Researched Fatwa
மய்யித்தை அடிக்கழுவி மக்கள் பார்வைக்காக வைத்தல்
Question
Fatwa
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஒருவர் மரணித்து விட்டால் அவரது ஜனாஸாவை பார்வையிடச் சென்று அதன் இறுதிக் கடமைகளில் ஈடுபடுவது நபிவழியைச் சார்ந்ததாகும்.
ரஸுலுல்லாஹி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உஸ்மான் இப்னு மல்ஊன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை மய்யித்தாக இருக்கும் நிலையில் முத்தமிட்டார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) நூல்: ஸுனன் இப்னி மாஜஹ், பாடம்: மய்யித்தை முத்தமிடுதல்)
ஒரு மனிதன் உயிருடனிருக்கும் போது சுத்தமாக இருப்பது அவனது கடமையாகும். அவன் மரணித்து விட்டால் அவனை நஜிஸ்களிலிருந்து சுத்தம் செய்துவைப்பது மற்றவர்களினது கடமையாகும்.
ஜனாஸாவை குளிப்பாட்ட உரிய நேரம் வருமுன் சுத்தம் செய்து அடிக்கழுவி மக்கள் பார்வைக்கு வைப்பதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. என்றாலும் இதனை பள்ளிவாசல் வளாகத்தில் செய்யும் பொழுது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமலும், ஆண், பெண் கலப்பு இல்லாமலும், ஏனைய அடக்க வேண்டிய ஜனாஸாக்களுக்கு இடையூறு இல்லாமலும், ஜனாஸாவை அடக்கம் செய்வதை தக்க காரணமின்றி பிற்படுத்தாமலும் ஜனாஸாவை அடிக்கழுவி பள்ளிவாசல் வளாகத்தில் இதற்கென ஓதுக்கப்பட்ட பிரத்தியேகமான இடத்தில் மக்கள் பார்வைக்காக வைப்பது மார்க்கத்திற்கு முரணான விடயமாக தெரியவில்லை.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

