யோகாசனம்

FATWA # 021/ACJU/ F/2009

Question

யோகாசனம் தொடர்பான மார்க்கத் தீர்ப்பு கோரி 2008.07.03 ஆந் தேதியிட்டு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

இந்து மதத்தினரால் அறிமுகம் செய்யப்பட்ட யோகாசனம் எனும் உடற்பயிற்சி வெறுமனே உடற்பயிற்சி மாத்திரமன்றி இந்து மத சிந்தனைகளையும் உள்ளடக்கியதாகும் என்பதை அக்கலையின் தோற்றம், அதன் சிந்தனை ரீதியான இலக்கு, வித்தியாசமான அதன் அமர்வு வடிவங்களின் உட்கருத்து ஆகியவற்றை விரிவாகப் படிக்கும்போது விளங்கமுடிகின்றது. அவ்வாறு இந்த யோகாசனத்திற்கும் இந்து மத வழிப்பாட்டுக்கும் சம்பந்தம் இருப்பதனால் அதில் முஸ்லிம்கள் ஈடுபடுவது ஹராமாகும்.

அது மாத்திரமன்றி யோகாசனப் பயிற்சியில் அதன் இந்து மத சிந்தனையைக் கருத்தில்கொள்ளாமலும் அதனை நோக்கமாக வைக்காமலும் உடற்பயிற்சியாக மாத்திரம் கருதி ஈடுபடுவதையும் தவிர்ந்து கொள்ளவேண்டும். ஏனெனில், முஸ்லிம்களின் வணக்கவழிபாடுகளும் நடை உடை பழக்க வழக்கங்களும் முழுமையான இஸ்லாமிய சாயலில் இருக்க வேண்டும், இறை நிராகரிப்பாளர்களின் வணக்கவழிபாடுகளுக்கும் அவர்களது தனித்துவமான பழக்கங்களுக்கும் ஒப்பாகக் கூடாதென இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இதனடிப்படையிலேயே சூரியனை தெய்வமாக வழிபடுபவர்கள் அதனை வணங்கும் நேரங்களில் முஸ்லிம்கள் தமது தொழுகை வணக்கத்தில் ஈடுபடவேண்டாம் என பின்வரும் ஹதீஸ் மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது:

சூரியன் மறையும் நேரத்திலும் உதிக்கும் நேரத்திலும் தொழுவதை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடை செய்ததை தான் செவியுற்றதாக அப்துல்லாஹ்  (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: ஸஹீஹல் புகாரி. பாடம்: சுப்ஹ், அஸ்ருக்குப் பின் தவாப் செய்தல்.

மேலும், எமது இஸ்லாமிய மார்க்கம் முழுமையான ஒரு வாழ்க்கை நெறியாகும். அது மனிதனுக்கு ஆண்மீகத்துறையில் மாத்திரமன்றி அவனது உடல், உள்ளம், சிந்தனை, உணர்வு என சகல துறைகளிலும் முழுமையான சிறந்த வழிமுறைகளைக் காட்டியுள்ளது. இதனடிப்படையில் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாகவும் கட்டுப்பாடாகவும் வைத்திருப்பதற்கான பயனுள்ள இஸ்லாமிய வரையறைகளுக்குட்பட்ட உடற்பயிற்சிகளை அது அனுமதித்துள்ளது, நீச்சல், ஈட்டி எறிதல் போன்ற கலைகளைப் பயிலும்படி பல ஹதீஸ்களில் ஏவப்பட்டுள்ளதன் மூலம் உடற்பயிற்சிக் கலைகளில் இஸ்லாம் எந்தளவு ஆர்வமூட்டியுள்ளது என்பது புலனாகின்றது. இஸ்லாம் வலியுறுத்தியுள்ள மிக முக்கிய வணக்கமாகிய தொழுகையின் அசைவுகளிலும் அதன் வித்தியாசமான நிலைகளிலும் மனித உடலுக்கு சிறந்த பயன்கள் ஏற்படுகின்றன என்பது இன்று நிரூபனமாகியுள்ளது. ஆகையால் இஸ்லாம் அனுமதித்த, ஆர்வமூட்டிய வழிகளில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே எமது உடலுக்கு மாத்திரமன்றி ஈமானுக்கும் பாதுகாப்பானதாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.