Researched Fatwa
அபூ தாலிப் அவர்களுக்கு ‘ரழியல்லாஹு அன்ஹு’ எனக் கூறுதல் பற்றிய மார்க்கத் தீர்ப்பு
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூ தாலிப் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் ஆரம்ப வருடங்களில் பொதுவாக அவர்களது பிரச்சாரத்திற்கு துணையாகவும் பாதுகாப்பாகவும் தனது மரணம் வரை இருந்துள்ளார்.
அவருடைய மரணத்தின் காரணத்தினாலும், அதே ஆண்டில் வபாத்தாகிய நபிகளாரின் மனைவி அன்னை கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் பிரிவின் காரணத்தினாலும் நபியவர்கள் மிகவும் கவலையுற்றார்கள். அதன் காரணமாகவே நுபுவ்வத்தின் 10 ஆம் ஆண்டு கவலை ஆண்டு (ஆமுல் ஹுஸ்ன்) என பெயர் சூட்டி அழைக்கப்பட்டது.
இவ்வளவு தூரம் நபிகளாரின் தஃவாப் பணிக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும்; அபூ தாலிப் செயல்பட்டாலும் அவர் முஸ்லிமாக மரணிக்கவில்லை என்பதற்கு அல்-குர்ஆனிலும், சஹீஹான ஹதீஸ்களிலும் பல ஆதாரங்கள் இருப்பதனால் அவருக்கு சஹாபிகளுக்குக் கூறுவது போன்று ‘ரழியல்லாஹு அன்ஹு’ என்று சொல்வது கூடாது. அவர் ஈமான் கொள்ளவில்லை என்பதற்கான பல ஆதாரங்களில் சஹீஹுல் புகாரியில் 1360 ஆம் இலக்கத்தையுடைய பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அபூ தாலிபிற்கு மரணம் நெருங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அபூ ஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும் அவரிடமிருக்கக் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என் தந்தையின் சகோதரரே! ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ எனக் கலிமாவைக் கூறுங்கள். அதைக் கொண்டு நான் அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக சாட்சி கூறுவேன் எனக் கூறினார்கள். அபூ ஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும் அபூ தாலிபே! அப்துல் முத்தலிப் (அபூ தாலிபின் தந்தை) உடைய மார்க்கத்தைப் புறக்கணிக்கின்றீரா எனக் கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களோ அதனை (அக்கலிமாவை) அவருக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்க அவர்கள் இருவரும் அவ்வார்த்தையை கூறிக்கொண்டே இருந்தார்கள். அபூ தாலிப் அவர்கள் அவர்களிடம் பேசியதில் இறுதியாக அவர் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருப்பதாக கூறினார். அவர் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று கூற மறுத்து விட்டார். அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக ‘உங்களை விட்டும் (உங்களுக்கு பாவமன்னிப்பு தேடுவதை விட்டும்) நான் தடுக்கப்படாதவரை நிச்சயமாக நான் உங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவேன்.’ எனக் கூறினார்கள். எனவே அல்லாஹ் இது விடயத்தில் பின்வரும் வசனத்தை இறக்கிவைத்தான்:
‘அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக நரக வாசிகள்தாம் என்று இவர்களுக்கு (நபிக்கும் விசுவாசிகளுக்கும்) தெளிவானதன் பின்னர் இணைவைப்போருக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ விசுவாசிகளுக்கோ ஆகுமானதல்ல’. (09: 113)
மேலும், அபூ தாலிப் அவரது மரணத் தருவாயில் ஈமான் கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என சிலர் கருதுகின்றனர். எனினும், அதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. இக்கருத்திற்காக அவர்கள் முன்வைக்கும் அறிவிப்புகள், சம்பவங்கள் அனைத்தும் பலவீனமானவையும், ஆதாரமற்றவையுமாகும். அபூ தாலிப் நரகவாதியே, எனினும் அவருக்கு நரக வேதனை குறைக்கப்படும் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளதை அடிப்படையாகவைத்து அவருக்கு ‘ரழியல்லாஹு அன்ஹு’ எனக் கூறலாம் என ஒரு சாரார் சொல்வதும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதல்ல.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.