2020.03.29
கூட்டாக மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது
கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் கூட்டங்களுக்கு தடைவிதித்திருக்கும் நிலையில் நாட்டின் சில பாகங்களில் ஜும்ஆ மற்றும் ஜமாஅத் தொழுகை நடைபெற்றதனை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது.
கொவிட் 19 வைரஸின் பயங்கர நிலை உருவானது முதல் இலங்கை வக்ப் சபை, முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியோர் இணைந்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு தொடரான வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர். மார்க்;க கடமைகளை மஸ்ஜித்களில் நிறைவேற்ற வேண்டாமென்றும் ஜும்ஆ மற்றும் ஜமாஅத்துத் தொழுகைகளுக்குக்; கூட ஒன்றுசேரக் கூடாதெனவும் கண்டிப்பான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
மேற்குறித்த மூன்று நிறுவனங்களினாலும் பலமுறை வலியுறுத்தி வேண்டிக்கொண்டதையும், இந்த பயங்கர நோயைக் கட்டுப்படுத்த அதிகாரிகளினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களையும் உதாசீனம் செய்து விட்டு ஒரு சிலர் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டது மிகப்பெரும் துரதிஷ்டமாகும்.
நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப் படியாமலிருப்பது இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானது என்பதையும் அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை எத்தகைய சூழ்நிலையிலும் சகித்துக்கொள்ள முடியாது என்பதையும் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். சம்பந்தப்பட்ட மஸ்ஜிதின் நிர்வாக சபையை உடனடியாக இடை நிறுத்த வக்ப் சபை எடுத்த தீர்மானத்தை நாம் பாராட்டுகின்றோம்.
சட்டத்தை மீறுவோருக்கெதிராக இனமத பேதமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உரிய அதிகாரிகளை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் ஒருசில பொறுப்பற்றவர்களால் நடாத்தப்பட்ட சம்பவங்களை மதத்துடனோ அல்லது ஒரு சமூகத்துடனோ சம்மந்தப்படுத்தக் கூடாது, ஏனெனில் இவை நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்படாத, உதாசீனப்போக்குள்ள ஒரு சிலரின் நடவடிக்கையென்பது தெளிவாகும்.
ஊடகங்கள், இத்தகைய சம்பவங்களை சமூகங்களுக்கிடையிலான தவறான புரிதல்களைத் தவிர்த்து, இன ஒற்றுமையை உறுதி செய்யும் வண்ணம் பொறுப்புடனும் தார்மீகத்துடனும் கையாளும்போது சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும். இல்லையெனில் சமூகங்களுக்கிடையிலான அமைதிக் கட்டமைப்பை இது சீர்குலைத்து விடும்.
அத்துடன் சமூகங்களுக்கிடையில் வதந்திகளைப் பரப்புவோர் மீதும் வெறுப்பை வளர்ப்போர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம்.
குறித்த பயங்கர நோயிலிருந்து முழு உலகமும் சாத்தியமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதேவேளை, கொரொனோ வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தி, இந்த பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இலங்கையரசு மேற்கொண்ட பொருத்தமான முன்னெச்சரிக்கைத் திட்டங்களை நாம் பாராட்டுகின்றோம்.
மேலும் நாட்டின் சட்ட ஒழுங்குக்கு முஸ்லிம் சமூகம் நேர்மையாக ஒத்துழைக்க வேண்டுமெனவும் இந்த சவாலான காலத்தை வெற்றிகரமாக சமாளிக்க அனைத்து வழிகளிலும் ஆதரவை வழங்கவேண்டுமெனவும் அனைவரையும் வேண்டிக்கொள்கின்றோம்.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா