ACJU/NGS/2021/292
2021.12.25
இறைத்தூதர் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிறப்பு உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை தன்னகத்தே உள்ளீர்த்துக்கொண்ட ஓர் அதிசயம் ஆகும்.
ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்லாத்தின் முக்கியமான நபிமார்களிலும் இறைத்தூதர்களிலும் ஒருவர் ஆவார்கள். முஸ்லிம்களாகிய நாம் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபிமார்கள் மற்றும் இறைத்தூதர்களுள் ஒருவர் என நம்புகின்றோம். அவர்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம், நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம், நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் இறுதி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முதலான நபிமார்களின் சங்கிலித்தொடரில் ஒரு பாகமாக உள்ளார்கள்.
புனித அல் குர்ஆனில் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி 25 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவரின் தாயார் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் பற்றி அல் குர்ஆனில் 34 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு குறித்து புனித அல் குர்ஆனின் ஸூரா ‘ஆல இம்ரான்’ (அத்தியாயம்: 3) மற்றும் ஸூரா ‘மர்யம்’ (அத்தியாயம்: 19) ஆகிய அத்தியாயங்களில் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கு மத்தியில் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் காணப்படும் உயர்வையும் அந்தஸ்த்தையும் குறித்துக் காட்டுகின்றது.
உலகில் காணப்படும் அனைத்து மதங்களுக்குமிடையிலான பொதுவான அடிப்படைகளாக அன்பு, கருணை, மனிதநேயம், நீதி, அமைதி, சமாதானம் பேன்றன காணப்படுகின்றன. இந்த பொதுவான அடிப்படைகளானது மதங்களுக்கு மத்தியில் வினைத்திறன் மிக்க, பயனுள்ள உரையாடல்களை மேற்கொள்வதற்கு உதவியாக அமைவதோடு, பரஸ்பர மரியாதை மற்றும் சமூக நல்லிணக்கம் என்பனவற்றை கட்டியெழுப்பி, உலகளாவிய ரீதியில் மனிதர்களுக்கு காணப்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குபவையாகவும் காணப்படுகின்றன.
இந்நாட்களில் உலகெங்கும் வாழும் நம் கிறித்தவ சகோதரர்கள் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிறப்பை நினைவுகூர்கின்றனர். ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மற்றும் ஏனைய அனைத்து நபிமார்களும் உபதேசித்த உறுதிப்படுத்தப்பட்ட அழகிய போதனைகளை நாம் அனைவரும் பின்பற்றி செயற்படவும் அனைத்து மக்களும் நல்வழி, சமாதானம் மற்றும் அபிவிருத்தியை பெறவும் பிரார்த்திக்கிறோம்.
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா