பள்ளிக்குரிய காணியை அபகரித்தல்

FATWA #002/ACJU/F/2011/0132

Question

பள்ளிக்குரிய காணியை அபகரித்தல் சம்பந்தமாக பத்வாக் கோரி தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஒருவரது சொத்தை அவரது அனுமதியின்றி மற்றவர் சொந்தமாக்கிக் கொள்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். அல்லாஹு தஆலா குர் ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:

“உங்களது சொத்துக்களை உங்களுக்கு மத்தியில் அநியாயமாக உண்ண வேண்டாம்”  (அல்-பகரா, வசனம் : 188)

“யார் ஒருவரது நிலத்தில் இருந்து ஒரு சாண் அளவேனும் அநியாயமாக கைப்பற்றுகின்றாரோ கியாமத் நாளில் அவரது கழுத்தில் ஏழு பூமிகளை வலயமாக அணிவிக்கப்படும்.”

(ஆதாரம் : சஹீஹ் அல் புகாரி)

தனிப்பட்ட ஒருவருடைய சொத்தை அபகரிப்பதன் விளைவு இவ்வாறெனில் பள்ளிவாசல் போன்ற  பொது இடங்களின் சொத்துக்களை அபகரிப்பது அதை விட பாவமான செயலென்பதை யாரும் விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் பள்ளிவாசலின் சொத்து அல்லாஹ்வுக்காக வக்ப் செய்யப்பட்டதாகும்.  அதன் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. பள்ளிவாசல் சொத்தை எடுப்பது அல்லாஹ்வின் சொத்தை எடுப்பதற்கு சமமாகும்.

எனவே, உங்கள் கடிதத்தில் குறிப்பிடப் பட்டது போன்று குறித்த நிலம் பள்ளிவாயலுக்கு உரியது என்றால் அந்நிலத்தை வேறு யாரும் முறைப்படியன்றி சொந்தமாக்கிக் கொள்வதை ஷரீஅத் எவ்வகையிலும் அனுமதிக்கவில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.