Researched Fatwa
காணியை விவசாயம் செய்வதற்குக் குத்தகைக்குக் கொடுத்தல்
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
நெற்காணியுடையவர் தனது காணியைக் குறிப்பிட்ட ஒரு நபருக்கு, குறிப்பிட்ட ஒரு காலத்திற்காக, குறிப்பிட்ட தொகைப் பணம் அல்லது பெறுமதியுள்ள ஏதேனும் பொருளைச் செலுத்திக் குத்தகைக்குக் கொடுப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும். இம்முறைக்கு அறபியில் ‘அல்-இஜாரஹ்’ என்றும், பூமி போன்றவைகளுக்கு ‘கிராஉ’ என்றும் சொல்லப்படும்.
விவசாயக் காணியைக் குத்தகைக்குக் கொடுப்பதில், பெரும்பாலான மார்க்க அறிஞர்களிடம் அது ஆகுமான செயல் என்பதில் கருத்து ஒற்றுமை காணப்படுகிறது.
இது பற்றித் தெளிவாக ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஸஹீஹுல் புகாரி மற்றும் ஸஹீஹு முஸ்லிம் போன்ற கிரந்தங்களின் குத்தகையுடைய பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூலிக்குக் கொடுக்கும் பொழுது, கூலிக்கு எடுப்பவருக்கும் கூலிக்குக் கொடுப்பவருக்கும் மத்தியில் பொருந்திய கூலித்தெகையை, கூலிக்கு எடுப்பவர் தான் இலாபம் அடைந்தாலும் அல்லது நஷ்டம் ஏற்பட்டாலும் காணியுடையவருக்கு கொடுப்பது கட்டாயமாகும்.
இது இஸ்லாத்தில் அனுமதியளிக்கப்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கல் முறைமையாகும். இது வட்டி முறைமையிலான ஒன்றாகக் கணிக்கப்பட மாட்டாது.
என்றாலும், முடியுமானவர் தனது காணியைப் பிறருக்கு விவசாயம் செய்வதற்காக, நன்மையை நாடி, இலவசமாகக் கொடுப்பதே மிகவும் சிறந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு ஹதீஸில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
«لَأَنْ يَمْنَحَ الرَّجُلُ أَخَاهُ أَرْضَهُ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا خَرْجًا مَعْلُومًا» (صحيح مسلم)
‘ஒரு மனிதர் தனது நிலத்தைப் பிற சகோதரனுக்கு இலவசமாகக் கொடுத்து (உதவி செய்வது) விடுவது, அதற்காக குறிப்பிட்ட தொகையைக் கூலியாகப் பெறுவதை விடச் சிறந்தது.’ நூல்: ஸஹீஹு முஸ்லிம் – ஹதீஸ் எண் : 1550
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.