‘மன்ஹஜ்’ – மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்

30.01.2022
26.06.1443

 

மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்

முன்னுரை

நம் நாட்டில் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் ‘அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்’ கோட்பாட்டினைச் சார்ந்தவர்களாக தமது சன்மார்க்கக் கடமைகளையும் கிரியைகளையும் நிறைவேற்றி வந்துள்ளதுடன் நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு, அமைதி ஆகியவற்றுக்கு பங்களிப்புச் செய்து வந்துள்ளனர்.

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கோட்பாட்டினை பாதுகாப்பதோடு ஆன்மீகம், ஒழுக்கம், கல்வி, பண்பாடு, நாகரிகம், சமூகக் கட்டுக்கோப்பு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கவும் அவற்றை மேம்படுத்தவும் மஸ்ஜித்கள், தக்கியாக்கள், ஸாவிய்யாக்கள், பள்ளிக்கூடங்கள், அரபுக் கல்லூரிகள் என பல்வேறு சமூக அமைப்புக்கள் வரலாறு நெடுகிலும் பாடுபட்டு வந்துள்ளன.

மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் காணப்படும் கருத்து வேறுபாடுள்ள விடயங்களை நாம் கையாளும் சந்தர்ப்பத்தில், அதற்கென எமது முன்னோர்களால் வரையறுக்கப்பட்ட ஒழுங்குகளை மதித்து செயற்பட வேண்டும். அதன்போதே, நமது முன்னோர்களின் வழிகாட்டல்களையும் வழிமுறைகளையும் பணிகளையும் நாம் பாதுகாத்து செயற்பட்டதாக அமையும்.

 

எமது சமய, சமூக, பண்பாடு ரீதியான விடயங்களை பேணி, பாதுகாத்து, மேம்படுத்துவதற்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் நடந்து கொள்வதோடு, அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் கோட்பாட்டின் வரையறைக்குள் நின்று, தெளிவான அடிப்படைகளை வகுத்து, அனைவரும் ஒன்றித்து பயணிப்பதே இந்த மன்ஹஜின் நோக்கமாகும்.

 

அவ்வடிப்படையில் பின்வரும் நிலைப்பாடுகளை இலங்கை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இஸ்லாமிய அமைப்புகளும் தமது சமய, சமூக பொது விடயங்களில் மதித்து செயற்படுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாக வேண்டிக் கொள்கிறது.

1. அகீதா (நம்பிக்கைக் கோட்பாடு):

1.1. அகீதா (நம்பிக்கைக் கோட்பாடு) விவகாரத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தை தழுவிச் செயற்படல்.
1.2. அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன், அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.

 

2. அல்லாஹ்வுக்குரிய தாத் மற்றும் ஸிபாத்கள் (பண்புகள்)

2.1 அல்லாஹ்வின் தாத் மற்றும் ஸிபாத்கள் பற்றி அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ளவற்றை அவ்வாறே ஏற்றுக்கொள்ளல். அவை அல்லாஹ்விற்கு மாத்திரம் பிரத்தியேகமானவைகளேயன்றி, அவை படைப்புகளுக்கு ஒப்பானவையோ (தஷ்பீஹ்) அல்லது அங்க அவயங்களோ (ஜாரிஹா), உடல் உறுப்புக்களோ (அஃழாஉ) அல்ல. அவற்றை மறுப்பதும் (தஃதீல்) அவைகளுக்கு உருவம் கற்பிப்பதும் (தஜ்சீம்) தவறான கொள்கைகளாகும். அவற்றிற்கு விளக்கம் அளிக்கும்போது எமது முன்னோர்களான இமாம்கள் கையாண்டுள்ள ‘தஃப்வீழ்’ ‘தஃவீல்’ வழிமுறைகளைக் கையாளுதல். மேற்படி வழிமுறைகளே, அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தைச் சேர்ந்த ஸலபுஸ் ஸாலிஹீன்களினதும் அல்அஷ்அரிய்யாக்களினதும் அல்மாதுரீதிய்யாக்களினதும் நிலைப்பாடாகும்.

2.2 ‘அத்வைதம்’ எல்லாம் அவனே (ஹமவோஸ்த்) எனும் சிந்தனையும் அல்லாஹு தஆலா தனது படைப்பினங்களில் இறங்குதல் என்ற ‘ஹுலூல்’ கொள்கையும் அவன் அவற்றில் ஒன்றித்து விடல் என்ற ‘இத்திஹாத்’ சிந்தனையும் இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான, நிராகரிப்பை ஏற்படுத்தும் சிந்தனைகளாகும்.

 

3. மலக்குமார்கள்

3.1. மலக்குமார்கள் என்போர் அல்லாஹு தஆலாவினால் ஒளியின் மூலம் படைக்கப்பட்ட ஒரு சிரேஷ்ட படைப்பினராவர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு ஒருபோதும் மாறு செய்யாதவர்கள் என்பதுடன் அவற்றை அப்படியே ஏற்று நடப்பவர்கள் என நம்புதல்.

 

4. வேதங்கள்

4.1. மனித சமுதாயம் இவ்வுலகில் நேரான வழியில் நடப்பதற்காகவும் மறுமையில் வெற்றி பெறுவதற்காகவும் அல்லாஹ் தனது தூதர்களின் மூலம் அவர்களுக்கு வழங்கிய கட்டளைகளும் வழிகாட்டல்களுமே வேதங்களாகும் என்பதையும், அல்குர்ஆன் என்பது எமது உயிரிலும் மேலான நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட இறுதி வேதம் என்பதையும் உறுதியாக நம்புதல்.

 

5. நபிமார்கள் மற்றும் றஸூல்மார்கள்

5.1. அல்லாஹ்வினால்; இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நபிமார்கள், றஸூல்மார்கள் என அல்குர்ஆன் மற்றும் ஹதீஸில் அறியப்படும் அனைவரையும் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்கள் என்றும், பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட ‘மஃஸூம்’ கள் என்றும் உறுதியாக நம்புதல்.

 

6. இறுதி நபித்துவம்

6.1. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட இறுதி நபியும் ரஸூலும் ஆவார்கள். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இதற்கு மாற்றமான கொள்கைகளுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை ஏற்றுக்கொள்ளல்.

 

6.2. முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பின்னர் தன்னை ஒரு நபியென வாதிட்ட அல்லது வாதிடுகின்ற ஒருவரை ஒரு முஸ்லிம் தமது மதத் தலைவர் அல்லது சன்மார்க்க சீர்திருத்தவாதி என அங்கீகரிப்பது மேற்கூறிய இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைக்கு முரணானதாகும்.

 

7. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதும் அவர்களைப் புகழ்வதும் அவர்கள் மீது ஸலவாத் சொல்வதும் அவர்களது சுன்னத்துகளைப் பின்பற்றுவதும்

 

7.1. அன்பு நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தனது உயிரை விடவும் தாய், தந்தையர்களை விடவும், தனது பிள்ளைகளை விடவும், இவ்வுலகில் அனைவரை விடவும் நேசிப்பது ஒரு முஃமினின் பரிபூரண ஈமானுக்கு அடையாளமாகும். அன்னவர்களை உலகத்தார் அனைவருக்கும் மிகப் பெரும் அருட்கொடையாக அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவ்வருட்கொடைக்கு நன்றி செலுத்துவதும் அதனைப் பிரஸ்தாபிப்பதும் மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட விடயங்களாகும்.

 

7.2. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படைப்பினங்களில் மிகவும் உயர்வானவர்; அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவர்; எல்லா விதமான பாவங்களில் இருந்தும் பாதுகாக்கப்பட்டவர்; அவர்களின் உறுதி செய்யப்பட்ட சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் மார்க்கமாகும். அவர்களை கண்ணியப்படுத்துவதும் அவர்களுடன் நேசம் கொள்வதும் ஈமானின் ஓர் அம்சமாகும். அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வது தொழுகையில் கட்டாயமானதாகும் என்பதுடன், ஏனைய சந்தர்ப்பங்களிலும் மிகவும் விஷேடமான அமலாகும்.

 

7.3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகிமை, கீர்த்தி, வாழ்க்கை வரலாறு, குணாதிசயம் மற்றும் சுன்னா என்பவற்றை மார்க்க வரையறைகளைப் பேணி முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் எடுத்துச் சொல்வது, அது பற்றி பிரஸ்தாபம் செய்வது, அவர்களது நேசத்தை உள்ளங்களில் வேரூன்றச் செய்வது முஸ்லிம்களின் மீது கடமையாகும். இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதம் பொன்னான சந்தர்ப்பமாகும். அம்மாதத்தில் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் ஏற்றமானதாகும்.

 

8. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சங்கையான அடக்கஸ்தலத்தை ஸியாரத் செய்தல்

8.1. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது முபாரக்கான உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று அவர்களது சங்கையான அடக்கஸ்தலத்தை ஸியாரத் செய்வது முக்கிய ஸுன்னத்தாகும்.

 

9. இறுதி நாள்

9.1. அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ள இறுதி நாளையும் அதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் நம்புதல்.

 

10. கழா கத்ர்

10.1. நன்மை, தீமை அல்லாஹ்வின் விதிப்படியே நடைபெறும் என்று நம்புதல்.

 

11. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அஹ்லுல் பைத், குடும்பத்தார்கள் மற்றும் தோழர்கள் (ஸஹாபிகள்)

11.1. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸஹாபிகளில் அல்-குலபாஉர் ராஷிதூன்களான ஹழ்ரத் அபூபக்ர், ஹழ்ரத் உமர், ஹழ்ரத் உஸ்மான், ஹழ்ரத் அலீ றழியல்லாஹு அன்ஹும் ஆகியோர் மிக சிரேஷ்டமானவர்களாவர்.

 

11.2. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்கள், (அஹ்லுல் பைத்), ‘உம்மஹாத்துல் முஃமினீன்’களான நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் சிறப்புக்குரியவர்கள். அவர்கள் அனைவரையும் நேசிப்பது ஈமானின் முக்கிய பண்புகளில் உள்ளதாகும்.

 

11.3. ஸஹாபிகள் அனைவரும் நேர்மையானவர்கள். அவர்கள் இஸ்லாத்தின் எழுச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பல்வேறு தியாகங்கள் செய்தவர்கள். அவர்களை நேசிப்பது ஈமானின் அடையாளங்களில் உள்ளதாகும். அத்தகைய நபித்தோழர்களை விமர்சிப்பதும் தூற்றுவதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். நபித்தோழர்களான சங்கைமிகு ஸஹாபிகளை தூற்றுவது அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத் கோட்பாட்டுக்கு மாற்றமானதும் முற்றுமுழுதான வழிகேடுமாகும்.

(சஹாபிகள் விடயமாக 2015.05.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நடத்திய ‘மனாகிபுஸ் சஹாபா’ தேசிய மாநாட்டின் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது).

 

12. சங்கைமிகு அவ்லியாக்கள் (இறைநேசர்கள்)

12.1. அவ்லியா என்பது நேசன் எனும் பொருள்கொண்ட ‘வலீ’ எனும் அரபுச் சொல்லின் பன்மையாகும். அல்லாஹு தஆலாவின் கட்டளைகளை மதித்து வாழ்வில் எடுத்து நடப்பதுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளைப் (சுன்னத்களைப்) பின்பற்றி தங்களது அகத்தையும் புறத்தையும் பரிசுத்தப்படுத்தி அல்லாஹு தஆலாவின் நெருக்கத்திலும் நேசத்திலும் உயர் நிலையை அடைந்தவர்களே சங்கைமிகு அவ்லியாக்கள் (இறைநேசர்கள்) ஆவார்கள். இத்தகைய இறைநேசர்களுக்கு உலக வழமைக்கு மாற்றமான ‘கராமத்’ எனப்படும் அதிசயிக்கத்தக்க நிகழ்வுகள் சிலவேளைகளில் அல்லாஹ்வின் நாட்டப்படி இடம்பெறலாம் என்பது அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

 

13. சுன்னாவும் பித்ஆவும்

13.1. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறுதி செய்யப்பட்ட சொல், செயல், அங்கீகாரம் என்பன ஸுன்னத் ஆகும். ஸுன்னத்தைப் பின்பற்றுவது நன்மையான காரியமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இல்லாத, மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட விடயம் பித்அத் எனப்படும். அது ஷரீஅத்திற்கு முரணில்லாதிருப்பின் வரவேற்கத்தக்க பித்அத் ஆகும். நபியவர்களது ஸுன்னாவுக்கு அல்லது ஸஹாபிகளின் கூற்றுக்களுக்கு அல்லது இஜ்மாஉக்கு முரண்படக்கூடியதாக அமையுமாயின் அது வழிகேட்டுக்குரிய பித்அத்தாகும். இதுவே பித்அத் தொடர்பான சங்கையான இமாம்களின் நிலைப்பாடாகும்.

 

14. அல்-ஃபிக்ஹ்

14.1. மார்க்க சட்ட விவகாரங்களில் முடிவெடுப்பதற்கு அல்குர்ஆன், அல்ஹதீஸ், அல்இஜ்மாஉ, அல்கியாஸ் ஆகிய மூலாதாரங்களிலிருந்து பெறப்படும் ஆதாரங்களையும் அவற்றுக்கு எமது முன்னோர்களான ஸஹாபிகள், தாபிஃகள், இமாம்கள் வழங்கியுள்ள விளக்கங்களையும் அடிப்படையாகக் கொள்ளல்.

 

15. மத்ஹப்கள்

15.1. அல்குர்ஆன், அல்ஹதீஸ், அல்இஜ்மாஉ, அல்கியாஸ் ஆகிய மூலாதாரங்களிலிருந்து ‘முஜ்தஹித் முத்லக்’ என்ற தகுதியுள்ளவர்களால் அடிப்படைகளை (உஸுல்களையும் கவாஇத்களையும்) வைத்து காலா காலம் தோன்றிய மார்க்க அறிஞர்களினால் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதே மத்ஹப்களாகும். மார்க்க கிளை விவகாரங்களில் பின்பற்றப்படத் தகுந்த, உலக முஸ்லிம்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹனபி, மாலிகி, ஷாபிஈ, ஹன்பலி ஆகிய நான்கு மத்ஹப்களும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. அவற்றைப் பின்பற்றுவோர் நேர்வழியில் இருக்கின்றனர். குறித்த நான்கு மத்ஹப்களைப் பின்பற்றக் கூடாது; அவ்வாறு பின்பற்றுவது வழிகேடு என்ற கூற்று முற்றிலும் பிழையானதாகும். மத்ஹப்களைப் புறக்கணித்து அல்குர்ஆன், அல்ஹதீஸுக்கு தன்னிச்சையாக விளக்கமளிப்பது வழிகேட்டின் பால் இட்டுச் செல்லும்.

 

16. ஷாபிஈ மத்ஹப்

16.1. அன்றாட வணக்க செயற்பாட்டு விவகாரங்களில் ஆரம்ப காலம் தொட்டு ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் இயல்பாக காணப்படுகின்றன. இலங்கையில் அன்று முதல் இன்று வரை பெரும்பான்மை முஸ்லிம்கள் ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றியவர்களாகவே இருந்து வந்துள்ளனர். அவ்வாறே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மார்க்கத் தீர்ப்புக்களும் (ஃபத்வாக்களும்) வழிகாட்டல்களும் ஷாபிஈ மத்ஹபை அடிப்படையாகக் கொண்டவையாகவே அமையப்பெற்று வருகின்றன.

16.2. மிக இக்கட்டான அல்லது சங்கடமான சூழ்நிலைகளில் மாத்திரம் ஹனபி, மாலிகி, ஹன்பலி ஆகிய உலக முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏனைய மத்ஹப்களின் கருத்துக்களை உள்வாங்கும் பொழுது அவற்றுக்கான முறைகளைப் பேணியே ஜம்இய்யா செயலாற்றி வருகின்றது.

 

17. அல்குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு தன்னிச்சையாக விளக்கம் கொடுத்தல்

17.1. அல்குர்ஆன் மற்றும் ஹதீஸை விளங்க, அவற்றுக்கு வியாக்கியானம் செய்ய முனைவோர் அவற்றுக்கான அடிப்படைகளை (உஸூல்கள்) கட்டாயம் பின்பற்றியாக வேண்டும் என்பதோடு குறித்த வசனம் மற்றும் ஹதீஸ் தொடர்பில் முபஸ்ஸிரீன்கள் மற்றும் முஹத்திஸீன்கள் கூறும்; கருத்துக்களையும் விளக்கங்களையும் அவசியம் கவனத்திற் கொள்ளல் வேண்டும். அதற்கு மாற்றமாக தமது தனிப்பட்ட கருத்துக்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அவற்றை விளங்க முயற்சிப்பது, அவற்றுக்கு வியாக்கியானம் செய்வது வழிகேடாகும். அவற்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

18. அல்-இஹ்ஸான் (தஸவ்வுப், தஸ்கிய்யா) – உளப் பரிசுத்தம் மற்றும் இறை நெருக்கம்

18.1. முஹத்திஸீன்களிடம் ‘ஹதீஸு ஜிப்ரீல்’ எனப் பிரபல்யமான ஹதீஸில் வந்துள்ள ‘அல்இஹ்ஸான்’ என்பது உளப் பரிசுத்தத்தைக் குறிக்கிறது. அதற்கு ‘தஸ்கியதுன் நப்ஸ்’, ‘பிக்ஹுல் பாதின்’, ‘தஸவ்வுப்’ போன்ற பல்வேறு பெயர்கள் உபயோகிக்கப்படுகின்றன என்பதுடன், அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தைச் சேர்ந்த ஷைகுமார்களுடைய வழிகாட்டலின் கீழ் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தின் அடிப்படைகளுக்கு உட்பட்டு நெறிபிறழாது இயங்கும் ஆன்மீக தரீக்காக்களும் அவற்றின் ஆன்மீகப் பயிற்சிகளும் ஹதீஸு ஜிப்ரீலில் வந்துள்ள ‘அல்இஹ்ஸான்’ எனும் உளப் பரிசுத்தத்தை உருவாக்கிக்கொள்ள உதவுகின்றன என்பதை மனதார ஏற்றுக் கொள்ளுதல். மேலும், அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்துடைய கோட்பாட்டுக்கு முரணாகவோ, ஷரீஆவுக்கு முரணாகவோ செயற்படும் எந்த ஒரு தஸவ்வுப் சிந்தனைகளையும் நாம் அங்கீகரிப்பதில்லை.

19. ஸியாரத்துல் குபூர் (அடக்கஸ்தலங்களைத் தரிசித்தல்)

19.1. அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பது ஸுன்னத்தாகும். அது மரணத்தையும் மறுமை வாழ்வையும் நினைவூட்டுகிறது. ஸியாரங்கள் எமது நல்லடியார்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடங்களாகும். இவற்றைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். அவ்வகையில் மார்க்க வழிகாட்டல்களுக்கு அமைய ஸியாரங்களுக்கு சென்று வருவது ஏனைய அடக்கஸ்தலங்களுக்குச் சென்று வருவது போன்றதொரு ஸுன்னத்தாகும்.

 

20. பிற மதங்கள் மற்றும் அவர்களால் வணங்கப்படுபவை

20.1. பிற மதங்களையும் பிற மதத்தவர்களால் வணங்கப்படுபவற்றையும் அவர்களின் வணக்கஸ்தலங்களையும் அவர்களது மதம் சார்ந்த கொள்கை, கோட்பாடுகளையும் நம்பிக்கைகளையும் புராதன இடங்களையும் அவமரியாதை செய்வது அல்லது தூற்றுவது அல்லது சேதப்படுத்துவது அல்லது இவை போன்ற வேறு செயல்களில் ஈடுபடுவது முற்றிலும் தடுக்கப்பட்டதாகும். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறது.

 

21. பிற மதத்தவர்களுடனான உறவு

21.1. முழு மனித குலமும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித்தோன்றலாகும் என்பது எமது நம்பிக்கையாகும். எனவே, மனிதர்கள் அனைவரும் இனம், மதம், மொழி, முஸ்லிம்கள்- முஸ்லிமல்லாதவர்கள் என்ற வித்தியாசங்களைக் கடந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மற்றவரின் உயிர், பொருள், மானம், உரிமை ஆகியவற்றை முறையாக பாதுகாத்து, அவரவருக்கு நாட்டில் கொடுக்கப்பட்டுள்ள மத உரிமைகளை மதித்து, ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடும் ஒத்துழைப்போடும் வாழ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டலாகும்.

21.2. இஸ்லாம் எந்த ஆட்சிக்குக் கீழும் வாழ்வதற்கு தடைசெய்யவில்லை. முஸ்லிம்கள் எந்த ஆட்சிக்குக் கீழும் வாழ்வதற்கு முடியும். முஸ்லிம்கள் இஸ்லாமிய ஆட்சிக்குக் கீழ் மட்டுமே வாழ வேண்டும் என்பது முற்றிலும் தவறான கொள்கையாகும். எந்த ஆட்சிக்குக் கீழ் வாழ்ந்தாலும் அல்லாஹ்வினால் ஏவப்பட்டுள்ள ஏவல்களை (பர்ளுகளை) நிறைவேற்றுதல் வேண்டும். அவனால் தடுக்கப்பட்டுள்ள (ஹராமான)வற்றை விலகி நடத்தல் வேண்டும்.

22. வழிதவறிய சிந்தனைகள்

• அகிலத்தாருக்கு ரஹ்மத்தாக அனுப்பப்பட்ட எங்களது உயிரிலும் மேலான இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடத்தல்.

• முஸ்லிம் உம்மத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ்களை மறுத்தல்.

• ஸஹாபாக்கள் விடயத்தில் அவமரியாதையாக நடந்துகொள்ளல்.

• இமாம்கள் மற்றும் மார்க்க அறிஞர்களை அவமதித்தல் மற்றும் அவர்களின் வழிகாட்டல்களைப் புறக்கணித்தல்.

• மத்ஹப்களைப் புறக்கணிப்பதோடு அவற்றைப் பின்பற்றுவதை வழிகேடாகக் கருதுதல்.

• மார்க்கத்தின் உட்பிரிவு விவகாரங்களில் தமது கருத்துக்கு முரண்படுவோரை ஏற்க மறுத்து அவர்களை வழிகேடர்கள் எனக் கருதி அவர்களின் உரிமைகளை மறுத்தல்.

• நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு, அமைதி ஆகியவற்றுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளல், அதற்குப் பிறரைத் தூண்டுதல்.

• பிற மதங்களை நிந்தித்தல், முஸ்லிம்கள் இஸ்லாமிய ஆட்சிக்குக் கீழ் மட்டுமே வாழ வேண்டும் அல்லது ஓர் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டுவதே இஸ்லாத்தின் அடிப்படை என்ற கொள்கையைக் கொண்டிருத்தல்.

• ‘அல்வலாஃ வல்பராஃ’ என்பதை தவறாக விளங்கி, முஸ்லிம்கள் முஸ்லிம்களுடன் மாத்திரமே நல்லுறவு கொள்ள வேண்டும் என்பதுடன் முஸ்லிமல்லாதவர்களுடன் நல்லுறவு கொள்ளக்கூடாது என்ற தவறான சிந்தனையைக் கொண்டிருத்தல்.

