ஃபஸ்க் மூலம் பிரிந்த கணவன், மனைவி மீண்டும் கணவன் மனைவியாக ஒன்று சேர்ந்து வாழ்வது தொடர்பாக

FATWA # 011/ACJU/F/2008

Question

ஃபஸ்க் முறையில் பிரிந்து வாழும் இருவர் மீண்டும் கணவன் மனைவியாக ஒன்று சேர்ந்து வாழ்வது பற்றிய மார்க்கத் தீர்ப்பு என்ன?

Fatwa

011/ACJU/F/2008
1429.02.12 | 2008.02.19

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

கணவன் மனைவியரிடையே பிணக்குகள் ஏற்படுவது இயற்கையாகும். எனினும் அதனைச் சமாதானமான முறையில் தீர்த்து வைப்பது ஒரு இறை வணக்கமாகும். பிணக்குகள் தீர்க்கப்படாத நிலையை அடைந்து அல்லது கணவனிடமுள்ள ஏதாவது ஒரு பன்பை மனைவி வெறுத்து அல்லது மனைவிக்குரிய வாழ்க்கைச் செலவை கணவன் கொடுக்கமுடியாத நிலையை அடைந்து, அக் கணவனுடன் தொடர்ந்தும் வாழ முடியாத நிலையை மனைவி அடைந்தால், அவளுக்கு அத்திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கு (ஃபஸ்க் செய்து கொள்வதற்கு) அனுமதியுண்டு.

ஃபஸ்க் எனப்படும் மேற்படி முறையில் பிரிந்து கொண்ட பெண் தனது முன்னாள் கணவனுடன் மீண்டும் வாழ இஸ்லாமிய ஷரீஆவில் அனுமதி உண்டு. அப்பெண்ணுக்கும், அவளது முன்னாள் கணவனுக்குமிடையே அவர்களது திருமண ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது கடமையாகும்.

‘கணவன், மனைவி ஆகிய இருவரில் ஒருவர் அடுத்தவரிடம் ஏதாவது ஒரு குறையைக் கண்டு அதன் காரணமாக திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் (ஃபஸ்க் செய்து கொண்டால்) அல்லது கணவன் மனைவிக்குரிய மஹ்ர், வாழ்க்கைச் செலவை கொடுக்க இயலாத காரணத்தால் மனைவி திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் (ஃபஸ்க் செய்து கொண்டால்), அதே திருமணத்தின் மூலம் அந்த மனைவியை மீட்க கணவனுக்கு உரிமையில்லை. இத்தடை புதிய திருமண ஒப்பந்தம் செய்வதன் மூலமாகவே நீங்கும். ஆனால் வேறு திருமணம் செய்து உடலுறவு கொண்ட பின் புதிய திருமண ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பது நிபந்தனையில்லை’.
(அல்-மஜ்மூஃ – பாகம்: 18, பக்கம்: 300)

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அஷ்-ஷைக் டப்ளியு. தீனுல் ஹஸன் 
செயலாளர், ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர்,
 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா