ACJU/NGS/2023/114
2023.03.22 (1444.08.29)
நீர்வளம் அல்லாஹு தஆலாவின் உன்னதமான அருட்கொடையாகும். அல்குர்ஆனில் 63 க்கும் மேற்பட்ட இடங்களில் அல்லாஹ் தண்ணீரைப் பற்றி குறிப்பிட்டுள்ளான்.
தண்ணீர் என்பது மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் என்று உலகில் வாழக்கூடிய அனைத்து ஜீவராசிகளினதும் உயிர் வாழ்க்கைக்கு மிக அத்தியவசியமான ஒன்றாகும். அதேபோன்று உயிர் இல்லாத சடப்பொருட்களின் உற்பத்திக்கும் தண்ணீர் இன்றியமையாததாகும்.
நிலத்தின் ஈரமும் காற்றின் குளிர்ச்சியும் பயிர்களின் பசுமையும் செழிப்பும் இயற்கையின் எழிலும் உலகின் மொத்த இயக்கமும் தண்ணீரின் இருப்பிலேயே தங்கியிருக்கிறது.
பருகுதல், சுத்தம் செய்தல், ஆடைகளைக் கழுவுதல், குளிப்பு, விவசாயம் செய்தல் மற்றும் இதர வீட்டுப்பாவனைகள் என்று நீரின் பயன்பாடும் தேவையும் எமது வாழ்வில் தவிர்க்க முடியாததாகும்.
எல்லா படைப்பினங்களுக்கும் நீரே முதன்மைக் கூறு என்பதை அல்குர்ஆன் பல இடங்களில் உறுதிப்படுத்துகிறது. ‘மேலும், எல்லா உயிரினங்களையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்தான்…’ (ஸுறா அந்நூர்: 45)
நாம் நீரினை இரண்டு பிரதான வழிகளில் பெற்றுக்கொள்கிறோம். முதலாவது, ஊற்றுகள் மற்றும் நிலத்தடி நீராகும். ‘(பூமியில்) உயர்ந்த மலைகளை நாம் ஆக்கினோம். இனிமையான தண்ணீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.’ (ஸுறா முர்ஸலாத்: 27) என்று திருமறை வசனம் குறிப்பிடுகின்றது.
இரண்டாவது, மழை நீராகும். அல்லாஹு தஆலா மழையை அவனது கருணையின் வடிவமாகவும் அருளாகவும் வல்லமையின் குறியீடாகவும் குறிப்பிடுகின்றான். ‘…அவனே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறான்.’ (ஸுறா புர்கான்: 48) மேலும் ‘அவனே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்கிறான். அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது. உங்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கான மற்றும் மரங்கள், புற்பூண்டுகளும் உண்டாகியிக்கின்றன.’ (ஸுறா அந்நஹ்ல்: 10)
உலகில் 97.5 சதவீதம் உப்புச் சுவை கொண்ட கடல் நீராகும். மீதமுள்ள 2.5 சதவீதமே சுத்தமான நீராகும். இதில் 2.24 சதவீதம் துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகளாகவும் பணிப்பாறைகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. எஞ்சியுள்ள 0.26 சதவீதத்தையே நாம் குடிநீராகவும் விவசாயத்துக்காகவும் பயன்படுத்தி வருகிறோம்.
எம்மில் சிலர் பருகுவதற்கு சுத்தமான குடிநீர் இன்றியும் தமது அன்றாட விடயங்களுக்குப் போதுமான தண்ணீர் வசதி இல்லாமலும் கஷ்டப்படுகின்றனர். இன்னும் சிலர் தண்ணீரை அலட்சியப்படுத்தி, வீண்விரயம் செய்கின்றனர்.
வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹு தஆலா ஒருபோதும் விரும்புவதில்லை. மார்க்கக் கடமைகளில் கூட தண்ணீரை வீணாகப் பயன்படுத்துவதை இஸ்லாம் தடுத்திருக்கிறது. ஒருமுறை அளவுக்கதிகமான நீரைப் பயன்படுத்தி அங்கத்தூய்மை (வுளு) செய்து கொண்டிருந்த ஒரு நபித்தோழரைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நீரை வீண்விரயம் செய்ய வேண்டாம்’ எனத் தடுத்தார்கள். (நூல்: இப்னுமாஜா)
ஆண்டுதோறும் நீரின் அவசியத்தை உணர்த்தவும் நீர்வளங்களைப் பாதுகாத்தல் குறித்து மக்களை விழிப்புணர்வூட்டும் நோக்கிலும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி உலக தண்ணீர் தினம் ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கப்படுகிறது.
எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள நீர் வளத்தை சரியான முறையில் பராமரித்து, முகாமை செய்வதும் சிக்கனமாக பயன்படுத்துவதும் பாதுகாப்பதும் சன்மார்க்கக் கடமையாகும். பொறுப்புணர்வோடும் அமானிதமாகவும் தேவைக்குப் போதுமானளவு மாத்திரம் தண்ணீரைப் பயன்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.
நீர்நிலைகளில் குப்பகைளையும் கழிவுகளையும் வீசி மாசுபடுத்தாமல் நீர்வளத்தைப் பாதுகாப்பதனூடாக அனைத்து உயிரினங்களும் சுத்தமான நீரைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வோம். அல்லாஹு தஆலா எம்மனைவரையும் முன்மாதிரி மிக்க சமூகமாக வாழ்ந்து அழகிய நடைமுறைகளையும் முன்மாதிரிகளையும் எமது தலைமுறையினருக்கு விட்டுச் செல்ல எமக்கு கிருபை செய்வானாக.
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா