Researched Fatwa
பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட கடையுடன் மற்றும் ஒரு கடையை இணைத்தல்
Question
Fatwa
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
வக்ஃப் என்பது நிலைத்திருந்து பயனளிக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு தர்ம காரியமாகும். வக்ஃப் செய்யப்பட்ட ஒரு பொருளை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ, கைமாற்றவோ கூடாது என்பதுடன் ஏதோ ஒருகாலத்தில் வக்ஃப் சொத்துக்களின் உரிமை பறிபோகும் நிலைமைகளை உருவாக்காமல் இருப்பதும் நிர்வாகிகளது பொறுப்பாகும்.
உங்களது கடிதத்தின் மூலம் பின்வரும் விடயங்கள் எமக்கு விளங்கக்கிடைக்கின்றன.
“வக்ப் செய்யப்பட்ட சம்மான்கோடுப் பள்ளிவாசலுக்குரிய கடையை குறிப்பிட்ட ஒரு நபருக்கு கூலிக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்நபர் அக்கடைக்கு அருகாமையில் இன்னுமொரு கடையை வாங்கியிருக்கின்றார். அவ்விரண்டு கடைகளுக்கும் உட்புறமாக வாயிலொன்றை அமைத்து அவ்விரு கடைகளையும் இணைப்பதற்கு குறிப்பிட்ட நபர் அனுமதி கோரியுள்ளார்.”
வக்ப் செய்யப்பட்ட கடையையும் அதற்கு அருகாமையில் உள்ள வக்ப் செய்யப்படாத கடையையும் இணைப்பதன் மூலம் பிற்காலத்தில் வக்ப் சொத்தாகிய கடை பறிபோகும் நிலை ஏற்படுமாயின் அவ்வாறு இணைப்பதற்கு அனுமதி வழங்குவது கூடாது. அவ்வாறு பறிபோகும் நிலை ஏற்படாது என்ற உறுதியுடன் குறிப்பிட்ட நபர் நம்பிக்கையும் நன்னடத்தையும் உள்ளவராகவும் அவரது வாரிசுகளும் வக்ப் சொத்தைப் பேணி நடப்பவர்களாகவும் இருந்தால் அனுமதி வழங்குமாறும், நம்பிக்கையான அனுபவமுள்ள வழக்கறிஞர் ஒருவரிடம் அறிவுரை பெற்று அவர் மூலம் சகலதையும் விரிவாகவும் தெளிவாகவும் எழுதி சாட்சிகள் முன்னிலையில் கையொப்பமிட்டுப் பாதுகாத்துக்கொள்ளுமாறும் ஆலோசனை கூறுகின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

