2023.09.26 ஆம் திகதி இலங்கைக்கான ஈரானிய தூதரகத்தின் கலாசார ஆலோசகர் கலாநிதி மூஸாமி கூர்தாஸி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடும் நோக்கில் ஜம்இய்யாவின் தலைமையகத்துக்கு வருகை தந்தார்கள்.
ஆரம்பமாக ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் கலாநிதி மூஸாமி கூர்தாஸி அவர்களை வரவேற்று ஜம்இய்யாவின் நடவடிக்கைகளை சுருக்கமாக முன்வைத்தார்கள்.
அடுத்து ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்புகள் மற்றும் ஈரானிய நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவை வழங்கிய ஈரானிய தூதரகத்தின் கலாசார ஆலோசகர் கலாநிதி மூஸாமி கூர்தாஸி அவர்கள், பல்வேறு துறைகளிலும் ஜம்இய்யாவுடன் கைகோர்த்து செயற்பட தாங்கள் தயாராக இருப்பதாகவும், ஈரானிய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கலந்துகொள்ள வேண்டுமென தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்கள்.
மேலும் தெரிவிக்கையில் 180 நாடுகளிலுமுள்ள தமது தூதரகத்தில் சுன்னி முஸ்லிம்களுடன் சேர்த்து முஸ்லிமல்லாதவர்களும் பணியாற்றுவதாகவும் சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலும் தாங்கள் பிற சமூகத்தாருடன் நல்லுறவைக் கட்டியெழுப்பியுள்ளதாகவும் மேலும் நாம் அல்லாஹ், இறுதி நபி மற்றும் கிப்லா என்பவற்றில் நம்பிக்கை சார்ந்து ஒன்றுபட்டிருப்பதைப் போன்று மனிதநேய அடிப்படையிலும் ஒன்றுபட்டிருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ‘ஸஹாபாக்களும் அஹ்லுல் பைத்களும் எமது இரண்டு கண்களைப் போன்றவர்கள் ஆவார்கள். அவ்விரு சாராரில் யாருக்கும் அணுவளவேனும் குறை ஏற்படுவதை ஜம்இய்யாவோ அல்லது இலங்கைவாழ் முஸ்லிம்களோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேநேரம் ஈரானுடன் மனிதாபிமான நடவடிக்கைகளில் கைகோர்த்து செயற்படுவதில் ஜம்இய்யாவுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை, எனினும் சுன்னி முஸ்லிம்கள் தொடர்பில் ஈரானின் நிலைப்பாட்டை தெளிவாகப் புரிந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு ஈரானிலுள்ள சுன்னி ஆலிம்களின் தூதுக்குழுவொன்றை உத்தியோகபூர்வமாக வரவழைத்து ஜம்இய்யாவுடன் சந்திப்பை ஏற்படுத்துங்கள். அது இரு சாராருக்குமிடையில் நட்புறவுப் பாலமாக அமையும்’ என வேண்டிக்கொண்டார்கள்.
ஜம்இய்யாவின் தலைவர் அவர்களால் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கையை வருகைதந்த ஈரானிய தூதரகத்தின் கலாசார ஆலோசகர் கலாநிதி மூஸாமி கூர்தாஸி அவர்கள் வரவேற்றதுடன் அதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாகவும் தெரிவித்தார்கள்.
இச்சந்திப்பில் தலைமையகம் சார்பாக ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித், உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷைக் எச். உமர்தீன், உப செயலாளர்களுள் ஒருவரான அஷ்ஷைக் ஏ.ஸீ.எம். பாழில், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், அஷ்ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்ஷைக் ரிபாஹ் ஹஸன் மற்றும் அஷ்ஷைக் எம்.என்.எம். ஸைபுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஊடகப் பிரிவு – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா