நகையில் கலப்படம் செய்து முழுமையாக தங்கத்திலானது எனக் கூறி விற்றல்

FATWA # 05/ACJU/F/2010/0118

Question

நகையில் கலப்படம் செய்து முழுமையாக தங்கத்திலானது எனக் கூறி விற்றல் சம்பந்தமாக பத்வாக் கோரி 2009.07.09 ஆம் திகதியிட்டு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தங்க ஆபரணங்களை செய்து விற்கும் சமயத்தில் அவற்றின் உண்மை நிலையைக் கூறி விற்பதே இஸ்லாமிய முறையாகும். உண்மையான நிலையை மறைத்து விற்பது கூடாது.

‘நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஓர் உணவுக் குவியலைத் தாண்டிச் சென்றார்கள். தனது கையை அதில் நுழைவித்தார்கள். அவர்களின் விரல்களில் ஈரம் பட்டது. உணவுக்காரரே! இது என்ன? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அதில் மழை பெய்துவிட்டது என்று கூறினார். மக்கள் அதனைப் பார்ப்பதற்காக அதை மேலே வைத்திருக்கக் கூடாதா? யார் ஏமாற்றுகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்ல என்று நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்.’ (நூல்: சஹீஹு முஸ்லிம், பகுதி : ஈமான்)

ஆபரணத்தில் கலப்புகள் செய்து தரும்படி வேண்டும் நபருக்கு அவரின் விருப்பப்படி செய்து கொடுப்பதில் குற்றமேதும் கிடையாது. எனினும், அந்நபர் அந்த ஆபரணத்தைக் கலப்படமற்ற  தங்கத்தினாலான நகை என மற்றவர்களை ஏமாற்றி விற்கக்கூடியவர் என உறுதியாகத் தெரிந்தால் அவ்வாறு செய்து கொடுப்பது கூடாது. ஏனெனில், பாவத்திற்கு துணை புரிவதும் பாவமாகும். அல்லாஹ் தஆலா தனது அருள் மறையில் கூறுகிறான்:

‘நீங்கள் நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்.’ (05 : 02)

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.