அஷ்ஷைக் ஏ.எம். அப்துல் அஸீஸ் (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2022/039

2022.02.21 (1443.07.19)

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும், சம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட நம் நாட்டின் மூத்த ஆலிம்களில் ஒருவரான அஷ்ஷைக் ஏ.எம். அப்துல் அஸீஸ் (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. பல சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த அன்னார் தனது 71 ஆவது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இந்தியா தமிழ்நாட்டிலுள்ள மிஸ்பாஹிய்யா அரபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வி பயின்று 1977 ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியான அன்னார், 1978 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும், பல வருடங்கள் ஜம்இய்யாவின் பிறைக் குழுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்கள். அத்துடன், கொழும்பு மாவட்டக் கிளையின் செயலாளராகவும் அன்னார் நீண்ட காலம் செயற்பட்டு பல பணிகளை மேற்கொண்டுள்ளார்கள். சமூக விடயங்களில் முன்னின்று செயற்படக்கூடிய ஆளுமை மிக்க ஒருவராக திகழ்ந்த அன்னார், ஜம்இய்யத்துல் உலமாவின் வளர்ச்சியில் பல தசாப்த காலமாக அயராது பாடுபட்;டவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களை பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله

(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *