ACJU/FTW/2020/02-386
2019.02.24 (1441.06.29)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஸகாத் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இது செல்வந்தர்களின் குறிப்பிட்ட சில சொத்துக்களிலிருந்து குறிப்பிட்ட ஓர் அளவு விகிதம் ஸகாத் பெறத் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் ஓர் இபாதத்தாகும்.
தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம், சேமித்து வைத்து உணவாக உட்கொள்ளக் கூடிய தானியங்கள், திராட்சை மற்றும் ஈத்தம் பழம் ஆகியவற்றில் ஸகாத் கடமையாகும்.
ஸகாத் கொடுக்கும் பொழுது, எப்பொருட்களில் ஸகாத் கடமையாகின்றதோ, அப்பொருட்களையே ஸகாத்தாகக் கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்.1
இருப்பினும், வியாபாரப் பொருட்களில் ஸகாத் கொடுக்கும் போது, அப்பொருட்களின் பெறுமதியைப் பார்த்து நாணயங்களில் ஸகாத் கொடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக வேறு பொருட்களை ஸகாத்தாக வழங்க முடியாது. இதுவும் பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்.2
இதனைப் பின்வரும் கூற்று தெளிவுபடுத்துகின்றது.
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ஹமாஸ் என்பவருக்கு உங்களது வியாபாரப் பொருட்களை விலைமதித்து ஸகாத் கொடுக்க வேண்டிய அளவை பெறுமதியில் (வியாபாரம் செய்யும் நாணயத்தில்) கொடுங்கள் என்று கூறினார்கள்.3
என்றாலும், ஹனபி மத்ஹபைச் சார்ந்த மார்க்க அறிஞர்கள், எப்பொருளில் ஸகாத் நிறைவேற்றப்படுகின்றதோ அப்பொருளையும் ஸகாத்தாக நிறைவேற்றலாம். அல்லது அதற்குப் பகரமாக அவற்றின் பெறுமதியையும் நிறைவேற்றலாம் என்று கூறுகின்றனர்.4
இவ்வடிப்படையில் பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி வியாபாரப் பொருட்களில் பணமாகவே ஸகாத்தை கொடுக்க வேண்டும் என்பதால், ஸகாத்தாக வீடுகள் கட்டி ஸகாத் பெற தகுதியானவர்களுக்குக் கொடுக்க முடியாது.
ஸகாத் பணத்தில் வீடு கட்டிக் கொடுப்பதாக இருந்தால் பின்வரும் முறைகளைக் கையாளலாம்.
முதலாவது: ஸகாத் பெறத் தகுதியானவர்களுக்கு உரிய ஸகாத்தை வழங்கியதன் பின், அவர்களின் வேண்டுகோளின் பேரில் வீடுகளைக் கட்டிக் கொடுத்தல்.
இந்த முறையில் வீடு கட்டிக் கொடுக்கும் போது, ஸகாத் பெறத் தகுதியானவர்களுக்கு உரிய ஸகாத்தை வழங்கியதன் பின், அவர்களாகவே முன்வந்து தமக்குக் கிடைத்திருக்கும் ஸகாத்தின் மூலம் வீடு கட்டித் தரும்படி ஸகாத் வழங்கும் அமைப்பைப் பொறுப்பாக்கினால், அவர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்கலாம்.
ஸகாத்தைப் பெறுபவர் தான் விரும்பியபடி அந்த ஸகாத்தைப் பயன்படுத்த பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். ஸகாத் வழங்கும் போது வீடுதான் கட்ட வேண்டும் என்று நிபந்தனையிட்டு வழங்கப்பட்டால் அந்த ஸகாத் நிறைவேறாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இம்முறையில் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் போது வீட்டு உரிமைப் பத்திரங்களை உரியவர்களின் பெயருக்கு மாற்றிக் கொடுப்பதற்கு காலம் தாமதிக்க முடியாது. மாறாக உடனடியாக அவர்களது பெயருக்கு மாற்றிக் கொடுப்பது அவசியமாகும்.
இரண்டாவது: வீடு கட்டிக் கொடுப்பது போன்ற முஸ்லிம்களுக்கு பயனளிக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தனவந்தர்களிடம் கடன் பெற்று, அத்தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தல்.
அதாவது பிறருடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனவந்தர்களிடமிருந்து பணத்தை கடனாகப் பெற்று, அத்தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க முடியும். கடன் பெற்றவர் அக்கடனை தம்மால் நிறைவேற்ற முடியாத பொழுது ஸகாத் பெறுவதற்குத் தகுதியான எட்டுக் கூட்டத்தினரில் கடனாளியின் பங்கின் மூலம் அக்கடனை நிறைவேற்ற முடியும் என்றும் மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இக்கருத்தை அடிப்படையாக வைத்து, வீடுகள் கட்டிக் கொடுக்க முன்வரும் அமைப்பு, ஸகாத் பெற தகுதியான சிலரை நியமித்து அவர்கள் வீடுகட்டிக் கொடுப்பதற்குத் தேவையான பணத்தை தனவந்தர்களிடமிருந்து கடனாகப் பெற்று வீடுகளைக் கட்டுவார்கள்.
வீடுகளை கட்டி முடிந்ததும் அவற்றை தேவையானவர்களுக்கு நன்கொடையாகக் கொடுப்பார்கள். வீடு கட்டுவதற்கு பெற்ற கடனை திருப்பிக் கொடுப்பதற்கு கடனாளியின் பங்கை பயன்படுத்த முடியும்.5
இம்முறையில் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் பொழுது உடனடியாக வீட்டுக்கான உறுதிப் பத்திரங்களை கையளிக்காமல் சில காலம் தாமதப்படுத்திய பின் நன்கொடையாகக் கொடுக்கலாம். அதுவரை வீட்டை பயன்படுத்துவதற்காக மாத்திரம் அனுமதி கொடுத்துவிட்டு அவர்கள் விடயத்தில் திருப்திப்படும் பட்சத்தில் அவர்களுடைய பெயரில் வீட்டு உறுதிப் பத்திரத்தை பின்னர் மாற்றி எழுதிக் கொடுக்க முடியும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்!
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் – ஃபத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
——————
[1] وقال النووي رحمه الله : قد ذكرنا أن مذهبنا أنه لا يجوز إخراج القيمة في شيء من الزكوات وبه قال مالك وأحمد وداود، إلا أن مالكا جوز الدراهم عن الدنانير وعكسه، وقال أبو حنيفة: يجوز، فإن لزمه شاة فأخرج عنها دراهم بقيمتها أو أخرج عنها ما له قيمة عنده كالكلب والثياب. (باب زكاة الغنم – المجموع شرح المهذب)
[2] المشهور الجديد يخرج من القيمة ولا يجوز أن يخرج من عين العرض والثاني يجب الاخراج من العين ولا يجوز من القيمة والثالث يتخير بينهما فلو اشترى بمائتي درهم مائتي قفقز حنطة أو بمائة وقلنا يعتبر النصاب آخر الحول فقط وحال الحول وهي تساوي مائتي درهم فعلى المشهور عليه خمسة دراهم وعلى الثاني خمسة أقفزة وعلى الثالث يتخير بينهما. (فصل لا خلاف أن قدر زكاة التجارة ربع العشر كالنقد – روضة الطالبين)
وَيُخْرِجُ الزَّكَاةَ مِنْ قِيمَةِ الْعُرُوضِ دُونَ عَيْنِهَا. وَهَذَا أَحَدُ قَوْلَيْ الشَّافِعِيِّ. وَقَالَ فِي آخَرَ: هُوَ مُخَيَّرٌ بَيْنَ الْإِخْرَاجِ مِنْ قِيمَتِهَا، وَبَيْنَ الْإِخْرَاجِ مِنْ عَيْنِهَا. وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ. لِأَنَّهَا مَالٌ تَجِبُ فِيهِ الزَّكَاةُ، فَجَازَ إخْرَاجُهَا مِنْ عَيْنِهِ، كَسَائِرِ الْأَمْوَالِ. وَلَنَا أَنَّ النِّصَابَ مُعْتَبَرٌ بِالْقِيمَةِ؛ فَكَانَتْ الزَّكَاةُ مِنْهَا كَالْعَيْنِ فِي سَائِرِ الْأَمْوَالِ، وَلَا نُسَلِّمُ أَنَّ الزَّكَاةَ تَجِبُ فِي الْمَالِ، وَإِنَّمَا وَجَبَتْ فِي قِيمَتِهِ. (فَصْلُ يُخْرِجُ الزَّكَاةَ مِنْ قِيمَةِ الْعُرُوضِ دُونَ عَيْنِهَا – المغني لإبن قدامة)
[3] وعن حماس بكسر الحاء المهملة وتخفيف الميم وآخره سين مهملة وَكَانَ يَبِيعُ الْأُدُمَ قَالَ قَالَ لِي عُمَرُ بْنُ الْخَطَّابِ يَا حماس اد زكاة مالك فقلت مالي مَالٌ إنَّمَا أَبِيعُ الْأُدُمَ قَالَ قَوِّمْهُ ثُمَّ أَدِّ زَكَاتَهُ رواه الشافعي وسعيد بن منصور الحافظ في مسنده والبيهقي (كتاب الذهب والفضة – كتاب الزكاة – المجموع)
[4] (ويجوز دفع القيم في الزكاة) أداء القيمة مكان المنصوص عليه في الزكوات، والصدقات والعشور والكفارات جائز، لا على أن القيمة بدل عن الواجب؛ لأن المصير إلى البدل إنما يجوز عند عدم القدرة على الأصل، وأداء القيمة مع وجود عين المنصوص عليه في ملكه جائز، فكان الواجب عندنا أحدهما، إما العين أو القيمة”، لكن الزكاة عند السادة الحنفية قربة وجهها دفع الحاجة عن الفقير. [العناية شرح الهداية 2 /192]
[5] وَمِنْهُ اسْتَدَانَ لِنَحْوِ عِمَارَةِ مَسْجِدٍ وَقِرَى ضَيْفٍ ثُمَّ اخْتَلَفُوا فَأَلْحَقَهُ كَثِيرُونَ بِمَنْ اسْتَدَانَ لِنَفْسِهِ، وَرَجَّحَهُ جَمْعٌ مُتَأَخِّرُونَ وَآخَرُونَ بِمَنْ اسْتَدَانَ لِإِصْلَاحِ ذَاتِ الْبَيْنِ إلَّا إنْ غَنِيَ بِنَقْدٍ، وَرَجَّحَهُ بَعْضُهُمْ، وَلَوْ رَجَّحَ أَنَّهُ لَا أَثَرَ لِغِنَاهُ بِالنَّقْدِ أَيْضًا حَمْلًا عَلَى هَذِهِ الْمَكْرُمَةِ الْعَامِّ نَفْعُهَا لَمْ يَبْعُدْ، وَوَاضِحٌ أَنَّ الْكَلَامَ فِيمَنْ لَمْ يَمْلِكْ حِصَّتَهُ قَبْلَ مَوْتِهِ لِكَوْنِهِ مِنْ الْمَحْصُورِينَ الَّذِينَ مَلَكُوهَا. (كِتَابُ قَسْمِ الصَّدَقَاتِ – تحفة المحتاج)