பாலூக்கத் தேவையை முறைகேடாக நிறைவேற்றிக் கொள்ளும் விடயத்தை சட்டமாக்குவதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது

ACJU/NGS/2024/355
2024.07.30 (1446.01.23)

 

கௌரவ ஜனாதிபதி,
ரணில் விக்கிரமசிங்க,
ஜனாதிபதி காரியாலயம்,
கொழும்பு.

 

LGBTQ+ என்பது ஒரு பாலீர்ப்புப் பெண் அல்லது ஒரு பாலீர்ப்பு ஆண் அல்லது இரு பாலீர்ப்பாளர் மற்றும் பாலின மாற்றம் செய்யும் சமூகத்தை ஒருங்கே குறிக்கப் பயன்படும் சொற்றொடர் ஆகும்.1

இறைவன் முதன் முதலில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் என்ற ஆணைப் படைத்து அவர்களுக்கு மனைவியாக ஹவ்வா அலைஹஸ்ஸலாம் என்ற பெண்ணையும் படைத்து, அவர்களிருவரிலிருந்து ஆண்களையும் பெண்களையும் இவ்வுலகில் பரவச் செய்துள்ளான்.2

மனித இனம் தொடங்கிய காலத்தில் இருந்து ஆணாக பிறந்தவர் ஆணாகவே வாழ்ந்து மரணிப்பதும் பெண்ணாகப் பிறந்தவள் பெண்ணாகவே வாழ்ந்து மரணிப்பதும் நடைமுறையாகவும் மனித இயல்புக்கு ஏதுவானதாகவும் இருந்து வருகின்றது.

அவ்வாறே, அன்று தொடக்கம் இன்று வரை வரலாறு நெடுகிலும் திருமணம் எனும் நல்லறம் மூலமாக ஆணையும் பெண்ணையும் இணைத்து அதன் மூலம் மனித சமுதாயம் பல்கிப் பெருகுவதே நடைமுறையாகும்.

ஓர் ஆண் தன்னைப் பெண்ணாகவும் ஒரு பெண் தன்னை ஆணாகவும் மாற்றிக்கொள்வதும் ஓர் ஆண் தனது பாலூக்கத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள தன்னைப் போன்ற ஓர் ஆணையும் ஒரு பெண் தனது பாலூக்கத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள தன்னைப் போன்ற ஒரு பெண்ணையும் தெரிவு செய்யும் ஓரினச்சேர்க்கை அல்லது தன்பாலின ஈர்ப்பு எனும் கலாச்சாரமும் இயற்கைக்கு மாற்றமானதாகும்.

சுதந்திரம் என்ற பெயரில் ஆணும், ஆணும் பெண்ணும், பெண்ணும் இணையும் இவ்வாறான ஓரினச்சேர்க்கைக் கலாச்சாரத்தை இழிசெயல் என்று அனைத்து மதங்களும் கலாச்சாரங்களும் குறிப்பிட்டிருக்கின்றன.

ஓர் ஆண் இன்னொரு ஆணுடன் தனது பாலூக்கத் தேவையைப் பூர்த்தி செய்யும் மோசமான கலாச்சாரம் சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தில் உருவெடுத்த பொழுது, அக்குற்றத்தைச் செய்தவர்கள், அதனை அங்கீகரித்தவர்கள், அதன் போது மௌனமாக இருந்தவர்கள் அனைவரும் முற்றாக அழிக்கப்பட்ட வரலாறு அல்-குர்ஆனில் பல இடங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அல்-குர்ஆன் அந்தச் செயலை உலகத்தில் அதற்கு முன்னர் எவரும் செய்யாத மானக்கேடான செயல் என்றும் அவ்வாறு செய்தவர்கள் வரம்பு மீறிய மக்கள் என்றும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட இயற்கை முறையை மீறிவிட்டார்கள் என்றும் இந்தச் செயலைச் செய்த கூட்டத்தினர் வாழ்ந்த ஊரை தலைகீழாகக் கவிழ்த்தி அவர்கள் மீது சுடப்பட்ட செங்கற்களை மழையாய் பொழியச் செய்ததாகவும் எச்சரிக்கின்றது.3

மிருகங்கள், பறவைகள் உட்பட அனைத்து உயிரினங்களும் அவற்றின் பாலூக்கத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும் அவற்றின் இனப்பெருக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கும் ஒரு போதும் தன் பாலினத்தை தெரிவு செய்த வரலாறே இல்லை.

அந்தவகையில், ஓரினச்சேர்க்கையாளர்கள் எனப்படும் ஒரு சிறிய கூட்டத்தின் கோரிக்கையை ஏற்று இறைவனால் அமைக்கப்பட்டுள்ள இயல்புக்கு புறம்பாகவும் உலக சமூகங்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித நடைமுறைக்கு மாற்றமாகவும் அக்கோரிக்கையை சட்டமாக்குவது எமது எதிர்கால சமூகம் பல்வேறுபட்ட பிரச்சினைகள், கொடிய நோய்கள் மற்றும் சமூக, கலாச்சார சீர்கேடுகளை எதிர்நோக்குவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

எனவே, நமது நாட்டின் கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாற்றமாக இப்படியான சட்டங்களை சட்டமாக்குவதை இஸ்லாமியர்களாகிய நாம் வன்மையாக எதிர்ப்பதோடு இம்முயற்சியில் ஈடுபட வேண்டாம் என கௌரவ ஜனாதிபதி அவர்களையும் பாராளுமன்றத்தையும் கேட்டுக் கொள்வதோடு இப்படியான சமய, சமூக மற்றும் கலாச்சாரச் சீர்கேடுகளை உண்டாக்கக்கூடிய சட்டங்களை சட்டமாக்கும் விடயத்தில் ஒத்துழைக்க வேண்டாம் எனவும் பொது மக்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

————————————————————————-

 

[1] Acronyms Initialisms & Abbreviations Dictionary Volume 1 Part 1. Gale Research Co. 1985

 

[2] அந்-நிஸாஉ : 01

 

[3] அல்-அஃராப் : 80-84, அல்-ஹூத் : 77-83, அஷ்-ஷுஅரா : 159-175

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *