ACJU பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவினால் நடாத்தப்பட்ட பிராந்தியக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு

2024.07.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவினால் ஜம்இய்யாவின் அனைத்து கிளைகளின் பதவி தாங்குனர்களுக்குமான கட்டாய தெளிவூட்டல் செயலமர்வொன்று தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில், பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களது நெறிப்படுத்தலில் கொழும்பு, மீரானிய்யா ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

ஜம்இய்யாவின் நோக்கு மற்றும் குறிக்கோள்களை பரந்தளவில் வீரியப்படுத்துதல், அதற்கான வேலைத்திட்டங்கள், முன்னெடுப்புக்களுக்கு பிரதேச மட்டங்களிலுள்ள ஜம்இய்யா – கிளைகளின் பதவி தாங்குனர்களை தயார்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் இச்செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் ஆரம்பமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாக் குழுவினது உதவி ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் அப்துல்லாஹ் ருஸ்னி அவர்களால் கிராஅத் ஓதப்பட்டது.

கிராஅத்தினை தொடர்ந்து செயலமர்வில் கலந்துகொண்டிருந்தவர்களை வரவேற்கும் முகமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார்கள். அவரது உரையில் நிகழ்வின் நோக்கம் பற்றிய தெளிவுகள் வழங்கப்பட்டதோடு, சமூகத்திற்கு ஆற்றவேண்டிய சேவைகளுக்காக ஆலிம்கள் தம்மை சகல விதங்களிலும் தயார்படுத்திக் கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், நூற்றாண்டைக் கடந்து பயணிக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மார்க்க மற்றும் சமூகப்பணிகளுக்காக பாடுபட்ட அத்தனை ஆலிம்களுக்கும் இதன்போது சூரா பாஃதிஹா ஓதப்பட்டு பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

செயலாளரது உரையினை அடுத்து, ஜம்இய்யாவின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக்குழு பற்றிய அறிமுகம் மற்றும் தெளிவூட்டல் உரையினை அதன் தலைமை அதிகாரி அஷ்-ஷைக் அர்ஷத் அதாஉர் ரஹ்மான் அவர்கள் வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து ‘நாம் செய்யவேண்டியது என்ன’ எனும் தலைப்பில் பயிற்சி மற்றும் மேற்பாட்டுக் குழுவின் திட்ட ஆலோசகர் சகோதரர் நபீஸ் எம். நிஸாம் அவர்கள் விளக்கவுரை ஒன்றை நிகழ்த்தினார்கள்.

அவரது உரையினை அடுத்து, செயலமர்வில் கலந்து கொண்டிருந்த ஜம்இய்யாவின் பிராந்தியக் கிளைகளில் பதவி வகிக்கும் ஆலிம்களுடனான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. அவ்வுரையில் சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஜம்இய்யா ஆற்றிவரும் பங்களிப்புகள் குறித்து சுட்டிக் காட்டப்பட்டதோடு உலகம், நாடு, ஆலிம்கள், முஸ்லிம்கள் மற்றும் நாட்டின் ஏனைய பிரஜைகள் பற்றியும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வின் இறுதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

இதில் ஜம்இய்யாவின் தலைவர், செயலாளர் ஆகியோருடன் பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், உப செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம், ஆய்வு மற்றும் வெளியீட்டுக்குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.டி.எம். ளரீஃப், ஊடகக்குழுவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், பயிற்சி மற்றும் மேம்பாட்டுக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தலைமையக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *