ACJU/NGS/2023/156
2023.06.06 (1444.11.16)
சகவாழ்வு என்பது ஒவ்வொருவரும் தத்தமது அடையாளங்களையும் கலாசாரங்களையும் மார்க்க நம்பிக்கைகளையும் பாதுகாத்த நிலையில், தம்மை மற்றவர்களின் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்தாது அவர்களின் கலாசாரங்கள் மற்றும் மத நம்பிக்கைளை அவமதிக்காது மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்பதாகும்.
நமது தாய் நாடான இலங்கை பல இனத்தவர்களும் பல மதங்களை சார்ந்தவர்களும் வாழுகின்ற ஒரு நாடாகும். இங்குள்ள இனங்களுக்கிடையிலும் பல மதத்தவர்கள் மத்தியிலும் நிலவுகின்ற நல்லுறவிலேயே இந்நாட்டின் மேம்பாடும் முன்னேற்றமும் தங்கியுள்ளது.
முஸ்லிம்களாகிய நம்மை இம்சிக்காத, நம்முடன் சமாதானமாக வாழ்கின்ற மாற்றுமத சகோதரர்களுடன் எவ்வாறு வாழ, நல்லுறவு பாராட்ட வேண்டுமென்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன.
4:36. وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ(سورة النساء: 36
அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்.) எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை..
لَّا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُم مِّن دِيَارِكُمْ أَن تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (سورة الممتحنة :860)
‘உங்களுக்கு எதிராக மார்க்க விடயத்தில் போரிடாத, உங்கள் இல்லங்களை விட்டும் உங்களை வெளியேற்றாதவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதனையும் அவர்களுக்கு நீதி வழங்குவதனையும் அல்லாஹு தஆலா தடை செய்யவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துபவர்களை விரும்புகிறான்’. (60:8)
மேற்குறிப்பிட்ட அடிப்படையில் முஸ்லிம்களாகிய நாம் இந்நாட்டில் வாழும் பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இன்னும் ஏனைய மத நம்பிக்கையுள்ள சமூகத்தினருடன் சமூக நல்லிணக்கத்தைப் பேணும் போது நம்முடைய மார்க்க அடிப்படைகளையும், தனித்துவத்தையும் பாதுகாத்த நிலையில் சகவாழ்வை பேணிக் கொள்வது அவசியமாகும்.
சகவாழ்வை பேணும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் பின்வருமாறு:
• நமது சமூகத்திலுள்ளவர்களுக்கு உதவுவது போன்று பிற சமூகத்தைச் சேர்ந்த ஏழைகள், அநாதைகள், விதவைகள், அங்கவீனர்கள், நோயாளிகள் போன்றோருக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுதல்.
• அயலவர்களுடைய உரிமைகளைப் பேணி அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளல்.
• பொதுவாக அவர்களில் தேவையுடையோர்களுக்கு உதவி செய்தல்.
• அவர்களுக்கு அன்பளிப்புக்களை வழங்குதல்.
• அவர்களுடன் பொது சிரமதானங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், தீமை ஒழிப்பு நடவடிக்கைகள் முதலானவற்றில் மார்க்க வரையறைகளைப் பேணிப் பங்கேற்றல்.
• அவர்களுடைய பாடசாலைகள் மற்றும் பொது இஸ்தாபனங்கள் ஆகியவற்றுக்கு உதவுதல்.
• அவர்களுடன் வியாபாரக் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுபவர்கள் நம்பிக்கை நாணயத்துடனும், தாராளத்தன்மையுடனும் நடந்து கொள்ளல்.
• அவர்களின் மரணித்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறுதல்.
• எமது மார்க்கம் மற்றும் கலாசாரம் சம்மந்தமான தெளிவான விளக்கங்களை அவர்களுக்கு வழங்குதல்.
• அவர்களை எமது வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்துவது மற்றும் அதற்காக அவர்களிடம் உதவி தேடுவது போன்ற அவர்களை அவமரியாதை செய்யும் செயல்பாடுகளை தவிர்த்தல். அவ்வாறே அவர்களுடைய வணக்க வழிபாடுகளில் எம்மை ஈடுபடுத்துவது மற்றும் அதற்காக உதவுவது போன்றவைகள் தடுக்கப்பட்டுள்ளதால் அவைகளை முற்றாக தவிர்த்துக் கொள்ளல்.
• குறிப்பாக அவர்கள் நம்முடைய வணக்கஸ்தலங்களுக்கு அல்லது நாம் அவர்களது வணக்கஸ்தலங்களுக்கு பார்வையிடச் செல்ல நேரிட்டால், அச்சந்தர்ப்பங்களில் அவர்களை நமது வணக்கவழிபாடுகளில் ஈடுபடுத்துவதோ அல்லது நாம் அவர்களுடைய வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதோ முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். எனினும் அப்பயணங்களை எமக்கு மத்தியில் ஒர் அறிமுகம் மற்றும் புரிந்துணர்வுப் பயணங்களாகவே ஆக்கிக் கொள்ளல்.
• அவர்களுடைய வணக்க வழிபாடுகளுடன் தொடர்புபட்ட அடையாளச் சின்னங்களை பாவிப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ளல்.
• அவர்களின் வணக்கஸ்தலங்கள் மற்றும் வணக்க வழிபாடுகளை அவமதிக்காமல் இருத்தல்.
மேலும் மாற்று மத சகோதரர்களுடன் சகவாழ்வைக் கட்டியெழுப்புதல் பற்றிய வழிகாட்டல்களை உள்ளடக்கிய ஒரு பிரகடனத்தையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த 2012.12.27 ஆம் திகதி வெளியிட்டுள்ளது.
எனவே, மாற்று மத சகோதரர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் நோக்கோடு மேற்குறிப்பிட்ட ஒழுங்குகளையும், வழிகாட்டல்களையும் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதன் மூலம் முஸ்லிம்களாகிய நாம் நமது மார்க்கம் மற்றும் கலாசாரம் பற்றிய ஓர் அறிமுகத்தை அவர்களுக்கு எத்திவைப்பதோடு நம்முடைய அடிப்படை நம்பிக்கைகளையும், மார்க்க வரையறைகளையும் பேணிப் பாதுகாத்து செயலாற்றுவதற்கு இது காரணியாக அமையும் என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா எமது அனைத்து விடயங்களிலும் மார்க்க வழிகாட்டல்களைப் பேணி ஒழுகுவதற்கும், சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் கடைபிடிப்பதற்கும் எம் அனைவருக்கும் துணை புரிவானாக!
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் (பத்வா குழு)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா