السلام عليكم ورحمة الله وبركاته
ACJU/NGS/2023/115
2023.03.23 (1444.08.30)
ரமழான் மாதம் என்பது அல்லாஹு தஆலா முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கும் மிகச் சிறந்ததோர் அருட்கொடையாகும். இம்மாதத்திலேயே அல்லாஹு தஆலா சங்கைமிகு புனித அல்-குர்ஆனை வழிகாட்டியாகவும் இறைவேதமாகவும் எமக்கு அருளியுள்ளான். இம்மாதம் நன்மைகளையும் அருட்கொடைகளையும் பல பாக்கியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஆசிர்வதிக்கப்பட்ட மாதமாகத் திகழ்கின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். சங்கையான மாதமான ரமழான் உங்களிடம் வந்துள்ளது. அதில் அல்லாஹு தஆலா நோன்பு நோற்குமாறு உங்களை கட்டளையிட்டுள்ளான். அம்மாதத்தில் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு அனைத்து ஷைத்தான்களும் விலங்கிடப்படுகின்றன. அதில் அல்லாஹ் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவை வைத்திருக்கின்றான். எவர் அதன் நன்மையை இழக்கின்றாரோ உண்மையில் அவர் சகல பாக்கியங்களையும் இழந்தவராவார். (நூல்: இப்னு மாஜா)
இப்புனிதமான மாதத்தில் உலகளாவிய ரீதியில் பொருளாதார ரீதியாகவும் நோய் நிலைமைகளாலும் கஷ்டப்படுகின்ற எமது சகோதரர்கள், நாட்டு மக்கள் அனைவருக்காகவும் நாம் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ் மிகவும் நீதியானவனும் மிக்க கருணையாளனும் ஆவான். இம்மாதத்தின் அருள்களை எல்லோருடனும் கருணை மற்றும் தாராள மனப்பான்மையுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். உண்மையிலேயே, ஒருவன் தனக்காக நேசிப்பதை தனது சகோதரனுக்காக நேசிக்கும் வரை அவனுடைய ஈமான் முழுமையடையமாட்டாது.
அல்லாஹு தஆலா எந்த நோக்கங்களையும் அருள்களையும் நாம் அடைந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நோன்பை எமக்குக் கடமையாக்கினானோ அவற்றை அடைந்து அவனுடைய ரஹ்மத்தையும் பாவமன்னிப்பையும் நரக விடுதலையையும் லைலத்துல் கத்ர் இரவையும் அடைந்த கூட்டத்தில் நம்மனைவரையும் சேர்த்து நல்லருள் புரிவானாக!
‘யா அல்லாஹ், இந்தப் பிறையை பாதுகாப்பைக் கொண்டும் நம்பிக்கையைக் கொண்டும் ஈடேற்றத்தைக் கொண்டும் சாந்தியைக் கொண்டும் தோன்ற வைப்பாயாக. (சந்திரனே!) உன்னுடைய இரட்சகனும், என்னுடைய இரட்சகனும் அல்லாஹ் ஆவான். இந்தப் பிறை, வழிகாட்டலையும் நலவையும் கொண்டு வர வேண்டும்’
‘யா அல்லாஹ்! என்னை ரமழானுக்கு வழங்கி, ரமழானை எனக்கு அடையச் செய்வாயாக, என்னிடமிருந்து அது ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில் அதை விடுவிப்பாயாக.’
அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா