ACJU/NGS/2023/249
2023.10.10 (1445.03.24)
பூரண ஆரோக்கியம் என்பது உடல் மாத்திரம் உறுதியுடன் இருப்பதல்ல. மாறாக உடல் நலமும், உள நலமும் ஒருங்கே வளம் பெற்றிருப்பதே ஆரோக்கியமான வாழ்வு எனப்படுகிறது.
உடல் நலம் பாதிப்படைகின்றபோது ஒரு மனிதன் நோயுற்று, வலுவிழந்து, பலவீனமடைவது போல உளநலம் பாதிப்புறுகின்ற பொழுது மனிதனின் அறிவு, அவனது நடத்தை, எண்ணங்கள், சமயோசித சிந்தனை ஆகியனவும் திறனற்றுவிடுகின்றன. ஆகையால் மனித வாழ்வுக்கு உள ஆரோக்கியம் இன்றியமையாததாகும்.
இஸ்லாம் மனிதர்கள் பற்றி அல்-குர்ஆனிலும் நபிமொழிகளிலும் விழித்துப்பேசுகின்ற பொழுது அவர்களது உள்ளங்களை தொடர்புபடுத்தியே அதிகம் பேசியிருக்கிறது. மனித உள்ளம் சீர்பெறுவதற்கான பல வழிகாட்டல்கள், உளவியல் தத்துவங்கள் இஸ்லாத்தின் மூலாதாரங்களில் பொதிந்திருக்கின்றன. இறை நம்பிக்கைதான் அவை அனைத்திற்குமான மையப்புள்ளி. எனவேதான் உளவியல் மற்றும் மனநல மருத்துவம் ஆகிய துறைகளில் ஆன்மிகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
‘நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.’ என்று அல்லாஹு தஆலா அல்-குர்ஆனிலே குறிப்பிடுகின்றான். (ஸூறா அர-;ரஃத் : 28)
நபி மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் அல்லாஹு தஆலாவிடத்தில் செய்த பிரார்த்தனை: ‘இறைவா! என் உள்ளத்தை விரிவுபடுத்துவாயாக!’ என்பதாகவே இருந்தது. (பார்க்க – ஸூறா தாஹா : 25)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உள ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய ஏக்கங்கள், கவலைகள் தீர அல்லாஹு தஆலாவிடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யக்கூடியவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள்.
‘இறைவா! கவலையிலிருந்தும் துக்கத்திலிருந்தும் இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். (நூல் – ஸஹீஹ் புஹாரி : 6369)
ஒரு மனிதன் தன்னுடைய உள்ளத்தை பரிசுத்தமான நிலையில் வைத்திருக்க அவன் பாவங்களை விட்டும், தீய செயல்களை விட்டும் தவிர்ந்து நடக்கவேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.
‘மனித உள்ளத்தின் மீதும் அதனை வடிவமைத்தவன் மீதும் சத்தியமாக. அதற்கு அவன் பாவங்களையும் நன்மைகளையும் அறிந்துகொள்ளும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறான். எவன் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றியடைந்து விட்டான். இன்னும், எவன் அதனை (பாவத்தைக்கொண்டு) களங்கப்படுத்திவிட்டானோ, அவன் திட்டமாக நஷ்டமடைந்து விட்டான்.’ என அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் குறிப்பிடுகிறான். (ஸூறா அஷ-ஷம்ஸ் : 7-10)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதனை மிக அழகாக, அனைவருக்கும் புரியும்படியாக விளக்கியிருக்கிறார்கள்.
‘ஓர் இறைநம்பிக்கையாளர் பாவம் புரிகின்ற போது அவருடைய உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி பதியப்படுகின்றது. தான் செய்த பாவத்தை எண்ணி மனம் வருந்தி அதற்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருகையில் அவருடைய உள்ளமானது பரிசுத்தப் படுத்தப்படுகின்றது. மாறாக, அவர் (அதிலிருந்து மீளாமல்) மீண்டும் மீண்டும் பாவம் செய்து கொண்டேயிருப்பாரெனில் (கரும்புள்ளி பதியப்படுவதும் அதிகரித்து) அவருடைய உள்ளம் முழுவதையும் (நற்போதனைகள் பயன்தராத விதத்தில், இருளாக) சூழ்ந்து கொள்கின்றது.’ என்று கூறிவிட்டு ஸூறா அல்-முதஃப்ஃபிஃபீனின் 14 ஆவது வசனமான ‘அவ்வாறில்லை! மாறாக அவர்கள் செய்தது அவர்களது உள்ளங்களில் துருவாகப் படிந்து விட்டது.’ என்ற வசனத்தை நபியவர்கள் ஓதிக்காட்டினார்கள்.’ (நூல் – இப்னுமாஜா : 4242)
பாவங்களில் ஈடுபடுகின்ற பொழுது எவ்வாறு மனித உள்ளம் சீர்கெட்டு, பாழ்பட்டுவிடுகிறதோ அதேபோல வணக்கங்கள், பிரார்த்தனைகள் போன்ற நற்கருமங்களில் ஈடுபடுகின்ற பொழுது உள்ளத்தில் படிந்திருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து விடுகின்றன என்ற கருத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்படி நபிமொழியில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
மனித மனங்களை சீர்கெடுக்கும் பாவங்களை விட்டும் தூரமாகுவதற்கும், உள்ளங்களை பரிசுத்தப்படுத்துவதற்கும் அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் பின்வரும் வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறான்.
‘(நபியே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலைநாட்டுவீராக! தொழுகை மானக்கேடான காரியங்களை விட்டும், வெறுக்கத்தக்க விடயங்களை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வின் ஞாபகமே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.’ (ஸூறா அல்-அன்கபூத் : 45)
மனிதன் வயோதிகப் பருவத்தினை அடையும்பொழுது உடலளவிலும் மனதளவிலும் பலவீனமடைகின்றான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தள்ளாடும் வயோதிகத்தினை விட்டும் அல்லாஹு தஆலாவிடம் பின்வருமாறு பாதுகாப்புத் தேடியிருக்கிறார்கள்.
‘இறைவா! நான் தள்ளாடும் முதுமைப் பருவத்தை அடைவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.’ (நூல் – ஸஹீஹ் புஹாரி : 6374)
உளநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாகவும் ஐ.நா சபை அக்டோபர் 10 ஆம் திகதியை சர்தேச உளநல தினமாக பிரகடனப்படுத்தியிருக்கியது.
அல்லாஹு தஆலா எம் அனைவரது உள்ளங்களையும் விரிவானதாகவும், நல்லெண்ணங்கள் நிறைந்ததாகவும் ஆக்கியருளவேண்டும் என பிரார்த்திப்பதோடு, உளநலம் பாதிப்புற்று கஷ்டப்படுபவர்கள் விரைவில் சுகம்பெற வேண்டுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கிறது.
அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாழில் ஹுமைதி
பதில் பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா