ஜமாஅத்துல் முஸ்லிமீன் அமைப்பு

FATWA # 022/ACJU/ F/2009

Question

ஜமாஅத்துல் முஸ்லிமீன் அமைப்பு பற்றி 2009/04/18 ஆந் தேதியிடப்பட்டு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஜமாஅத்துல் முஸ்லிமீன் அமைப்பின் தலைமையகம் பாகிஸ்தானில் உள்ளது. உலகின் சில நாடுகளில் அது தனது கிளைகளை அமைத்து இயங்கி வருகின்து. அதன் இலங்கைக் கிளை உமர் அலி பின் முஹம்மது ஹுஸைன் மௌலவி என்பவரின் தலைமையின் கீழ் புத்தளம் ஏத்தாலை பிரதேசத்தில் இயங்கி வருகின்றது.

ஜமாஅத்துல் முஸ்லிமீன் அமைப்பு பற்றி பாகிஸ்தானிலுள்ள புகழ்பெற்ற ஷரீஆ கலாநிலையம் ஜாமிஅத்துல் உலூமில் இஸ்லாமிய்யாவின் ஃபத்வா நிலையம் ஹிஜ்ரி 1417.05.03 அன்று ஒரு விரிவான ஃபத்வாவை வழங்கியுள்ளது.

ஜாமிஅத்துல் உலூமில் இஸ்லாமிய்யாவின் ஃபத்வா நிலையத்தின் பத்வாவில் ‘இப்பிரிவினரின் தலைவர் மஸ்ஊத் அஹ்மத் என்பவர் தனது ‘ஜமாஅத்துல் முஸ்லிமீன் அப்னீ தஃவதே வ தஹ்ரீக் கே ஆயீனே மே’ என்ற தனது நூலில் ரஸூலுல்லாஹி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்த மார்க்கத்தை தனது சமூகத்திடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்களோ, அவர்களின் மரணத்துக்குப் பிறகு சில நூற்றாண்டுகள் வரை அதே இஸ்லாம் அதே மார்க்கம் இருந்தது. அதன் பின் தனது அடிப்படைத் தோற்றத்தை விட்டும் மாறுபட்ட தோற்றத்தைப் பெற்றுவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்’ எனக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. மேலும் அம் மார்கத் தீர்ப்பில் ‘ஜமாஅத்துல் முஸ்லிமீன் தமது தவறான கொள்கைகளின் அடிப்படையில் அஹ்லுஸ் ஸுன்னஹ் வல் ஜமாஅத்தை விட்டும் வெளியேறிய, வழிகெட்ட பிரிவினராவர்’ என்றும் உறுதியாக கூறப்பட்டுள்ளது.

ஜமாஅத்துல் முஸ்லிமீன் இலங்கைக் கிளையின் அமீர் உமர் அலி பின் முஹம்மது ஹுஸைன் மௌலவி என்பவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு அனுப்பிவைத்துள்ள 2006.07.22 திகதியிடப்பட்ட கடிதத்தில் ‘பாகிஸ்தானை தலைமையகமாகக் கொண்டதுமான ஜமாஅத்துல் முஸ்லிமீனாகிய நாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஜமாஅத்துல் முஸ்லிமீன் விடயத்தில் பாகிஸ்தானிலுள்ள ஜாமிஅத்துல் உலூமில் இஸ்லாமிய்யாவின் ஃபத்வாக் நிலையம் வெளியிட்டுள்ள ‘ஜமாஅத்துல் முஸ்லிமீன் தமது தவரான கொள்கைகளின் அடிப்படையில் அஹ்லுஸ் ஸுன்னஹ் வல் ஜமாஅத்தை விட்டும் வெளியேறிய, வழிகெட்ட பிரிவினராவர்’ என்ற தீர்ப்பே இலங்கையிலுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீனுக்கும் பொருந்தும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கருதுகின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.