‘வலீ’ (பொறுப்புதாரி) உடைய அனுமதி இல்லாமல் திருமண ஒப்பந்தம் செய்தல்
Question
Fatwa
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
இஸ்லாம் திருமணம் செய்து கொள்வதை ஒரு ஸுன்னத்தான காரியமாக கூறும் அதே வேளை, சமூகத்தில் தீமைகளும், ஒழுக்கயீனச் செயல்களும் அதன் மூலம் தடுக்கப்படுவதற்கும், நிறுத்தப்படுவதற்கும் வழிகாட்டுகின்றது. தீமைகளும், ஒழுக்கயீனச் செயற்களும் நிறுத்தப்படுவதற்கு இஸ்லாமியத் திருமணத்துடைய ஃபர்ழுகள் பேணப்படுவது அவசியமாகும். அதனுடைய ஃபர்ழுகளில் ‘வலீ’ எனும் பொறுப்புதாரியுடைய அனுமதியும் ஒன்றாகும். இதனை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகிறன:
‘இரண்டு நீதமான சாட்சிகளும், ‘வலீ’ (பொறுப்புதாரி) யும் இல்லாமல் திருமணம் இல்லை’ என்று நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (திர்மிதீ : ஹதீஸ் எண் : 1101)
‘எந்தப் பெண்ணாவது தனது ‘வலீ’ உடைய அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொண்டால் அவளது திருமணம் (பாத்தில்) செல்லுபடியற்றதாகும், அவளது திருமணம் (பாத்தில்) செல்லுபடியற்றதாகும், அவளது திருமணம் (பாத்தில்) செல்லுபடியற்றதாகும்’ என்று நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (திர்மிதீ : ஹதீஸ் எண் : 1102)
திருமணம் நிகழக் கூடிய மணாளி பருவமடைந்தவளாக, பருவமடையாதவளாக, கன்னிப் பெண்ணாக, விதவைப் பெண்ணாக எத்தகைய நிலையில் இருப்பினும் ‘வலீ’ யோ, அவரது அனுமதியோ இருப்பது அவசியமாகும்.
‘வலீ’ இல்லாமல் நிகழ்ந்த திருமண ஒப்பந்தம் செல்லுபடியற்றதாகும் என்ற சட்டத்தின் பிரகாரம் அவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்களை உடனடியாக பிரித்து வைப்பதுடன் மீண்டும் அவ்விருவருக்குமிடையில் திருமண ஒப்பந்தத்தை இரு சாட்சிகள் முன்னிலையில் ‘மஹ்ர்’ செலுத்தி ‘வலீ’ மூலம், அல்லது அவரது அனுமதியுடன் செய்துவைப்பது கடமையாகும்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

