தலாக் சொல்லப்பட்ட மனைவியின் சொத்திலிருந்து கணவனுக்கு உரிமையாகுதல்

FATWA #0146/ACJU/F/2009

Question

தலாக் சொல்லப்பட்ட மனைவியின் சொத்திலிருந்து கணவனுக்கு உரிமையாகுதல் சம்பந்தமாக மார்க்கத் தீர்ப்புக் கோரி 2009.11.02 ஆந் தேதியிட்டு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மனைவி சம்பாதித்த சொத்துக்களை தான் மனமுவந்து கொடுக்காதவரை தலாக் சொல்லப்பட்ட தனது முன்னாள் கணவர் எவ்வகையிலும் அவற்றை உரிமையாக்க முடியாது. ஏனெனில், இஸ்லாம் ஒவ்வொருவரின் உடலையும் உடமையையும் மற்றவர் தகுந்த காரணமின்றி உரிமையாக்கிக் கொள்வதை ஹரமாக்கியுள்ளது. நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இது விடயமாக பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

 ‘ஒரு முஸ்லிமான மனிதனின் சொத்து மன விருப்பத்துடன் அன்றி (மற்றவருக்கு) ஹலாலாகாது’ (அறிவிப்பாளர்: அபூஹுர்ராஃ அல்-ருகாஷிய்யின் பெரிய தந்தை (ரழியல்லாஹு அன்ஹு)  நூல்: முஸ்னத் அஹ்மத்)

எனவே, மேற்குறிப்பிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று மனைவி தன் முயற்சியால் குறிப்பிட்ட வாகனத்தை கொள்முதல் செய்திருந்தால், அவ்வாகனத்தை எவ்வகையிலும் தலாக் சொல்லப்பட்ட தனது முன்னாள் கணவர், மனைவியின் விருப்பமின்றி உரிமை கொண்டாடவோ, தனதாக்கிக் கொள்ளவோ முடியாது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.