ஒரு தொழுகை அதன் குறிப்பிட்ட ரக்அத்களை விட அதிகமாக தொழுவிக்கப்படுவது தொடர்பிலான சில சந்தேகங்களுக்கு தெளிவு
Question
Fatwa
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
இது போன்றதொரு சம்பவம் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களது வாழ்விலும் இடம்பெற்றுள்ளது. இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டு சஹீஹுல் புகாரி, ஸஹீஹு முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் பதியப்பட்டுள்ள அச்சம்பவம் பின்வருமாறு:
‘நிச்சயமாக நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் சஹாபிகளுக்கு (ஒரு முறை) லுஹ்ர் தொழுகையை ஐந்து ரக்அத்களாகத் தொழுவித்துவிட்டார்கள். தொழுது முடிந்த பின் அவர்களிடம் தொழுகையில் (அதன் ரத்அத்களின் எண்ணிக்கையில்) அதிகப்படுத்தப்பட்டு விட்டதா என வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் ஏன் அப்படிக் கேட்கின்றீர்கள் எனக் கேட்டார்கள். (அதற்கு சஹாபிகள்) நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுதீர்கள் எனக் கூறவே, உடனே நபியவர்கள் தனது இரு கால்களையும் மடித்து, கிப்லாவை முன்னோக்கி அமர்ந்து (மறதிக்காக) இரண்டு ஸுஜூத்களைச் செய்தார்கள்.’
இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து இஸ்லாமிய அறிஞர்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் இயல்பாகவே ஏற்படும் சில சந்தேகங்களுக்குப் பின்வருமாறு தீர்ப்புக் கூறியுள்ளனர்:
- நான்கு ரக்அத்களைக் கொண்ட ஒரு தொழுகை ஐந்து ரக்அத்களாகத் தொழப்பட்டிருப்பது தொழுது முடிந்த பின் தெரிய வந்தால் அதனைத் திருப்பித் தொழ வேண்டியதில்லை.
- இந்நிலையில் மறதிக்கான ஸுஜூத் (ஸுஜூதுஸ் ஸஹ்வ்) செய்வது ஸுன்னத்தாகும். அதனை மாத்திரம் செய்தால் போதுமானதாகும்.
- இமாம் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிகமாக ஒரு ரக்அத்தை தொழப் போகின்றார் என்பதை உறுதியாக அறிந்த மஃமூம்கள் தொடர்ந்தும் அவரைப் பின்பற்ற முடியாது. மாறாக அவர்கள் இமாமைப் பிரிந்து தனித்து தமது தொழுகையை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படித் தெரிந்த நிலையில் இமாமைத் தொடர்ந்தும் பின்பற்றியவர்கள் அத்தொழுகையைத் திரும்பவும் தொழு வேண்டும். ஆனால் சந்தேகத்துடன், அல்லது மறதியாக தொடர்ந்தும் தொழுதவர்கள் மீட்டத் தேவையில்லை.
- இமாமின் தவறை அவருக்கு உணர்த்தும் நோக்கில் ‘சுப்ஹானல்லாஹ்’ என்று சொன்னவர்களும், அப்படிச் சொல்லாதவர்களும் இம்முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

