ரபீஉனில் அவ்வல் மாதம்

2023.09.17 (1445.03.01)

ரபீஉனில் அவ்வல் மாதம் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் மூன்றாவது மாதமாகும். இது ஸபர் மாதத்தை அடுத்து வரக்கூடியதாகும். ‘ரபீஉனில் அவ்வல்’ என்ற வார்த்தையின் அர்த்தம் ‘முதல் வசந்தம்’ என்பதாகும்.

இது இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான மாதமாகும். ஏனெனில் இம்மாதத்திலேயே அகிலத்தாரின் அருட்கொடையாகிய எம் உயிரிலும் மேலான இறுதித்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள்.

இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹு தஆலா உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பினான். ‘(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கெல்லாம் ரஹ்மத்தாகவே (ஓர் அருட்கொடையாகவே) அன்றி அனுப்பவில்லை.’ (ஸுறா அல் அன்பியா: 107)

‘இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவுமே அன்றி அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் (இதை) அறியமாட்டார்கள்.’ (ஸுறா ஸபா: 28)

ரபீஉனில் அவ்வல் மாதத்தின் முக்கியமான நிகழ்வுகள்

1. இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு.
(நூல்: அல்-பிதாயஹ் வன்-நிஹாயஹ், பாகம்: 02)

2. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து இடம்பெயர்ந்து (ஹிஜ்ரத் செய்து) மதீனாவுக்கு சென்றமை. (நூல்: அல்-பிதாயஹ் வன்-நிஹாயஹ், பாகம்: 03)

3. இஸ்லாமிய வரலாற்றின் முதல் மஸ்ஜிதான மஸ்ஜிதுல் குபா கட்டப்பட்டமை. (ஹிஜ்ரி 1 ஆம் ஆண்டில்), (நூல்: அல்-பிதாயஹ் வன்-நிஹாயஹ், பாகம்: 03)

4. ஹழ்ரத் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் உம்மு குல்தூம் ரழியல்லாஹு அன்ஹா அவர்களை ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டில் திருமணம் முடித்தமை. (நூல்: தாரீகுத் தப்ரி, பாகம்: 02)

5. இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வபாத். (ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டில்), (நூல்: அல்-பிதாயஹ் வன்-நிஹாயஹ், பாகம்: 05)

6. ஹழ்ரத் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டில் இஸ்லாமிய வரலாற்றின் முதல் கலீபாவாக நியமிக்கப்பட்டமை. (நூல்: அல்-பிதாயஹ் வன்-நிஹாயஹ், பாகம்: 06)

 

 

அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்
செயலாளர் – பிறைக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *