயலாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
24.03.2020 (28.07.1441)
கௌரவ தலைவர் / செயலாளர்,
மாவட்ட மற்றும் பிரதேச கிளைகள்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
அல்லாஹு தஆலா நம் அனைவரையும் சகல விதமான சோதனைகளை விட்டும் பாதுகாப்பானாக.. ஆமீன்!
நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இன்று 24.03.2020 (செவ்வாய்க்கிழமை) ஜம்இய்யாவின் தலைமையகத்தில் சிவில் மற்றும் சமூக தலைமைகள் கூடிய கூட்டத்தில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கான கீழ்வரும் பொறிமுறையை ஜம்இய்யா அவசரமாக அறிமுகம் செய்திருக்கிறது.
இதன் அடிப்படையில் சகல மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகள் செயலாற்றும் படி ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
23.03.2020
சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை பொறுப்புணர்வுடன் பேணி நடந்து கொள்வோம்
உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதை நாம் அறிவோம். அந்த வகையில் இலங்கை அரசாங்கமும் இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை விடுவித்துக் கொள்ள இன்னோரன்ன வழிகாட்டல்களை வழங்கி வருவதுடன் பல்வேறுபட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. இவ்வாறான வழிகாட்டல்களை நாம் அனைவரும் பேணி நடப்பது கட்டாயமாகும்.
குறிப்பாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தியிருப்பதும் நாட்டு மக்களின் நலன்களுக்காவே என்பதை உணர்ந்து முஸ்லிம்களாகிய நாம் அச்சட்டத்திற்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பது அவசியமாகும். ஊரடங்கு அமுலில் இருக்கும் போது நாம் வெளியில் நடமாடுவதை முற்றாக தவிர்த்து பாதுகாப்பு தரப்பினருக்கு எமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இந்த வைரஸின் பரவலை தடுப்பதற்காக சுகாதார அமைச்சினால் கூறப்பட்டிருக்கும் வழிகாட்டல்களை நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம்கள் பேணும் அதே நேரம் ஊரடங்கு சட்டங்கள் தளர்த்தப்படுகின்ற போது நாம் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றி முன்மாதிரிமிக்க சமூகமாக திகழ வேண்டும். அத்துடன் பின்வரும் ஒழுங்குகளை கட்டாயமாக பேணிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களையும் அன்பாக வேண்டிக் கொள்கிறது.
பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் செல்லல்.
சிறுவர்களும், வயோதிபர்களும் செல்வதை தவிர்த்து வாலிபர்களின் மூலம் வெளித் தேவைகளை பூர்த்தி செய்தல்.
வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல்.
வரிசைகளில் நிற்கும் போது ஒவ்வொருவருக்குமிடையில் 1 மீற்றர் இடைவெளியை பேணி நிற்றல்.
அடிக்கடி தமது கைகளை சவர்க்காரமிட்டு கழுவிக் கொள்ளல்.
மேற்குறிப்பிட்ட வழிகாட்டல்களை அனைத்து முஸ்லிம்களும் கடைபிடிப்பதுடன் ஏனையவர்களுக்கும் இது விடயமாக விழிப்புணர்வூட்டுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களிடமும் வினயமாக வேண்டிக் கொள்கிறது.
குறிப்பாக மஸ்ஜித் நிருவாகிகள் இவ்வறிவித்தலை பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பாவித்து மக்களுக்கு அடிக்கடி விழிப்புணர்வூட்டுமாறு அனைத்து பள்ளிவாசல் நிருவாகிகளிடமும் ஜம்இய்யா வேண்டுகோள் விடுக்கிறது.
அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித்
செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
22.03.2020
தேவையுடையோருக்கு உதவி செய்து அல்லாஹ்வின் ரஹ்மத்தை பெற்றுக் கொள்வோம்
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவோம். பாதிக்கப்பட்ட அனைவரும் அவசரமாக இந்நோயிலிருந்து குணமடைய வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.
இவ்வைரஸின் பாதிப்பால் நாட்டில் பலரின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கின்றது. நாளாந்தம் உழைத்து தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவர்கள்; பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன் வரவேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.
அயலவன் பசித்திருக்க தான் மாத்திரம் வயிறு நிரம்ப புசிப்பவன் உண்மை விசுவாசியல்ல என நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனவே உணவளிப்பது என்பது இஸ்லாத்தில் பெரும் நன்மையை ஈட்டித் தரும் செயலாகும். அதேபோன்று ஸதகாக்கள் சோதனைகளை விட்டும் எம்மை பாதுகாக்கும் என்பதும் நபி மொழியாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிகமாக ஸதகாக்களில் ஈடுபடுவது சிறந்ததாகும்.
குறிப்பாக நாட்டில் பல பாகங்களிலும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதோடு நாளாந்தம் உழைத்து தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பலரின் தொழில்களும் நிறுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறானவர்கள் முறையாக இனங்காணப்பட்டு அவர்களுக்கும் உணவுகளுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
எனவே,
இவற்றுக்கான ஏற்பாடுகளை செய்கின்றவர்கள் அரசாங்கத்தின் சட்டங்களை மதித்து இவற்றுக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.
0777571876 | 0117490490 | 0771778831
COMMERCIAL BANK ALL CEYLON JAMIYYATHUL ULAMA A/C NO 1901005000 COMMERCIAL BANK BRANCH : ISLAMIC BANKING UNIT SWIFT CODE : CCEYLKLX
|
AMANA BANK ALL CEYLON JAMIYYATHUL ULAMA A/C NO 0010112110014 AMANA BANK BRANCH : MAIN BRANCH SWIFT CODE : AMNALKLX
|
குறிப்பு: ஜம்இய்யாவினால் குறித்த ஒரு சமூக சேவைக்காக சேரக்;கப்படும் பணம் குறித்த தேவை பூர்த்தி செய்யப்பட்டதன் பின் மீதமானால் அத்தொகை அது போன்றதொரு சமூக சேவைக்கு பயன்படுத்தப்படும்.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
செயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
19.03.2020
23.07.1441
ஜுமுஆவுடைய நேரத்தைக் கண்ணியப்படுத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவோம்
கொரோனா வைரஸ் (COVID19) தற்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் மக்கள் ஒன்று கூடுவது இந்நோய் இன்னும் பரவுவதற்கான பிரதான காரணியாகும் என்று உலக சுகாதார மையம் பிரகடனப்படுத்தியுள்ளதால் அரசாங்கம் மக்கள் ஒன்று கூடுவதை முற்றாகத் தடை செய்துள்ளதுடன், ஒன்று கூடுவது சட்டத்திற்கு முரணானது எனவும், மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
“தனக்கு தீங்கு விளைவித்துக்கொள்வதும் பிறருக்கு தீங்கு விளைவிப்பதும் கூடாது” என்ற ஹதீஸ், பிக்ஹ் கலையில் மிக முக்கிய அடிப்படையாகும்.
மேலும், மார்க்கத்தில் ஜுமுஆ மற்றும் ஜமாஅத் தொழுகைகளை விடுவதற்கான தகுந்த காரணங்களாக நோய், பயம், பிரயாணம், நோயாளியைப் பராமரித்தல், வேகமான காற்று, மற்றும் மழை போன்ற பல விடயங்களை நிபந்தனைகளுடன் மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறான காரணங்களுக்காக ஜமாஅத் மற்றும் ஜுமுஆத் தொழுகைகள் விடுபடும் போது, அதனை நிறைவேற்றியதற்குரிய நன்மை கிடைக்கும் என்பது ஹதீஸின் கருத்தாகும்.
மேற்கூறப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு ஜுமுஆ தொழுகைக்காகவோ ஐவேளைத் தொழுகைகளுக்காகவோ மஸ்ஜிதில் ஒன்று சேர்வதைத் தவிர்த்து, தாம் இருக்கும் இடங்களில் தொழுது கொள்ளும்படி வக்ப் சபையும், முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களமும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் அறிவித்துள்ளதை நாம் அறிவோம்.
மேலும், வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் புனித நாளாகும். இந்நாளில், ஸ_ரத்துல் கஹ்ப் ஓதுதல், நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்லுதல், மற்றும் துஆ கேட்டல் போன்ற வணக்கங்களில் ஈடுபடுவது முக்கிய அமல்களாகும்.
எனவே, நாளை வெள்ளிக் கிழமை, வழமை போன்று முஸ்லிம்கள் தமது வியாபார ஸ்தலங்களை மூடி, ழுஹ்ருடைய அதான் கூறியதும் தமது வீடுகளில் அல்லது தாம் இருக்கும் இடங்களில் ழுஹ்ருடைய நான்கு ரக்அத்கள் மற்றும் அதன் முன் பின் சுன்னத் தொழுகைகளை நிறைவேற்றி, இக்கொடிய நோயின் தீங்கிலிருந்து உலக மக்கள் அனைவரையும் குறிப்பாக இந்நாட்டு மக்களையும் பாதுகாக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
குறிப்பு: இந்நாளில் ஒரு நேரம் உள்ளது, அதில் கேட்கப்படும் துஆ கபூல் செய்யப்படும் என்று நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவ்வழிகாட்டலை சகல முஸ்லிம்களும் கடைபிடிக்குமாறு அன்பாக வேண்டிக்கொள்கிறோம்.
அஷ்-ஷைக் எம். எல். எம். இல்யாஸ்
செயலாளர்
பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
15.03.2020
19.07.1441
நாட்டில் COVID 19 எனும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது சம்பந்தமாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தல்கள்
1- ஜுமுஆ மற்றும் ஜவேளைத் தொழுகை உட்பட அனைத்து ஒன்று கூடல்களையும் மஸ்ஜித் மற்றும் பொது இடங்களில் தவிர்ந்துகொள்ளல்.
2- உரிய நேரத்திற்கு ஒவ்வொரு மஸ்ஜிதிலும் அதான் சொல்ல வேண்டும். அதானின் முடிவில் “ஸல்லூ பீ ரிஹாலிகும்” (நீங்கள் இருக்கும் இடங்களில் தொழுதுகொள்ளுங்கள்) (ஸஹீஹு முஸ்லிம் - 697) என்று அறிவித்தல்.
3- மஸ்ஜிதில் இருக்கும் இமாம் மற்றும் முஅத்தின் போன்றவர்கள் மஸ்ஜிதிலேயே ஜமாஅத்தாகத் தொழுதுகொள்ளல்.
4- வீட்டில் உள்ளவர்கள் ஐவேளைத் தொழுகைகளை உரிய நேரத்தில் ஜமாஅத்தாகத் தொழுதல். முன் பின் சுன்னத்தான தொழுகைகள் மற்றும் ஏனைய தஹஜ்ஜுத், ழுஹா, சதகா, நோன்பு போன்ற நபிலான வணக்கங்களில் கூடிய கவனம் செலுத்துவதோடு பாவமான காரியங்களிலிருந்து விலகி நிற்றல்.
5- பிள்ளைகள் விடுமுறையில் இருப்பதனால், அவர்கள் சுற்றுலா செல்லுதல், பாதையில் கூடி விளையாடுதல் போன்ற விடயங்களைத் தவிர்த்து, குர்ஆன் ஓதுதல், துஆ, மற்றும் கற்றல், கற்பித்தல் போன்ற நல்ல விடயங்களில் ஈடுபடுத்துவதில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்தல்.
6- ஒருவர் மற்றவரை சந்தித்தால் ஸலாம் கூறுவதும் முஸாபஹா செய்வதும் சுன்னத்தாகும். எனினும், COVID 19 என்ற நோய் கைகள் மூலம் அதிகமாகப் பரவ வாய்ப்புள்ளது என்று வைத்திய நிபுணர்கள் கருதுவதால், ஒருவர் மற்றவரை சந்திக்கும் பொழுது முஸாபஹா செய்வதைத் தவிர்த்து ஸலாம் சொல்வதுடன் போதுமாக்கிக் கொள்ளுதல்.
7- ஜனாஸாவின் கடமைகளை மார்க்க விதி முறைகளைப் பேணி நிறைவேற்றுவது எம்மீதுள்ள கடமையாகும். இக்கால சூழ்நிலையை கவனத்திற்கொண்டு அடக்கம் செய்யும் விடயத்தில் ஜனாஸாவிற்கு செய்ய வேண்டிய முக்கிய கடமைகளுடன் சுருக்கிக்கொள்ளல்.
8- COVID 19 என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரமாக சுகம் கிடைக்க பிரார்த்திப்பதுடன், அவர்களுடன் கனிவோடு நடந்துகொள்வதும், எம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதும் எமது கடமையாகும்.
9- இக்கொடிய நோய் இந்நாட்டை விட்டும், உலக நாடுகளை விட்டும் முழுதாக நீங்க அனைவரும் அல்லாஹ்விடம் மன்றாடுதல்.
10- சமூக வலைத்தளங்களில் மார்க்கத்திற்கு முரணான மற்றும் ஊர்ஜிதமற்ற தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்தல்.
குறிப்பு: தேசிய சுகாதார துறையின் வேண்டுகோளுக்கிணங்கவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை கவனத்திற் கொண்டும், சர்வதேச உலமாக்களினதும், உலமா அமைப்புக்களினதும் தீர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டும் மேற்படி அறிவுறுத்தல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கின்றது.
அல்லாஹ்வே எமக்குப் போதுமானவன். அவனே எமக்கு சிறந்த பாதுகாவலன்.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
15-03-2020
முஸ்லிம் சகோதரர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வேண்டுகோள்
கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உலகசுகாதார ஸ்தாபனமும், இலங்கை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் ஒன்று கூடும் சந்தாப்;பங்கள் தவிர்க்கப்படல் வேண்டும் என்ற வகையில் மஸ்ஜித்களில் ஜுமுஆ, ஐவேளை ஜமாஅத்தொழுகைகள் உட்பட ஏனைய எல்லா வகையான ஒன்று கூடல்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு முஸ்;லிம்களை அன்பாக வேண்டிக் கொள்கின்றது.
இத்தகைய சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறும், அதனை அமுல்படுத்துவதில் பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் கண்டிப்போடு நடந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கிறது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா