சீட்டுப் பிடித்தவர்களது பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகை அறவிடுதல்

FATWA # 014/ACJU/FTW/2012/0163

Question

சீட்டுப் பிடித்தவர்களது பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அறவிட்டு ஒரு பகுதியை அப்பணத்தை வசூலிப்பவருக்கு கொடுத்துவிட்டு மீதியை பள்ளியின் நலன்களுக்காக செலவிடுவது சம்பந்தமாக ஃபத்வாக்கோரி தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

சீட்டுப்பிடித்தல் ஆகுமானது. ஏனெனில் அது ஒருவருக்கொருவர் உதவி செய்யும் நோக்கத்துடன் செய்யப்படும் ஒரு கடன் முறைமையாகும்.

இது பற்றி இமாம் கல்யூபி ரஹிமஹுல்லாஹ் தனது “கன்ஸுர் ராகிபீன்” (كنزالراغبين) உடைய ஹாஷியாவின் “அல்-இக்ராழ்” உடைய பாடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

قال القليوبي رحمه الله في حاشيته على كنز الراغبين للإمام جلال الدين المحلي  فى باب الاقراض: الجمعة المشهورة بين النساء بأن تأخذ امرأة من واحدة من جماعة منهن قدراً معيناً في كل جمعة أو شهر ، وتدفعه لواحدة بعد واحدة إلى آخرهن جائزة ، كما قاله الولي العراقي

“ஒரு குழுவில் உள்ள ஒரு பெண் மற்ற ஒவ்வொரு பெண்ணிடமிருந்தும் மாதாந்தம் அல்லது வாராந்தம் குறிப்பிட்ட தொகையை அறவிட்டு, அக்குழுவிலுள்ள ஒவ்வொருவருக்கும் (தவணைமுறையில்) வழங்கும் பெண்கள் மத்தியில் பிரபல்யமான ஜுமுஆ எனும் சீட்டு முறைமை அனுமதிக்கப்பட்டதாகும்.”

சீட்டை நடாத்தும் மஸ்ஜித் நிர்வாகம் சீட்டுப் பிடிப்பவர்களது அனுமதியுடன் அவர்களது பணத்தில் ஒரு தொகையை அறவிட்டு அதில் ஒரு பகுதியை வசூலிப்பவருக்கு கொடுத்துவிட்டு மீதியை மஸ்ஜிதின் தேவைகளுக்காக பயன்படுத்துவது ஆகுமானது. ஏனெனில், சீட்டை நடாத்துபவர்களுக்கு சீட்டுப்பணத்தை வசூலிப்பது போன்ற சிரமங்கள் இருப்பதனாலும், நிர்வாகம் சீட்டுப் பிடிப்பதில் பங்குகொள்ளவில்லை என்பதனாலும், அதன் கூலியாக மேற்குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இதைப் பள்ளியின் வெளிப்புறத்தில் நடாத்திக் கொள்வது நல்லது. இத்தீர்ப்பு உங்களது சீட்டு முறைமையை ஆராய்ந்து உங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டதாகும். தற்காலத்தில் பல சீட்டு முறைமைகள் இருப்பதனால் ஒவ்வொன்றையும் மார்க்க அறிஞர்களிடம் கேட்டுக்கொள்ளல் வேண்டும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு