Researched Fatwa
பால்குடி உறவு முறை தொடர்பான தெளிவு
Question
Fatwa
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!
இரண்டு வயதை அடையாத ஒரு குழந்தை தாய் அல்லாத ஒரு பெண்ணிடம் ஐந்து தடவைகள் பால் குடித்துவிட்டால் அக்குழந்தைக்கு அந்தப் பெண் பால் குடித்தாயாக மாறுவதுடன் அப்பெண்ணின் கணவன் பால் குடித் தகப்பனாகவும் அவ்விருவரின் பிள்ளைகள் பால் குடிச் சகோதரர்களாகவும் மாறிவிடுவாரகள்.
ஒரு தடவை குழந்தை பால் குடித்துவிட்டது என்பதை குழந்தை பால் குடித்துவிட்டு மார்பிலிருந்து தானாக, வாயை எடுத்துவிட்டால் அது ஒரு தடவையாக கணிக்கப்படும். இவ்வாறு ஐந்து தடவைகள் குழந்தை பால் குடித்துவிட்டால் மேற்கூறப்பட்ட அனைவரும், பால் குடி உறவுடையோராக மாறுவதுடன், அவர்களைத் திருமணம் முடிப்பதும் ஹராமாகிவிடும்.
இமாம் மாலிக், இமாம் அபூ ஹனீபா ரஹிமஹுல்லாஹ் போன்ற சில மார்க்க அறிஞர்கள் ஒரு தடவை பால் குடித்தாலும், அப்பால் குடி உறவுகள் மஹ்ரமாகுவதுடன், அவர்களைத் திருமனம் முடிப்பது ஹராமாகிவிடும் என்று கூறியுள்ளனர்.
உங்கள் கேள்வியிலிருந்து விளங்கப்படுவதானது நீங்கள் உங்கள் தாயின் சகோதரியிடம் (சின்னம்மாவிடம்) இரு தடவைகள் பால் குடித்துள்ளீர்கள் என்பதாகும்.
இதன் அடிப்படையில், இங்கு நீங்கள் தாயின் சகோதரியிடம் (சின்னம்மாவிடம்) இருந்து இரு தடவைகள் பால் குடித்த விடயம் உறுதியாக இருந்தாலும், ஐந்து தடவைகள் பால் குடிக்கவில்லை என்பதனால் நீங்கள் பால் குடித்த உங்கள் தாயின் சகோதரியினது (சின்னம்மாவின்) மகனை நீங்கள் திருமணம் முடிப்பது ஹராமாகாது.
என்றாலும், நாம் மேற்கூறியது போன்று சில மார்க்க அறிஞர்கள் ஒரு தடவை பால் குடித்து விட்டாலும் பால் குடி உறவு ஏற்பட்டு, திருமணம் முடிப்பது ஹராமாகிவிடும் என்று கூறியுள்ளதனால், உங்கள் தாயின் சகோதரியினது (சின்னம்மாவின்) மகனைத் திருமணம் முடிக்காமல் இருப்பது மிகவும் பேணுதலாகும். மேலும், இதனால் பின்னால் ஏற்படும் பல அசௌகரியங்களை விட்டும் தவிர்ந்துகொள்ள முடியும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.

