ACJU/FTW/2017/06-283
2017.02.16 (1438.05.18)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
தூண்கள் குறுக்கிடும் ஸப்புகளில் மஃமூம்கள் நின்று தொழும் விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேற்றுமை உள்ளது. பின்வரும் ஹதீஸ்களை ஆதாரமாக வைத்து மஸ்ஜிதில் இடநெருக்கடி இல்லாத பொழுது அல்லது தொழுகைக்காக வரக்கூடியவர்களின் தொகை குறைவாக இருக்கும் நிலையில், தூண்கள் குறுக்கிடும் ஸப்புகளில் மஃமூம்கள் நின்று தொழுவது மக்ரூஹ் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ : (كُنَّا نُنْهَى أَنْ نَصُفَّ بَيْنَ السَّوَارِي عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنُطْرَدُ عَنْهَا طَرْدًا)1
“முஆவியா இப்னு குர்ரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் நாம் தூண்களுக்கு மத்தியில் ஸப்புகள் அமைப்பதை விட்டும் தடுக்கப்பட்டோம். மேலும், அதை விட்டும் நாம் விரட்டப்பட்டோம். “
عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ مَحْمُودٍ قَالَ : صَلَّيْنَا خَلْفَ أَمِيرٍ مِنْ الْأُمَرَاءِ ، فَاضْطَرَّنَا النَّاسُ فَصَلَّيْنَا بَيْنَ السَّارِيَتَيْنِ، فَلَمَّا صَلَّيْنَا قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ : (كُنَّا نَتَّقِي هَذَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ)2
“அப்துல் ஹமீத் இப்னு மஹ்மூத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள். நாம் ஓர் அமீருக்குப் பின்னால் தொழுதோம். அப்போது மக்கள் எம்மை நெருக்கியதன் காரணமாக நாம் தூண்களுக்கு மத்தியில் தொழுதோம். இப்படியாக நாம் அவ்விடத்தில் தொழுத போது அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நாம் இதை விட்டும் தவிர்ப்பவர்களாக இருந்தோம்’ என்று கூறினார்கள்.”
அதேவேளை மற்றும் சில அறிஞர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவுக்குள் இரு தூண்களுக்கு மத்தியில் தொழுத ஹதீஸை ஆதாரமாக வைத்து தூண்கள் குறுக்கிடும் ஸப்புகளில் மஃமூம்கள் நின்று தொழுவது கூடுமென கூறியுள்ளனர்.3
நாம் இவ்விரு கருத்துக்களையும் ஆராய்ந்த வகையில், பின்வரும் ஆலோசனைகளை வழங்குகின்றோம்.
- தூண்கள் குறுக்கிடாதவாறு ஸப்புகளை அமைத்துக்கொள்வது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.
- புதிதாக மஸ்ஜித்கள் கட்டப்படும் பொழுது முடியுமான அளவு ஸப்புகளில் தூண்கள் குறுக்கிடாதவாறு அமைத்துக்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.
- அவ்வாறு அமைக்கும் பொழுது இரு ஸப்புகளுக்கும் மத்தியில் உள்ள இடைவெளி சுமார் மூன்று முழங்களிலிருந்து நான்கு முழங்களை அடையாத அளவு இருப்பது அவசியமாகும். அதையும் விட இடைவெளியை அதிகமாக்கினால் ஜமாஅத்தின் நன்மை கிடைக்க மாட்டாது.4
- மஸ்ஜித் விசாலமற்றதாக இருக்கும் பொழுது அல்லது மஸ்ஜிதுக்கு சமுகமளிப்போரின் தொகை அதிகமாகவும் இருக்கும் சந்தர்ப்பங்களில் ஸப்புகளுக்கு இடையில் உள்ள தூண்களுக்கு மத்தியில் தொழுவதற்கும் அனுமதியுள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்!
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எம். ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
————————————-
[1] بَابُ الصَّلَاةِ بَيْنَ السَّوَارِي فِي الصَّفِّ – كِتَابُ إِقَامَةِ الصَّلَاةِ، وَالسُّنَّةُ فِيهَا – سنن ابن ماجه
[2] بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الصَّفِّ بَيْنَ السَّوَارِي – أَبْوَابُ الصَّلَاةِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – سنن الترمذي
[3] قال الإمام النووي رحمه الله في شرح صحيح مسلم وفيه جواز الصلاة بحضرة الأساطين فأما الصلاة إليها فمستحبة لكن الأفضل أن لا يصمد إليها بل يجعلها عن يمينه أو شماله كما سبق وأما الصلاة بين الأساطين فلا كراهة فيها عندنا واختلف قول مالك في كراهتها إذا لم يكن عذر وسبب الكراهة عنده انه يقطع الصف.
[4] ومعنى اتصالها أن يقف رجل أو صف في آخر البناء الذي فيه الإمام ورجل أو صف في أول البناء الذي فيه المأموم بحيث لا يكون بينهما أكثر من ثلاثة أذرع والثلاث للتقريب فلو زاد ما لا يتبين في الحس بلا ذرع لم يضر وهذا القدر هو المشروع بين الصفين. (روضة الطالبن – فرع إذا دخل رجل والجماعة في الصلاة كره أن يقف منفرد)