எங்கள் அமைப்பு

உப குழுக்கள்

(உப பிரிவுகள்)

ஆலிம்கள் விவகாரங்கள்

ஆலிம்கள் விவகாரக் குழு சமூக சேவைகள் குழு

பிரஜைகள் விவகாரங்கள்

ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு

முஸ்லிம் சமூக விவகாரங்கள்

1. பத்வாக் குழு
 2. பிறைக் குழு
 3. கல்வி, ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு
 4. தஃவா மற்றும் தர்பிய்யாவுக்கான குழு
 5. மகளிர் விவகாரக் குழு

ஆலிம்கள் விவகாரக் குழு

இக்குழு சமூகத்திற்குச் சேவையாற்றி வரும் மார்க்க அறிஞர்களின் நலன்கள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்துகின்றது. ஆலிம்களுக்கு பின்வரும் சேவைகளை வழங்குவதை இக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது

சமூக சேவைகள் குழு

ஜம்இய்யாவின் சமூக சேவைக் குழு நிவாரண உதவிகள், சமூக சேவைகள் மற்றும் உளவள ஆலோசனை வழங்குதல் ஆகிய பகுதிகளில் கவனம் செலுத்துகின்றது. இக்குழு அனர்த்த முகாமைத்துவம், புனர்வாழ்வு போன்ற விடயங்களில் ஆலிம்களுக்கான பயிற்சிகளை ஜம்இய்யாவின் கிளைகள் ஊடாக வழங்க ஏற்பாடு செய்து வருகின்றது. முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி மாற்று மதச் சகோதரர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் தன்னாலான உதவிகளை இக்குழு செய்து வருகின்றது.


சமூக சேவையில் குறித்த ஒரு விடயத்திற்காக சேகரிக்கப்பட்ட பணத்தில், அத்தேவை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் மீதமாகும் தொகை வேறொரு சமூக சேவைக்காகக் செலவிடப்படும் என்ற கொள்கையை இக்குழு நடைமுறைபடுத்தி வருகின்றது.

பத்வாக் குழு

அன்றாடம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மார்க்க வழிக்காட்டல்களை வழங்கும் அங்கீகாரம் பெற்ற ஒரே நிறுவனமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இயங்கி வருகின்றது. வேறுபட்ட சிந்தனைகளைக் கொண்ட உலமாக்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தி மார்க்க வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் இப்பிரிவு செயற்பட்டு வருகின்றது. மக்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய விடயங்களில் மார்க்க சட்டங்களை எளிமையாக்கி முன்வைப்பதும் அமைதி மற்றும் நல்லிணக்க வாழ்க்கை முறையை உருவாக்குவதும் ஃபத்வாவின் நோக்கமாகும். ஃபத்வா பிரிவினால் வெளியிடப்பட்ட ஃபத்வாக்களில் அதிகமானவை சமூக, பொருளாதார, தனிப்பட்ட, குடும்ப வாழ்க்கை மற்றும் அனந்தரச் சொத்துக்களுடன் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


நாளாந்தம் உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும், எழுத்து மூலமும் ஃபத்வாக்கள் கேட்கப்படுகின்றன. மேலும், ஜம்இய்யாவின் காரியாலயத்துக்கு நேரடியாகவும் ஃபத்வாக்களை கேட்டு வருகின்றனர். இவ்வனைத்து கேள்விகளுக்கும் திறமையான மார்க்க அறிஞர்களினால் பதிலளிக்கப்படுகின்றது. 

பொதுவான கருத்து வேறுபாடற்ற விடயங்களுக்கு உடனடியாக பதில் அளிக்கப்படுவதுடன் கலந்துரையாடப்பட வேண்டிய ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் மாதாந்தம் நடைபெறும் ஃபத்வாக் குழு அமர்வின் போது முன்வைக்கப்படுகின்றன.

பிறைக் குழு

  • இஸ்லாமிய வழிகாட்டலுக்கமைய முக்கிய நிகழ்வுகளையும் நேரங்களையும் நிர்ணயிப்பதற்கு ஹிஜ்ரி கலண்டர் இன்றியமையாததாகும். ஹிஜ்ரி மாதங்களை நிர்ணயித்தல், தொழுகை நேரத்தை நிர்ணயித்தல் மற்றும் துல்லியமான கிப்லாவை அடையாளப்படுத்தல் ஆகிய பணிகளை இக்குழு மேற்கொண்டு வருகின்றது. சூரிய மற்றும் சந்திர கிரகணங்களைப் பற்றிய விழிப்புணர்வும் அச்சந்தர்ப்பத்திற்கான வழிகாட்டல்களும் இப்பிரிவுனூடாக வழங்கப்படுகின்றது.


    உலகளாவிய ரீதியில் காணப்படுகின்ற பிறை மாதங்களை தீர்மானிப்பதற்கான முறைமைகளுக்கேற்ப நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள உப குழுக்களின் ஒத்துழைப்புடன் ஹிஜ்ரி மாதங்கள் முடிவு செய்யப்படுகின்றன. தலைப் பிறை தீர்மானம் சம்பந்தமான சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு கூட்டாகச் சென்று பிறை பார்க்கும் முறையை இக்குழு ஊக்குவித்து வருவதுடன், ஒவ்வொரு ஊரிலும் காணப்படும் ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளின் பிரதிநிதிகள் மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டு கூட்டாக பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதோடு அதற்குத் தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றது.


    பிறை மாதங்களை தீர்மானிப்பதற்கான 05 அடிப்படைகளை மையமாகக் கொண்டு பிறை மாதம் தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை கொழும்பு பெரிய பள்ளிவாயல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியன இணைந்து மேற்கொள்கின்றன. பின்னர், இது பற்றி மக்களுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.


    டிஜிட்டல் ஹிஜ்ரி கலண்டர் மின்னஞ் மூலம் விநியோகிக்கப்பட்டு ஜம்இய்யாவின் உத்தியோகப்பூர்வ இணையதளத்திலும் பதிவேற்றப்படுகின்றது. மாதாந்த ஹிஜ்ரி நாட்காட்டியின் அச்சிடப்பட்ட பிரதிகள் வருடாந்த சந்தாதாரர்களுக்கு தபால் மூலமும் அனுப்பி வைக்கப்படுகின்றது.


    நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி முடிவு செய்யப்படும் கிப்லா திசை பல சந்தர்ப்பங்களில் தவறாக அமைவதால் அதனை முடிவு செய்வதற்கு சூரியனைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் இக்குழு கவனம் செலுத்தி வருகின்றது. இது தொடர்பில் பயிற்சிநெறிகள் ஜம்இய்யாவின் கிளைகள் ஊடாக தேவைக்கேற்ப நடாத்தப்பட்டு வருகின்றன.

கல்வி, ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு

  • கல்வி: பெறுபேறுகள் மற்றும் ஒழுக்க நெறியில் முன்னேற்றம் தேவைப்படும் பாடசாலைகளை அடையாளங் கண்டு, விஞ்ஞான ரீதியாக ஆய்வுகளை இக்குழு மேற்கொள்கின்றது. பின்னர், பின்தங்கிய மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆன்மீக மற்றும் கல்வி ரீதியான ஊக்கமளிக்கும் நிகழ்ச்சிகளையும் பயிற்சிகளையும் வழங்குகிறது. மேலும், அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் கற்றல் மற்றும் கற்பித்தல் சூழலை உருவாக்க இப்பிரிவு உதவுகிறது. குறிப்பாக இக்குழு கொழும்பிலுள்ள பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு அதன் திட்டங்களை வகுத்துள்ளது.

    அல்குர்ஆன் மத்ரஸா: அல்குர்ஆன் மத்ரஸா கல்வி முறையை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தைக் கண்டறிந்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அல்குர்ஆன் மத்ரஸாவுக்கான கட்டமைப்பு மற்றும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு செயற்திட்டத்தை தொடங்கியது. புனித அல்குர்ஆனை ஓதுவதற்கும், சரியான முறையில் அதனை விளங்குவதற்கும் இங்கு கற்பிக்கப்படுவதோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்கள், ‘ஆதாப்’ (நல்லொழுக்கம், நன்னடத்தை), ‘அஃலாக்’ (பண்பாடு, உயர்ந்த சமூக நடத்தை), சகவாழ்வு, இஸ்லாமிய வரலாறு மற்றும் அரபு மொழி ஆகியவை இப்பாடநெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

    இந்தப் பாடத்திட்டமானது அனைத்து வகையான தீவிரவாத, பயங்கரவாத சிந்தனைகளிலிருந்தும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்டதாகும். இஸ்லாத்தை கற்பிப்பதற்கான பாடத்திட்ட வரைபை உருவாக்கிய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்கள் மற்றும் அதன் அதிகாரிகளின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளின்படி இப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    புனித அல்குர்ஆன், சுன்னா மற்றும் இஸ்லாமிய போதனைகளை கற்றுக்கொள்வதில் மாணவர்களிடையே ஆர்வத்தை வளர்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட இந்த செயற்திட்டம் அல்குர்ஆன் மத்ரஸாக்களின் மேம்பாட்டிற்காக ஜம்இய்யா மேற்கொண்ட பாரியதொரு திட்டமாக காணப்படுகின்றது.

    ஆய்வு மற்றும் வெளியீடுகள்: இஸ்;லாமிய தலைப்புக்களில் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்கள் ஆகியவற்றை வெளியிடுவதோடு, முக்கியமான புத்தங்களை அவற்றின் மூல மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பதும் இந்த குழுவின் பணியாகும். செய்திமடல்கள், பத்திரிகைகள் மற்றும் பிற இதழ்கள் உள்ளிட்ட இஸ்லாமிய வெளியீடுகளை ஆய்வு செய்து, அகீதாவுடன் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் அதற்குரிய வழிகாட்டல்கள் உரியவர்களுக்கு இக்குழு மூலம் வழங்கப்படுகின்றது.

தஃவா மற்றும் தர்பிய்யாக் குழு


    • பிரச்சாரம்: இக்குழு மார்க்கத்தின் பெயரால் ஊடுறுவும் பிழையான கொள்கைகள் மற்றும் அமைப்புக்கள் விடயத்தில் மக்களுக்கு வழிகாட்டுவதில் கவனம் செலுத்துகின்றது.

      மஸ்ஜித் நிர்வாகங்களின் வேண்டுகோளுக்கிணங்க இமாம் மற்றும் முஅத்தின்களுக்கான பயிற்சிநெறிகளை நடாத்துதல், பிற சமூகங்களுடன் எவ்வாறு சகவாழ்வை மேற்கொள்ளுதல் ஆகிய வழிகாட்டல்களை இக்குழு வழங்குகின்றது.

      ஹஜ், ரமழான், குடும்ப வாழ்க்கை, ஒற்றுமை மற்றும் சகவாழ்வை மேம்படுத்துதல் போன்ற தலைப்புக்களில் பொது மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இக்குழு ஜம்இய்யாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகள் மூலமாக நடாத்துகிறது. பெரும் பாவங்களிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டுதல்களும் இப்பிரிவுனூடாக மேற்கொள்ளப்படுகின்றது.

      தவறான இயக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்து நடத்துவதோடு, இது தொடர்பில் பொதுமக்களை வழிநடாத்த தேவைக்கேற்ப உலமாக்களுக்கு ஆலோசனை வழங்குகின்றது.


      இளைஞர் விவகாரம்: இக்குழு சிறந்ததொரு இளைஞர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கின்றது.

      நவீன சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட, நாட்டுப் பற்று மற்றும் ஆன்மீக ரீதியில் மேம்பட்ட இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக நாடு முழுவதும் உள்ள ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகள் மூலம் பல திட்டங்கள் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், இக்குழு போதைப் பழக்கமுள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ஆலோசனைகளை வழங்குகின்றது.

      இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கக்கூடிய அனைத்து வகையான தீமைகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு சமூகப் பொறுப்பாகும். இப்பிரிவு இளைஞர்களுக்கு ஆன்மீக ரீதியாக வழிகாட்டுவதோடு சமூகத்தின் எதிர்காலத் தலைவர்களாக அவர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

      இளைஞரின் அடிப்படைத் திறன்களைக் கண்டறிந்து அவர்களை வலுவூட்ட வேண்டிய அவசியம் காணப்படுவதால், உயர்கல்வியை தேர்வு செய்வதற்கும், தேவையான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கும், அவர்களின் திறன்களை அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு மேம்படுத்துவதற்கான உத்திகளை உருவாக்குவதற்கும் சாத்தியமான வழிமுறைகளை இப்பிரிவு ஆராய்கின்றது.

ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான கவுன்சில்

இக்குழு மனிதாபிமான விழுமியங்களில் கவனம் செலுத்துகிறது. இந்நாட்டில் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடித்து வரும் ஒற்றுமை மற்றும் சகவாழ்வை வளர்ப்பதற்கு இக்குழு பாடுபடுகின்றது. இஸ்லாமிய கொள்கைக்குட்பட்ட தஃவா அமைப்புக்கள், தரீக்காக்கள் போன்றவற்றிற்கிடையில் ஒருங்கிணைத்து சமூக ஒற்றுமையையும் இணக்கப்பாடையும் கட்டியெழுப்ப இக்குழு முயற்சிக்கின்றது. மேலும், முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கிடையிலும் பரஸ்பர புரிந்துணர்வையும் சகவாழ்வையும் ஏற்படுத்த பல திட்டங்களை வகுத்து செயற்படுத்துகின்றது. இக்குழு இந்நாட்டில் வாழும் பல்லின சமூகங்களுக்கு மத்தியில் கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதன் மூலம் சமூகங்களுக்கு மத்தியில் நல்லுறவை கட்டியயெழுப்ப முன்னின்று செயற்படுவதோடு முஸ்லிம்களுக்கு நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வின் முக்கியத்துவம் பற்றிய வழிகாட்டல்களை ஜுமுஆ உரைகள் போன்றவற்றின் மூலம் வழங்குகின்றது.