Researched Fatwa
ஓர் உணவுப் பொருளின் ஹலால் தன்மையைத் தீர்மானித்தல்
Question
Fatwa
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
புனித இஸ்லாம் ஒரு பொருளை அசுத்தம் எனக் கூறியிருப்பின் அதனைத் தவிர்ந்து கொள்வது கடமையாகும். அசுத்தம் என்பது மனித உடல், உள்ளம், சூழல் போன்றவற்றிற்கு கெடுதியை ஏற்படுத்தும் ஒன்றாகும். எனவே, அசுத்தமான அல்லது அசுத்தமடைந்த பொருளை உள்ளடக்கிய உணவு வகைகள், மருந்து வகைகள் போன்றவற்றை இயன்றவரை ஒருவர் தவிர்ந்து கொள்ள வேண்டும். நிர்ப்பந்த நிலையிலேயன்றி அதனைப் பாவிக்கலாகாது. அத்துடன், சுத்தமான மூலப் பொருட்களில் தயாரிக்கப்பட்டவற்றைத் தேடுவதும், அவை இல்லாத பட்சத்தில் அவைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளைச் செய்வதும் ஒரு சமூகப் பொறுப்பாகும்.
அதே வேளை ஒரு பொருளில் அசுத்தம் இருக்கிறதா என சந்தேகத்திலும், ஊகத்திலும் துருவித்துருவி ஆராய வேண்டியதில்லை.
இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது:
‘தபூக் யுத்தத்தின் போது நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒரு வெண்ணெய்க் கட்டி கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. அப்போது நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு கத்தியைக் கொண்டு வருமாறு கூறி, அவர்களிடம் கத்தி கொண்டு வந்து கொடுக்கப்பட்டதும் ‘பிஸ்மில்லாஹ்’ சொல்லி அதனைத் துண்டு துண்டாக வெட்டினார்கள்’ என்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஸுனனு அபீ தாவூத் – ஹதீஸ் எண் : 3819)
ஹலால் அத்தாட்சிப்படுத்தல் குழு பொது மக்களுக்கு உணவுப் பொருட்களின் ஹலால் தன்மையை உறுதிப்படுத்தி அத்தாட்சிப்படுத்தும் பொறுப்பை சுமந்ததாகும். எனவே ஒரு பொருளை ஹலால் என அத்தாட்சிப்படுத்தி உத்தரவாதம் அளிக்க அப்பொருளையும் மூலப் பொருட்களையும் பகுப்பாய்வு செய்து பார்ப்பது அவசியமாகும். இறைச்சி போன்றவை முறையாக அறுத்துப் பெறப்பட்டதா என்பதை உறுதிசெய்து கொள்வதும் கடமையாகும்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

