தலைவர், செயலாளர்

மாவட்ட, பிரதேசக் கிளை

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா வழங்கும் முறை பற்றிய விளக்கம்

1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பதினைந்து உப பிரிவுகள் ஊடாக முஸ்லிம் சமூகத்திற்கு பல பணிகளை ஆற்றி வருகின்றது. இவற்றில் பத்வா வழங்கும் பணி மிகவும் மகத்தான ஒன்றாகும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவில் பத்வா வழங்குவதற்கென்று ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் நாடளாவிய ரீதியில் துறை சார்ந்த ஆலிம்கள் அங்கம் வகிக்கின்றனர். ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த ஆலிம்கள்; பலர் இதில்; இருப்பதுடன், ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் உட்பட தஃவா அமைப்புகளைச் சேர்ந்த ஆலிம்களுமாக மொத்தம் நாற்பத்து மூன்று பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பத்வாக் குழு மூன்றாண்டுக்கு ஒரு முறை நிறைவேற்றுக் குழுவால் தெரிவு செய்யப்படுகின்றது. மேலும், பத்வாவின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்காக பத்வாக் குழுவிலிருந்து 13 ஆலிம்கள் உள்ளடங்கிய அவசர பத்வாக் குழுவும் நிறைவேற்றுக் குழுவால் தெரிவு செய்யப்படுகின்றது. 

ஜம்இய்யா ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையிலேயே பத்வாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2003.09.24 ஆம் திகதி நடைபெற்ற பத்வாக் குழுக் கூட்டத்திலும், 2017.01.12 ஆம் தேதி நடைபெற்ற பத்வாக் குழுக் கூட்டத்திலும் ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலேயே பத்வா வழங்க வேண்டும் என்ற விடயம் எழுத்து மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதாரங்களை நோக்கும் விதம் வேறாக இருந்தாலும், நான்கு மத்ஹப்களும் ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே மார்க்க விடயங்களைச் சட்டமாக்கியுள்ளன. நான்கு மத்ஹப்களிலும் ஷாபிஈ மத்ஹப் ஒரு நடு நிலையான மத்ஹப் மட்டுமல்லாமல், சுன்னாவுக்கு மிகவும் நெருங்கிய ஒரு மத்ஹபாகும் என்பதைக் கற்றறிந்த யாவரும் அறிவர். ஷாபிஈ மத்ஹபில் ஏற்றுக்கொள்ளப்பட்ட (றாஜிஹான) கருத்தை பத்வாவில் கூறுவதுடன், தேவைப்படும் பட்சத்தில் ஏனைய மத்ஹப்களின் கருத்துக்களும் பத்வாவில் குறிப்பிடப்படுகின்றன. இவை அனைத்தும் பத்வாக் குழுவின் ஒப்புதலுடனேயே வெளியிடப்படும்.

இரத்த தானம், IVF  முறையில் கருத்தரித்தல் போன்ற தற்காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன மார்க்க பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, தற்கால பத்வா வழங்கும் அமைப்புக்களின் கருத்துக்களும் பெற்றுக் கொள்ளப்பட்டு, பத்வாக் குழுக் கூட்டத்தில் நன்கு கலந்துரையாடப்பட்டு சமுகமளித்தவர்களின் பூரண ஒப்புதலுடன் பத்வா வழங்கப்படுகின்றது.

மேலும், பத்வாக் குழுக் கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும், அவசர பத்வாக் குழுக் கூட்டம், குறைந்த பட்சம் மாதத்திற்கு இரண்டு முறைகளும் நடைபெறுகின்றது. அவசர பத்வாக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் பத்வாக்களின் மாதிரி வடிவம் எழுதப்பட்டு, அது பத்வாக் குழு உறுப்பினர்களுக்கு மாத்திரம் உள்ள வட்ஸ்அப் குழுவில் அனுப்பப்படும். உறுப்பினர்கள்    கருத்துக் கூறுவதற்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு, உறுப்பினர்களிடமிருந்து கருத்துக்கள் ஏதும் வராதவிடத்து அனைவரதும் அங்கீகாரமாகக் கருதப்பட்டு பத்வா வெளியிடப்படும்.

இவ்வடிப்படையில் இதுவரை 345 பத்வாக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வருடம் 300 பத்வாக்களை நூல் வடிவில் வெளியிடும் நோக்கில், அதன் தொகுப்பைத் தற்போதைய பத்வாக் குழுவின் கருத்துக்களைக் கண்டறியும் முகமாக பத்வாக் குழுவின் பல உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டது. இதுவரை எவ்வித கருத்துக்களும் உறுப்பினர்களிடமிருந்து எழுத்து மூலம் முன்வைக்கப்படவில்லை என்றிருந்தாலும், எதிர்காலத்தில் முன்வைக்கப்படுமிடத்து அவை ஆலேசனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மேலும், MMDA திருத்தம் விடயத்தில், ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றுபவர்கள் தமது விவாக மற்றும் விவாகரத்து விடயங்களை ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில் செய்துகொள்வதற்கு ஏதுவாகவே திருத்தங்கள் உள்வாங்கப்படவேண்டும்; எனும் விடயத்தில் மிகவும் உறுதியாக உள்ளது. இதனால், ஜம்இய்யா பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

பத்வாக் குழுவின் செயற்பாடுகள் அனைத்தும் குழு உறுப்பினர்களுக்கு மத்தியில் வெளிப்படையாகவே நடைபெறுகின்றன. இதுபற்றிய தெளிவுகள் ஏதும் தேவைப்படின் அல்லது கருத்துக்கள் ஏதும் கூற இருப்பின் தலைமையகத்தையோ அல்லது பத்வாக் குழுவின் செயலாளர் M.L.M இல்யாஸ் ஆகிய என்னையோ தொடர்பு கொள்ளலாம்.

 

வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்

செயலாளர், பத்வாக் குழு                

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா