அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சிறீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஆகிய இருதரப்புக்குமிடையில் சுமுக சந்திப்பு

ACJU/MED/2023/037
2023.08.08 ஆம் திகதி முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திருத்தம் குறித்து சமூகத்தில் புரிதலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சிறீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஆகிய இருதரப்புக்குமிடையில் சுமுக சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திருத்தம் சம்பந்தமாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் இருதரப்பு பிரதிநிதிகளுக்கிமிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாடு எதுவாக இருப்பினும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் ஏனைய முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளால் ஏகோபித்து தீர்மானிக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு தாங்கள் உறுதுணையாக நிற்பதோடு சமூகத்தின் நலன் மற்றும் கருத்தொருமைப்பாட்டை கருத்தில் கொண்டு இத்திருத்தம் தொடர்பாக எட்டப்படும் ஏகோபித்த முடிவுகளுக்கு கூட்டிணைவோடும் புரிந்துணர்வுடனும் செயற்படுவதாகவும் சிறீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் உறுதியளித்தது.
அத்துடன் கருத்துமுரண்பாடுகளின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காதிமுறையில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதோடு, கருத்துமுரண்பாடுள்ள விடயங்களில் உலமாக்களின் வழிகாட்டல்களோடு சிவில் சமூக அமைப்புக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி பயணிக்கவேண்டும் என்று ஜம்இய்யத்துல் உலமா குறித்த கூட்டத்தின்போது வலியுறுத்தியது. மேலும் 1970 களில் இருந்து தற்பொழுதுவரை விவாக விவாகரத்து சட்டத்திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா குறித்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்ற விடயத்தையும் இதன்போது தெரிவித்துக்கொண்டது.
இதில் ஜம்இய்யாவின் தலைமையகம் சார்பாக அதன் பதில் தலைவர் அஷ்ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸுரி, பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் கலாநிதி ஏ.ஏ. அஸ்வர், உப செயலாளர்களுள் ஒருவரான அஷ்ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், நிறைவேற்றுக் குழுவின் மூத்த உறுப்பினர்களான அஷ்ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், அஷ்ஷைக் எஸ்.எல். நவ்பர், உட்பட அஷ்ஷைக் எம்.எஸ்.எம். நாளிம், அஷ்ஷைக் ரிபாஹ் ஹஸன், அஷ்ஷைக் எம்.என்.எம். ஸைபுல்லாஹ் ஆகியோரும் முஸ்லிம் கவுன்ஸில் சார்பாக அதன் தலைவர் என்.எம். அமீன், செயலாளர் எம்.டீ.எம். ரிஸ்வி, உறுப்பினர்களான முப்தி ஹாஷிம் மற்றும் டாக்டர் மரீனா தாஹா ரிபாய் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *