தராவீஹ் தொழுபவரைப் பின்பற்றி இஷாஃ தொழுகையை ஜமாஅத்தாக தொழுதல்
Question
Fatwa
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
கடமையான ஜவேளைத் தொழுகைகளை அவற்றின் குறிப்பிட்ட நேரங்களில் ஜமாஅத்தாக நிறைவேற்றுவதே மிக ஏற்றமானது என பல ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
நப்ல் தொழுபவரைப் பின்பற்றி கடமையான இஷாஃ தொழுகையை ஜமாஅத்தாக தொழும் விடயத்தில் இமாம்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. ஷாபிஈ, ஹன்பலி மத்ஹப்களில் இவ்வாறு ஜமாஅத்தாக தொழுவது கூடும்.
ஹழ்ரத் முஆத் (ரழியல்லாஹு அன்ஹு) நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பின்பற்றி இஷாஃவை தொழுதுவிட்டு தனது கூட்டத்தாருக்கு அவர்களின் இடத்தில் இஷாஃவை தொழவைப்பார்கள். இது சஹீஹ் அல்-புகாரியில் காணப்படுகிறது. முஆத் (ரழியல்லாஹு அன்ஹு) இரண்டாவது தடவையாக இஷாஃவை தொழுதது அவர்களுக்கு நப்லாகும். நப்ல் தொழுபவரைப் பின்பற்றி அவர்களின் கூட்டத்தார் தங்களது கடமையான இஷாஃவைத் தொழுதுள்ளார்கள்.
ஆகவே, நப்ல் தொழக்கூடிய ஒருவரைப் பின்பற்றி பர்ழான தொழுகையொன்றை ஜமாஅத்தாக தொழ முடியும். இந்த வகையில் தராவீஹ் தொழுபவரைப் பின்பற்றி இஷாஃ தொழுகையை ஜமாஅத்தாக தொழலாம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