மேற்கூறப்பட்டவைகள் வழிதவறிய சிந்தனைகளாகும். அவற்றை வஹ்ஹாபிஸம் என்ற பெயரிலோ அல்லது வேறெந்தப் பெயர்களிலோ அழைக்கப்பட்டாலும் அவையனைத்தையும் ஜம்இய்யா முற்று முழுதாக நிராகரிக்கின்றது.

23. இஸ்லாமிய போதனைகளை முன்வைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

 

• அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின் கோட்பாட்டின் வரையறைக்கு உட்பட்டிருத்தல்.

• அன்பு, சகோதரத்துவம், மனிதநேயம் போன்றவற்றை வளர்க்கக்கூடிய விதத்தில் அமைந்திருத்தல்.

• இந்நாட்டின் ஜனநாயக விழுமியங்களை மதித்து செயற்படக்கூடியதாக இருத்தல்.

• பிறரின் கௌரவம், மானம் பாதுகாக்கப்படும் விதத்தில் அமைதல்.

• முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சமூகங்களுக்கு இடையில் விரோதங்களையும் குரோதங்களையும் உண்டாக்கும் விதத்தில் அமையாதிருத்தல்.

• கருத்துத் திணித்தலோ வற்புறுத்தலோ இன்றி மிருதுவான முறையிலும் நளினமான முறையிலும் அழகிய உபதேசங்களின் மூலமும் மார்க்கத்தை முறையாகவும் நடுநிலையாகவும் போதித்தல்.

• மார்க்க விவகாரங்களில் மேற்கூறப்பட்ட ஜம்இய்யாவின் நிலைப்பாடுகளை ஏற்று செயற்படல்

மேற்கூறப்பட்ட அடிப்படைகளில் சமூகத்திலுள்ள இஸ்லாமிய போதனை முறைகள் அமைய வேண்டுமென ஜம்இய்யா வலியுறுத்துகின்றது.

முடிவுரை

மேற்கூறிய விடயங்களை இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று கடைப்பிடிக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கின்றது. மேலும், அனைத்து முஸ்லிம்களும் தமக்கு மத்தியிலும் ஏனைய சமூகங்களுடனும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து அன்பு, இரக்கம், நடுநிலை மற்றும் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்து ஒரு முன்மாதிரியான சமூகத்தை உருவாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றது.

அத்துடன் இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் போதனைகளின் அடிப்படையில் வாழுகின்ற, மார்க்கத்தின் மேம்பாட்டிற்கும் சமூகத்தினதும் தேசத்தினதும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கின்ற, ஒரு கட்டுக்கோப்பான முன்மாதிரி முஸ்லிம் சமூகத்தை உருவாக்க ஆலிம்கள், சமூகப் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், ஊர் தலைமைகள், கல்விமான்கள், துறைசார்ந்தவர்கள், சிவில் அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

வஸ்ஸலாம்.

 

 

1. அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)
கௌரவ தலைவர்

 

2. அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத்
கௌரவ பிரதித் தலைவர்

 

3. அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
கௌரவ பொதுச் செயலாளர்

 

4. அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல்
கௌரவ பொருளாளர்

 

5. அஷ்-ஷைக் எச். உமர்தீன்
கௌரவ உப தலைவர்

 

6. அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா
கௌரவ உப தலைவர்

 

7. அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்
கௌரவ உப தலைவர்

 

8. அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி
கௌரவ உப தலைவர்

 

9. அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம்பாவா
கௌரவ உப தலைவர்

 

10. அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்
கௌரவ உதவிச் செயலாளர்

 

11. அஷ்-ஷைக் எம்.எம். முர்ஷித்
கௌரவ உதவிச் செயலாளர்

 

12. கலாநிதி அஷ்-ஷைக் அஹ்மத் அஸ்வர்
கௌரவ உதவிப் பொருளாளர்

 

13. அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர், செயலாளர் – பத்வாக் குழு

14. அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாழில்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

15. அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

16. அஷ்-ஷைக் எம்.எம் ஹஸன் பரீத்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

17. அஷ்-ஷைக் முப்தி எம்.எச்.எம். யூசுப்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்

 

18. அஷ்-ஷைக் ஏ.ஸி.எம். பாழில்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்

 

19. அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

20. அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்

 

21. அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜஃபர்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

22. அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

23. அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்

 

24. அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்

 

25. அஷ்-ஷைக் கே.எம்.ஸகீ அஹ்மத்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்

 

26. அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். நுஃமான்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

27. கலாநிதி அஷ்-ஷைக் எம்.எல்.எம். முபாரக்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்

 

28. அஷ்-ஷைக் எம்.எப்.எம். பரூத்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

29. அஷ்-ஷைக் எம்.ஏ.ஏ.எம். பிஷ்ர்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழ உறுப்பினர்

 

30. அஷ்-ஷைக் எம்.ஐ.எம் சுஐப்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

31. அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் நாழிம்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

32. அஷ்-ஷைக் ஏ.எச். இஹ்ஸானுத்தீன்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

 

33. அஷ்ஷைக் எம்.டி.எம் ஸல்மான்
கௌரவ உதவிச் செயலாளர், பத்வாக் குழு

 

34. அஷ்-ஷைக் ஏ.எம். ஆஸாத் (ஆயு)
கௌரவ உதவிச் செயலாளர், பத்வாக் குழு

 

35. அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

36. அஷ்-ஷைக் முப்தி கே.எச்.எம்.ஏ. மபாஸ்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

37. அஷ்-ஷைக் முப்தி எம்.எப்.எம் ரியாழ்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

38. அஷ்-ஷைக் முப்தி ஏ.எம். நஜ்முத்தீன்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

39. அஷ்-ஷைக் ஏ.ஜி. ஹாமித் ஸதகா
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

40. அஷ்-ஷைக் எம்.இஸட்.எம் அமீனுத்தீன்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

41. அஷ்-ஷைக் எஸ்.எச்.எம். இஸ்மாஈல்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

42. கலாநிதி அஷ்-ஷைக் எம்.இஸட்.எம் முபீர்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

43. அஷ்-ஷைக் முப்தி ஏ.ஆர் அமானுல்லாஹ்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

44. அஷ்-ஷைக் எம்.ஏ.எம். ழபர்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

45. அஷ்-ஷைக் முப்தி என்.எம். இர்ஸான்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

46. அஷ்-ஷைக் ஏ.எம். ஹாரூன்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

47. அஷ்-ஷைக் முப்தி ஜாவித் இக்பால்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

48. அஷ்-ஷைக் எம்.என்.எம் இர்ஷாத்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

49. அஷ்-ஷைக் நாகூர் ளரீப்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

50. அஷ்-ஷைக் எம்.என். அப்ராஸ்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

51. அஷ்-ஷைக் எம்.எப்.எம். ரம்ஸி
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

52. அஷ்-ஷைக் எம்.ஐ. ஹஜ்ஜி முஹம்மத்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

53. அஷ்-ஷைக் எம்.ஐ. கலீல் ரஹீம்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

54. அஷ்-ஷைக் முப்தி எம்.எம். ழியாஉத்தீன்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

55. அஷ்-ஷைக் முப்தி எம்.ஏ.எம் அன்பாஸ்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

56. அஷ்-ஷைக் எம். ஸவ்மி கரீம்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

57. அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம் (ஆயு)
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

58. அஷ்-ஷைக் ஏ.ஜே.எம். மக்தூம்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

59. அஷ்-ஷைக் எம்.எம்.ஏ இம்தியாஸ்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

60. அஷ்-ஷைக் எஸ்.எஸ்.எம். ரூமி
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

61. அஷ்-ஷைக் எம்.எச்.எம். ஹுதைபா
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

62. அஷ்-ஷைக் ஏ.ஆர். றமீன்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *