சர்வதேச தாய்மொழித் தினம் – 2022

ACJU/NGS/2022/041

2022.02.21

மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை மிக முக்கிய அம்சமாக இன்று காணப்படுகின்றது. தாய் மொழி என்பது இறைவன் நமக்களித்த ஒரு பாக்கியமாகும். மொழி என்பது தொடர்பாடலுக்கு மிக அத்தியவசிய ஒரு சாதனமாகக் காணப்படுகின்றது. தற்போது உலகில் சுமார் 7,000க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.

உலகம் முழுவதும் பேசப்படக்கூடிய இந்த அழகான மொழிகளைப் பற்றி அல்குர்ஆனில் கூறப்பட்ட விடயத்தை நாம் இங்கு நினைவூட்டுகின்றோம்.

எல்லாம் வல்ல இறைவன் கூறுகிறான்: ‘அவனே மனிதனை படைத்தான். அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்’. (சூரா அர்ரஹ்மான்: 3,4)

மேலும் அவன் கூறுகின்றான்: இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்;. பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, ‘நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்’ என்றான். (சூரா அல்பகரா: 31). இதிலிருந்து எங்கள் தந்தை ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து தனது அறிவை வெளிப்படுத்தக் கற்றுக்கொண்டார்கள் என்பதையும், இந்த உலகில் நாம் நமது தந்தை ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம் என்பதையும் இவ்வசனம் சுட்டிக்காட்டுகின்றது.

மேலும், முதலாவது அருளப்பட்ட திருவசனங்களில், நாம் அறியாத அனைத்தையும் அல்லாஹ் நமக்குக் கற்றுக் கொடுத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. ‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான’;. (சூரா அலக்: 1-5)

புனித அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது: ‘மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன’. (சூரா அர்ரூம்: 22)

சர்வதேச தாய்மொழித் தினம் என்பது, மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பன்மொழிகளை மேம்படுத்துவதற்கும் பெப்ரவரி 21 ஆம் திகதி உலகளவில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படக்கூடிய ஒரு தினமாகும். இது 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி யுனெஸ்கோவால் முதன்முதலில் அறிவிக்கப்பட்டதோடு, 2002 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

எமது தாய்மொழிகளினூடாக எம்மை அறிமுகப்படுத்துவதற்கு ஆற்றலைப் பெற்ற அல்லாஹ்வின் சிறந்த படைப்பினமாகிய நாம் மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை மதித்து மனிதம் ஓங்க பங்களிப்பு செய்வோமாக.

நாம் வௌ;வேறு மொழிகளில் பேசினாலும் எமது உள்ளத்தில் அனைத்து படைப்பினங்கள் பற்றிய அன்பையும் கருணையையும் ஏற்படுத்த வேண்டுமென எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *