Researched Fatwa
‘அக்ரஹாரா’ காப்புறுதி முறை இஸ்லாமிய ஷரீஆவில் அங்கீகரிக்கப்பட்டதா?
Question
Fatwa
005/ACJU/F/2006
2006.04.19
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
தற்கால காப்புறுதி முறைகளில் பெரும்பாலும் இஸ்லாமிய ஷரீஆ தடைசெய்துள்ள சூதாட்டம், வட்டி, ஏமாற்று போன்றவை இடம்பெறுகின்றன. உதாரணமாக,
சூதாட்டம்:
ஒரு தரப்பினர் கொடுக்கும் தொகை அறியப்பட்டதாகவும், அடுத்த தரப்பினர் கொடுக்கும் தொகை அறியப்படாததாகவும் இருப்பதும், ஒரு தரப்பினர் கொடுத்த தொகை முழுமையாக வீணடிக்கப்பட்டு அல்லது அத்தரப்பினர் கொடுத்த தொகையை விட மேலதிகமான ஒரு தொகையைப் பெறும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றமையும் போன்ற கொடுக்கல் வாங்கல் முறைகள் சூதாட்ட வகையைச் சார்ந்தவையாகும்.
வட்டி:
காப்புறுதி நிறுவனங்களில் ஒரு தொகைப் பணத்தைக் கொடுக்கும் ஒருவர், அதனை மீட்டெடுக்கும் சமயம் தான் கொடுத்ததை விட மேலதிகமாக அவரோ, அவரது அனந்தரக்காரர்களோ கேட்டுப்பெற்றுக் கொள்வதும், அல்லது காப்புறுதி நிதிக்காக ஒருவர் செலுத்தும் பணம் வட்டியினாலான வங்கிகளில் அல்லது முதலீட்டு நிறுவனங்களில் வைப்பிலிடப்பட்டு அப்பணத்துக்கான வட்டியில் ஒரு தொகையை காப்புறுதிக்காரர் மீளப்பெறுவதும் வட்டியைச் சார்ந்ததாகும்.
ஏமாற்று:
ஒருவர் தான் செலுத்தும் பணம் எப்போது, எப்படி, எவ்வளவு திரும்பக் கிடைக்கும் என்று அறியப்படாத நிலையிலும், மரணம், திடீர் விபத்து போன்ற எதிர்பாராத விடயங்களிலும் இரு சாராரும் ஒப்பந்தம் செய்கின்றமை ஏமாற்று வகையைச் சார்ந்ததாகும்.
எனவே, மேற்படி ஷரீஆ தடை செய்துள்ள பல விடயங்கள் தாங்கள் குறிப்பிடும் ‘அக்ரஹாரா’ காப்புறுதி முறைகளிலும் உள்ளதால் இதுவும் ஹராமான காப்புறுதி வகையைச் சார்ந்ததாகும்.
அத்துடன், ஒருவருக்கு முழு உரிமையுள்ள ஒரு பொருளில் (ஊதியத்தில்) அவரது பூரண விருப்பமில்லாது, கட்டாயப்படுத்தி, ஒரு சிறு தொகையையேனும் எடுப்பது அல்லது குறைப்பது மற்றுமொருவருக்கோ, ஒரு நிர்வாகத்துக்கோ அதிகாரமற்ற விடயயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கூட்டுறவுக் காப்புறுதி’ என்னும் அமைப்பிலான காப்புறுதி முறைமை இஸ்லாமிய ஷரீஆவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது பலரும் ஒன்றிணைந்து, ஒரு குறித்த தொகையை அன்பளிப்பு, அல்லது ‘வக்ஃப்’ முறையில் சேகரித்து, அத்தொகையில் இருந்து அவர்களுக்குள் எவராவது பாதிக்கப்படும் சமயம் அவர்களது பூரண மன விருப்பத்துடன் பாதிக்கப்பட்டவருக்கு செலவு செய்தல் அல்லது உதவுதல் என்பதாகும்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.
அஷ்-ஷைக் டப்ளியு. தீனுல் ஹஸன்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

